
டெவலபர்களின் மேடையாக விளங்கும் கித்ஹப் (GitHub) ஆதிக்கத்தை மாற்றக்கூடிய ஐடியாவை, ஃபின்லாந்து தலைநகரில் இருந்து பெங்களூர் சகோதரர்கள் இருவர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஹெல்சின்கியில் வசிக்கும் அக்ஷய் மற்றும் அனிருத் ஒப்பிலியப்பன், ஜென் ஏஐ நுட்பம் சார்ந்த தானியங்கி ஏஜெண்ட்கள் செயல்படும் வேகத்திற்கு ஏற்ப டெவலப்பர்கள், கோடிங் சார்ந்த கூட்டு முயற்சியில் ஈடுபடும் விதமும் வேகமாக அமைந்திருக்கும் வகையில் ஓராண்டுக்கு முன் ’டேங்கிள்ட்’ (Tangled) எனும் நிறுவனத்தை துவக்கினர்.
“அடுத்த தலைமுறைக்கான சோஷியல் கோடிங் அல்லது டெவலபர்களின் கூட்டு முயற்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான எங்கள் முயற்சியாக டேங்கிள்ட் அமைகிறது,” என்று நிறுவன சி.இ.ஓ. அனிருத் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.ஷரத்த சர்மாவுடனான உரையாடலில் கூறினார்.

இந்த முயற்சி ஏற்கனவே 6,000க்கும் மேலான ரெபாசிடோர்கள் மற்றும் 8,000 க்கும் மேலான பயனாளிகளை ஈர்த்துள்ளது. கடந்த மாதம், விதை நிதிச்சுற்றில் 4.5 மில்லியன் டாலர் திரட்டியது. பைபவுண்டர் தலைமை வகித்த சுற்றில், பைன் கேபிடல் கிரிப்டோ, ஆண்ட்லோ மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
கோடிங் பாதை
மூன்றாண்டுகளுக்கு முன், அக்ஷய் ஒய் காம்பினேட்டர் ஆதரவு பெற்ற ஸ்டார்ட் அப்பில் பணியாற்ற லண்டன் சென்ற நிலையில், அனிருத் கிளவுட் சேவை நிறுவனத்தில் பணியாற்ற ஹெல்சின்கி சென்றார். இருவருக்குமே, டெவலபர்கள் கருவி ஸ்டார்ட் அப்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தது.
“டெவலபர் கருவிகள் தொடர்பான எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண டேங்கிள்ட்-ஐ துவக்கினோம், பின்னர் அதை பகிர்ந்து கொண்ட போது பலரும் எங்களை தொடர்பு கொண்டு இத்தகைய சேவையை தான் இது போன்ற மேடையில் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்,” என்கிறார் அக்ஷய்.
மொழி மாதிரிகள் வேகமாக கோட்களை உருவாக்கும் சூழலில், இந்த கோடை ஆய்வு செய்து, சீரான மென்பொருளை உருவாக்குவது தான் சுமையானது என்கிறார்.
”எனவே, மேலும் வேகமாகவும், சிறப்பாகவும் கோடிங்கை ஆய்வு செய்யும் கருவிகளை வழங்குவதாக,” கூறுகிறார்.
நல்ல மென்பொருளை உருவாக்குவதில், சிறந்த கோடிங் ஆய்வு முக்கியம் என்பதன் அடிப்படையில் இந்த சேவை அமைந்துள்ளது. மனித தலையீட்டுடன் நூற்றுக்கணக்கான மொழி மாதிரிகள் இணைந்து செயல்படும் சூழலிலும் இது முக்கியம்.
“மொழி மாதிரிகள் உருவாக்கும் கோடை மொழி மாதிரிகள் கொண்டு ஆய்வு செய்வதற்கு பலன் இருக்கிறது. ஆனால், மனித தலையீடு (human in the loop) கொண்டிருப்பது ஆர்கெஸ்ட்ராவை இயக்குபவர் இருப்பது போல,” என்கிறார் அக்ஷய்.
அமைப்பில் மனிதர்களின் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Gihub-க்கு மாற்று
இந்த சேவையின் மைய அம்சமாக, 2008ல் உருவாக்கப்பட்டு, பின்னர் மைக்ரோசாப்டால் கையகப்படுத்தப்பட்ட கித்ஹப்பால் பிரபலமாக்கப்பட்ட கோடிங் கூட்டு முயற்சி முறையை மறு சிந்தனை செய்யும் வகையில் அமைகிறது.
“கித்ஹப் 2008ல் அறிமுகமான போது, புல் ரிக்வஸ்ட் முறையை முன்னிலைப்படுத்தியது. அதன் பிறகு, இதில் மாற்றம் இல்லை. ஆனால் ஏஐ வருகையால் சூழல் மாறியுள்ளது. பெரிய அளவிலான கோட் கொண்ட நிலையில் இந்த முறை செயல்திறன் அற்றதாக விளங்குகிறது,” என்கிறார் சி.இ.ஓ.அனிருத்.
கித்ஹப் ஆய்வு முறைக்கு மாற்று வடிவங்கள் புல் ரிக்வஸ்ட் அடுக்குகள் கொண்டுள்ளன, கூகுள், மெட்டா போன்ற நிறுவனங்கள் இதை பயன்படுத்துகின்றன.
“எளிமையாகக் கூறுவது என்றால், இது டெவலபர்கள் மாற்றங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கு, ஆய்வை சீராக்குகிறது. இது மொழி மாதிரிகள் யுகத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. டேங்கிள்ட் சேவையில் இது முதன்மை அம்சமாக அமைந்துள்ளது,” என்று விளக்கம் தருகிறார்.
இப்போது ஏஐ ஆரம்ப கட்டத்தில் டெவல்பர்கள் ஏஜெண்ட்கள் கொண்டு கோட் எழுதுகின்றனர்.
ஏஜெண்ட்கள் முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் நிலையை நிறுவனர்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றில் அடிப்படை அம்சங்களில் அல்லாமல் ஆய்வு கட்டங்களில் மனித தலையீடு இருக்கும் என்கின்றனர்.
உலக பார்வை
இந்த விதை நிதி தங்கள் அணியை விரிவாக்க பயன்படும் என்கிறார் அனிருத்.
“பெரிய அளவிலான பிரச்சனை பரப்பை குறி வைப்பதால், எதிர்காலத்தில் சேவை மற்றும் உள்கட்டமைப்பில் அதிக தேவை இருக்கும்,” என்கிறார்.
நிறுவன செயல்பாட்டிலும் அதன் உலகளாவிய பார்வை பிரதிபலிக்கிறது. இந்நிறுவனம் ஃபின்லாந்தில் தலைமையகம் கொண்டுள்ள நிலையில், அக்ஷய் லண்டனில் இருக்க, பொறியாளர்கள் இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகளில் உள்ளனர்.
ஏஜெண்ட்கள் யுகத்திலும், கம்ப்யூட்டர் அமைப்புகளை அடிப்படை அளவில் புரிந்து கொள்ளும் தேவை மாறிவிடாது என்கிறார். ஏனெனில், அடிப்படைகளை புரிந்து கொள்ளும் ஒருவர் மேம்பட்ட கட்டங்களில் சிறந்த முடிவுகள் எடுக்க முடியும்.
“எனவே, இப்போதும் கோடிங் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்”:
தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan