+

ஐஐடி மெட்ராஸின் ‘Startup Shatam’ - 2வது ஆண்டும் 112 ஸ்டார்ட் அப்கள் உருவாக்கி சாதனை!

Indian Institute of Technology Madras ‘ஸ்டார்ட்அப் ஷதம்’ இலக்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டும் எட்டியது – தினமும் ஒரு காப்புரிமை என்பதும் தக்கவைக்கப்பட்டு சாதனை புரிந்தது. இந்தியாவின் முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான IIT Madras ஆழ்ந்த தொழில்நுட்ப (Deep-Tech) தொழில்முனைவுத் துறையில் முக

ஐஐடி மெட்ராஸ்; ‘ஸ்டார்ட்அப் ஷதம்’ (Startup Shatam) இலக்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டும் எட்டியது – தினமும் ஒரு காப்புரிமை என்பதும் தக்கவைக்கப்பட்டு சாதனை புரிந்தது.

இந்தியாவின் முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான IIT Madras ஆழ்ந்த தொழில்நுட்ப (Deep-Tech) தொழில்முனைவுத் துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ‘ஸ்டார்ட்அப் ஷதம்’ (Startup Shatam) என்ற இலக்கின் கீழ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகளை உருவாக்கியுள்ளது. அதன் முக்கிய அடைகாப்பகமாகச் செயல்படும் IITM Incubation Cell (IITMIC) மூலம் 2025–26 நிதியாண்டில் மொத்தம் 112 ஸ்டார்ட்அப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஐஐடி மெட்ராஸ் தனது கண்டுபிடிப்புத் திறனை வலுப்படுத்தும் வகையில் அதே ஆண்டில் 431 காப்புரிமைகளை (Patents) தாக்கல் செய்து ‘ஒரு நாளுக்கு ஒரு காப்புரிமை’ என்ற இலக்கை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Startup Shatam
2025–26 ஆம் ஆண்டு, ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்அப் சூழலுக்குப் பல முக்கிய “முதல் நிகழ்வுகளை” (Firsts) கொண்டுவந்தது. 13 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் IITMIC, இந்த ஆண்டு மொத்தம் 500-ஐ தாண்டி 567 ஸ்டார்ட்அப்’களைக் கொண்டுள்ள நிலையில், புதிய சாதனையை எட்டியுள்ளது.

இந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.74,100 கோடி (சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். இதில் இரண்டு ‘யூனிகார்ன்’ நிறுவனங்களும், பல இணைப்பு/கையகப்படுத்தல்கள் (M&A) இடம் பெற்றுள்ளன. இவ்வாண்டின் முக்கிய நிகழ்வாக, Ather Energy நிறுவனத்தின் IPO, IITMIC மூலம் உருவான முதல் பங்கு சந்தை பட்டியலிடப்பட்ட நிறுவனமாக அமைந்தது.

இந்தச் சாதனைகள், ஆழ்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவு, ஆராய்ச்சி பயன்பாடு மற்றும் காப்புரிமை உருவாக்கத்தில் ஐஐடி மெட்ராஸ் இந்தியாவில் முன்னணியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த இலக்குகளை 2023-இல் ‘ஒரு நாளுக்கு ஒரு காப்புரிமை’ என்றும், 2024-இல் ‘ஒரு ஆண்டுக்கு 100 ஸ்டார்ட்அப்'கள்’ என்றும் நிர்ணயித்த வி.காமகோடி உலக அறிவுசார் சொத்து தினம் (World IP Day) நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவர்களுக்கு இதை அறிவித்தார்.

“இந்த மைல்கற்கள், ஐஐடி மெட்ராஸ் முழுவதும் ஆழமாக வேரூன்றியுள்ள புத்தாக்கக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. எங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளியக தொழில்முனைவோர் ஆகியோர் இந்தியாவுக்கும் உலகிற்கும் சேவை செய்யக்கூடிய தொழில்நுட்பங்களையும் நிறுவனங்களையும் உருவாக்குகின்றனர். ஸ்டார்ட்அப் உருவாக்கமும் காப்புரிமை செயல்பாடும் இணைந்து, ஆராய்ச்சியை நடைமுறைப் பயன்பாட்டாக மாற்றுவதில் எங்களின் உறுதிப்பாட்டை காட்டுகின்றன,” என்று காமகோடி கூறினார்.
IITMadras Director

இது பற்றி மனு சந்தானம் கூறும்போது,

“இந்த தொடர்ச்சியான காப்புரிமை வளர்ச்சிக்கு வலுவான நிறுவனம் சார்ந்த அமைப்பு ஆதரவாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் யோசனைகளை பாதுகாக்கப்பட்ட மற்றும் பயன்பாட்டுக்குத் தயாரான தொழில்நுட்பங்களாக மாற்ற உதவும் முழுமையான அமைப்பை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ளது. ஆரம்ப கட்ட யோசனைகளிலிருந்து காப்புரிமை பதிவு வரை அனைத்திலும் IP Management Cell மற்றும் சட்ட நிபுணர்கள் இணைந்து செயல்படுகின்றனர். தொழில்நுட்ப மாற்ற அலுவலகத்தின் மூலம் வணிகமயமாக்கல் முயற்சிகளும் அதிகரித்துள்ளன,” என்றார்.

இந்த ஆண்டு ‘ஸ்டார்ட்அப் ஷதம்’ சாதனையின் முக்கிய அம்சமாக, உருவாகும் ஸ்டார்ட்அப்களின் தரமும் பரவலும் உயர்ந்துள்ளது. மொத்த ஸ்டார்ட்அப்’களில் 60% க்கும் மேற்பட்டவை இந்தியா முழுவதும் உள்ள வெளியக தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டவை. இது ’IITM for All’ என்ற நோக்கை பிரதிபலிக்கிறது.

“FY25-இல் 103 ஸ்டார்ட்அப்’கள் உருவாக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. FY26-இல் 1,200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்த நிலையில், 112 ஸ்டார்ட்அப்’களை தரத்தை பேணியவாறு உருவாக்கியுள்ளோம். தற்போது வருகிற ஸ்டார்ட்அப்’கள் வருவாய் ஈட்டும், முதலீடு பெற்ற, அனுபவமுள்ள தொழில்முனைவோரால் நடத்தப்படும் நிறுவனங்களாக இருக்கின்றன. இது ஒரு வணிக ரீதியாக முதிர்ந்த சூழலாக மாறிவருவதை காட்டுகிறது,” என்று தமஸ்வதி கோஷ் கூறினார்.

மோகன் சங்கர் சிவப்பிரகாசம் இந்த முன்னெடுப்புகள் பற்றிக் கூறும்போது,

“ஆழ்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்’களை வளர்ப்பதில் எங்கள் கவனம், உண்மையான உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்குகிறது. இந்த சாதனை, எங்கள் சூழலின் வலிமையையும் ஒத்துழைப்பையும் காட்டுகிறது. உலகளவில் வளரக்கூடிய நிறுவனங்களை உருவாக்க தொடர்ந்து நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்றார்.

புதிய ஸ்டார்ட்அப்கள் உற்பத்தி, ரோபோடிக்ஸ், வாகன தொழில், பேட்டரி, பாதுகாப்பு, விண்வெளி, AI, மெஷின் லெர்னிங், குவாண்டம் தொழில்நுட்பம், ஃபின்டெக், ஹெல்த்டெக், அக்ரிடெக், பயோடெக், காலநிலை தொழில்நுட்பம், IoT போன்ற பல துறைகளை உள்ளடக்கியவை.

IIT Madras StartUp Shatam

காப்புரிமை துறையில் AI/ML, குவாண்டம், செமிகொண்டக்டர், 5G/6G, ரோபோடிக்ஸ், மேம்பட்ட உற்பத்தி, நிலைத்த எரிசக்தி, ஃபோட்டானிக்ஸ், ப்ளாக்செயின், AR/VR, மருத்துவ படமெடுப்பு போன்ற துறைகளில் அதிக செயற்பாடு காணப்பட்டது.

இந்த சூழலில் உருவான முக்கிய ஸ்டார்ட்அப்’களில் Uniphore, MediBuddy, HyperVerge, Agnikul Cosmos, Planys Technologies, Detect Technologies போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை, ஐஐடி மெட்ராஸின் கல்வித் தரத்தையும் உயர்த்தியுள்ளது. இதன் பலனாக, தேசிய நிறுவன தரவரிசை அமைப்பு தேசிய தரநிலை சட்டக நிறுவனம் (National Institutional Ranking Framework - NIRF) தரவரிசையில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதல் இடத்தை பெற்றுள்ளது.

facebook twitter