
ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, கீமோதெரபி மருந்துகளை நேரடியாக புற்றுநோய் செல்களுக்குள் கொண்டு செல்லும் வகையில், துல்லியமான நானோ ஊசியைக் கண்டுபிடித்துள்ளனர். மார்பக புற்றுநோய் மருந்து விநியோகத்திற்கான இந்த நானோ ஊசிகள் பக்கவிளைவுகளைக் குறைத்து சிகிச்சையின் துல்லியத்தை மேம்படுத்தும், என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நானோ ஊசிகள் கண்டுபிடிப்பு
உலகளவில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிய சவாலாக உள்ள நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டாலும்கூட, அதற்கான சிகிச்சையே சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, நோயாளிகளை மேலும் பாதித்து விடுகிறது.
ஏனென்றால், கீமோதெரபி, கதிர்வீச்சு போன்ற சிகிச்சைகளில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், புற்றுநோய் அல்லாத திசுக்களுக்கும் தீங்கை விளைவித்து விடுகின்றன.
எனவே, பாதுகாப்பாக மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, ஆஸ்திரேலியாவின் மொனாஷ் மற்றும் டீக்கின் பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
அவர்களது இந்த ஆராய்ச்சியின் பலனாக தற்போது, புதிய நானோ ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நானோ ஆர்க்கியோசோம் (NAs) அடிப்படையிலான மருந்து உறைப்பூச்சு, சிலிக்கான் நானோ குழாய் (SiNT) அடிப்படையிலான உள்செல்லுலார் விநியோகத்தை இணைப்பதன் மூலம் ஆரோக்கியமான செல்களுக்கு ஏற்படும் சேதம் குறைகிறது. இதன்மூலம், புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான டாக்ஸோரூபிசினை நேரடியாக புற்றுநோய் செல்களுக்குள் செலுத்தி சிகிச்சை அளிக்க முடியும்.
இந்த நானோ ஊசிகள் பாதுகாப்பானதாக, பக்கவிளைவுகள் அற்றதாக இருப்பதுடன், சிகிச்சையின் செயல்திறனையும் மேம்படுத்துகின்றன.
பக்கவிளைவுகள் குறையும்
NAD-SiNTகள் (நானோஆர்க்கியோசோம்- டாக்ஸோரூபிகின்- சிலிக்கான் நானோகுழாய்கள்) MCF-7 மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராக வலுவானதாகவும், அதே நேரத்தில் ஆரோக்கியமான ஃபைப்ரோபிளாஸ்ட்களைக் பாதுகாப்பதாகவும் இருப்பதாக அவர்களது பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன.
மேலும், இந்த நானோ ஊசிகள், புற்றுநோய் செல்களில் செல் சுழற்சியைக் கட்டுப்படுத்தி நெக்ரோசிஸைத் தூண்டுகின்றன. இதன் மூலம் முக்கிய ஆஞ்சியோஜெனிக் சார்பு காரணிகள் குறைக்கப்பட்டு, புற்றுநோய் கட்டிகள் புதிய ரத்தநாளங்களை உருவாக்கும் செயல்முறையான ஆஞ்சியோஜெனீசிஸையும் கணிசமாக குறைப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள்
இது ரூபிசினைவிட 23 மடங்கு குறைவான தடுப்பு செறிவை (IC50) நிரூபித்திருப்பதாகவும், மிகக் குறைந்த அளவுகளில் அதிக ஆற்றலைக் குறிப்பதாகவும், இதன் மூலம் சிகிச்சை செலவுகள் குறையும், என்றும் கூறப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான ஆராய்ச்சிகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சி குறித்து, ஐஐடி மெட்ராஸின் பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியரான டாக்டர் சுவாதி சுதாகர் கூறுகையில்,
“இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் இந்த ஆராய்ச்சியானது நல்லதொரு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் புற்றுநோய் சிகிச்சையின் ஒட்டுமொத்த செலவைக் குறைத்து, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். தொடர் ஆராய்ச்சிகள் மூலம் இந்த கண்டுபிடிப்பை, விரைவில் பிற வகையான புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கலாம்,” எனத் தெரிவித்துள்ளார்,
இந்த ஆராய்ச்சிக் குழுவில், காவியா விஜயலட்சுமி, பாபுநாகப்பன், சுபஸ்ரீ ஹரிராமன், விமல்ராஜ் செல்வராஜ், முகிலரசி, நரேந்திரன் சேகர் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ஹார்பர்ட்ஸ், நிக்கோலஸ் எச்.வோல்கர் மற்றும் டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரோய் எல்நாதன் மற்று மெல்போர்ன் நானோஃபேப்ரிகேஷன் மையத்தின் ஒத்துழைப்பாளர்கள் உள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் மற்றும் டீக்கின் இந்த கூட்டு ஆராய்ச்சிக்கு, அலெக்சாண்டர் வான் ஹம்போலட் அறக்கட்டளை மற்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சி கவுன்சில் (ARC) ஆகியவை ஆதரவளித்துள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், காப்புரிமை பெற்ற இந்த மருந்து விநியோக தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்தை எதிர்பார்ப்பதாக, மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிக்கோலஸ் எச் வோல்கர் கூறியுள்ளார்.