+

‘சம்பளத்தை பார்க்காமல்; நாட்டிற்கு என்ன செய்யமுடியும் என நோக்குங்கள்’ - பத்ம ஸ்ரீ விருது பெறும் ஐஐடி இயக்குனர் காமகோடி சிறப்பு நேர்காணல்!

பத்ம ஸ்ரீ விருது பெற தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி எப்போதும் தேசத்தை முதன்மையாக கருதுகிறார். சமூகத்தின் மீதான தாக்கத்தையே வெற்றிக்கான ஒரே காரணியாக கருதுபவர், புதுமையாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவு பற்றி எல்லாம் விரிவாக யுவர்ஸ்டோரியிடம் பேசினார்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி அவரது அமைதியான தோற்றத்தை மீறி, துரிதமாக இயங்கும் மனிதராக இருக்கிறார்.

அவரது நிலை குலையாத தன்மை மற்றும் எளிமைக்கு பின், தனது கல்வி நிறுவனத்திற்கு என்னத்தேவை என்பதையும், அதை எப்படி அடைவது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

இதற்கான செயல் திட்டக்குழுவை அமைத்திருக்கிறார். புரிந்து கொள்ளக்கூடிய வகையில் புதுமையாக்கம் மற்றும் தொழில்முனைவில் கவனம் செலுத்துகிறார்.

2021- 2027 வரையான அவரது பணி காலத்தில் ஆண்டுக்கு 100 ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார். மேலும், ஐஐடி மெட்ராஸ் ஆய்வு பூங்காவின் ஆண்டுதோறும் குறைந்தது 5 வெற்றிகரமான நிறுவனங்கள் அல்லது தொழில்நுட்பங்களை உருவாக்கி (இன்குபேட் செய்வது) அதிக மதிப்பிலான அறிவுசார் சொத்துரிமையை உருவாக்குவதும் இலக்காகக் கொண்டுள்ளார். ஐஐடிஎம் ஆய்வு பூங்கா புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான ரூ.100 கோடி I&E நிதியையும் ஏற்படுத்த உள்ளது.

V.Kamakoti

இதற்கான பலன்கள் ஏற்கனவே தெரியத்துவங்கியுள்ளன. 2025 நிதியாண்டில் இன்குபேஷன் பிரிவில் 104 ஸ்டார்ட் அப்கள் உருவாகியுள்ளன. இவரது முன்னெடுப்பான ‘நாள் ஒன்றுக்கு ஒரு காப்புரிமை’ எனும் திட்டம், 2025ல் 410 காப்புரிமைகளுக்கு விண்ணப்பிக்க வைத்துள்ளது.

முக்கியமாக, இந்த எண்ணிக்கைகள் மற்றும் இலக்குகளை மீறி, 2022ல் இந்த கல்வி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்ட காமகோடி, ஐஐடி மெட்ராஸ் ஆய்வு பூங்கா வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தேசத்தை முன்னெடுத்துச்செல்வதில் வழிகாட்ட வேண்டும், என விரும்புகிறார்.

”இந்தியா வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஐஐடி மெட்ராஸ் அதை செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்?’ என இதை தெளிவாகவே வெளிப்படுத்துகிறார்.

எப்போதும் தேசத்தை முதன்மையாக கருதும் பேராசிரியர் காமகோடிக்கு, 2026ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான காமகோடி, கம்ப்யூட்டர் அறிவியல், சிஸ்டம்ஸ் பொறியியல் மற்றும் துறைகளுக்கு இடையிலான ஆய்வு ஆகிய பங்களிப்புகளுக்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐஐடி மெட்ராஸுக்கான அவரது பார்வை, அனைவருக்கும் தரமான ஐஐடி கல்வியை தருவதாக அமைகிறது.

“அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ். இதுதான் எங்களது இப்போதைய கொள்கை. எங்கள் நிபுணத்துவத்தை எல்லோருக்கும் திறந்து விடுகிறோம். கல்வி மற்றும் வாய்ப்புகள் ஜனநாயகமயமாவது மிகவும் முக்கியம்,” என்று பத்ம விருது அறிவிக்கப்படுவதற்கு முன் இம்மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணவலின் போது காமகோடி யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.

இந்த நோக்கத்துடன் ஐஐடி மெட்ராஸ் , தரவுகள் அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகள் ஆகியவற்றில் இளங்கலை ஆன்லைன் பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வகுப்புகளிலும் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு இல்லாமல் சேரலாம். தனித்தன்மையான தகுதி செயல்முறையை கொண்டுள்ளதோடு, வயது வரம்பு இல்லை மற்றும் பல நகரங்களில் தேர்வு எழுதும் வாய்ப்பை கொண்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்களை இலக்காகக் கொண்ட இந்த வகுப்புகளை அவரவர் விரும்பிய வேகத்தில் பயலலாம். “சமூகத்தின் மீதான நல்லவிதமான தாக்கம்” எனும் ஒரே தகுதி அளவுகோளில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளார். ஏஐ துறையில் இந்தியா முன்னேற்றம் காணும் என நம்புகிறவர், மேலும் பல இந்தியர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், ஸ்டார்ட் அப் நிறுவனர்களாகவும் உருவாவார்கள் என்றும் நம்புகிறார்.

நேர்காணலில் இருந்து…

யுவர்ஸ்டோரி (ஒய்.எஸ்):  தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களுக்கான ரேங்கிங்கில் ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இந்த கல்வி நிறுவனம் தனித்து விளங்க காரணம் என்ன?

பேராசிரியர் காமகோடி (விகே):  தேசிய முக்கியத்துவம் கொண்ட பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். இது எங்களுக்கு மிகுந்த திருப்தி தருகிறது. ஸ்வயம் மற்றும் ஸ்வயம் பிளஸ் ஆன்லைன் பயிற்சி திட்டங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறோம்.

தரவுகள் அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகளில் பெரிய அளவிலான ஆன்லைன் பயிற்சியை வழங்குகிறோம். மேலும், சில ஆன்லைன் வகுப்புகளை துவங்க உள்ளோம்.

விளையாட்டு திறன் மற்றும் நுண்கலை திறனுக்கான முக்கியத்துவத்தை முதலில் அளிக்கத்துவங்கினோம். விளையாட்டு மற்றும் நுண்கலைகளை மேற்கொள்பவர்களுக்கு கூடுதல் கிரெடிட் அளிக்கிறோம்.

இந்த மாணவர்கள் வெற்றிகரமான பொறியாளர்களாக உருவாவார்கள், என நம்புகிறோம். ஏனெனில், விளையாட்டு மற்றும் நுண்கலை கவனம், குழு உணர்வு மற்றும் ஒரே மேடையில் உடனடி வெற்றி மற்றும் உடனடி தோல்வியை ஏற்கும் மனப்பான்மையை கற்றுத்தருகிறது. இது மாணவர்களுக்கு மிகுந்த முதிர்ச்சியை அளிக்கும். இந்த வகை மாணவர்கள் பொறியியலுக்குத் தேவை. வளாகத்திற்கு மிகுந்த பன்முகத்தன்மையை இது அளிக்கிறது. மேலும், ஜான்சிபாரில் ஐஐடி வளாகம் கொண்டுள்ளோம்.

2 முதல் 12 ம்வகுப்பு மாணவர்களுக்காக ‘வித்யா சக்தி’ எனும் பள்ளிக்கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்த கிராமப்புற தொடர்பு மையங்களில் இணையம் சார்ந்த டிவி மூலம் குழந்தைகளுடன் அவர்கள் தாய்மொழியில் பேசுகிறோம். இது இணை பள்ளி அல்ல, ஆனால், பள்ளி கல்வியை மேம்படுத்த உதவக்கூடியது.

மொத்தம் 500 நிறுவனங்களுக்கு மேல் இன்க்பேட் செய்து உருவாக்கியுள்ளோம். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.53,000 கோடிக்கு மேல். காப்புரிமை நாள் திட்டம் பிரபலமாக உள்ளது. இந்த நிதியாண்டில் காப்புரிமையில் நல்ல எண்ணிக்கையை அடைய இருக்கிறோம். ஒரு ஐடியாவை வெற்றிகரமான ஸ்டார்ட் அப்பாக உருவாக்க உதவும் புதுமையாக்கம் மற்றும் தொழில்முனைவு இரண்டையும் பெற்றுள்ளோம்.

ஒய்.எஸ்:  ஏஐ அறிமுகமாகி நாம் இயல்பாக நினைக்கும் பலவற்றை மாற்றியிருக்கிறது. எனினும், ஏஐ முதல் கட்டத்தில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என சொல்லப்படுவதை கேட்கிறோம். இது பற்றி?

விகே: ஏஐ துறையில் பல செயல்பாடுகளை கொண்டுள்ளோம். ஏஐ அமைப்புகளை உருவாக்கும் அடிப்படை அமைப்புகள் உள்ளன. இந்த துறையில் நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட துறைகளுக்கான மாதிரிகளும் உருவாகின்றன. பாரத்ஜென் இருக்கிறது. ஏஐ4பாரத் உள்ளது. சர்வம் சிறப்பாக செயல்படுகிறது. பெர்பல்க்சிட்டி எங்கள் மாணவர் உருவாக்கம். இந்தியாவில் ஏஐ நுட்பம் இல்லை எனும் கருத்தில் எனக்கு உடன்பாடுஇல்லை. இதில் இறையாண்மை வரும். நம் சொந்த மாதிரிகளை உருவாக்குவோம். அவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

மற்ற மாதிரிகளை எடுத்துக்கொண்டாலும் எல்லோரும் பொது தரவுகளை பயன்படுத்தியுள்ளனர். கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மாதிரிகளுக்கான தரவுகள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

இந்த மாதிரிகள் பொதுவெளியில் உள்ள தரவுகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. இதன் மூலம் வருவாய் பார்க்கின்றனர். இதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு இருக்கிறது. ஏனெனில் இந்த நுண்ணறிவுக்கு அவர்களும் பங்களித்துள்ளனர்.

”இதனிடையே, இந்தியா என்ன செய்கிறது? பெரிய அளவிலான ஜிபியூக்கள் இல்லை. ஆனால் இதன் காரணமாக நாம் சிக்கனமாக ஏஐ நுட்பத்தை உருவாக்குகிறோம். தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய். செயல்திறன் மிக்க வகையில், லேசான வழியில் ஏஐ நுட்பத்தை உருவாக்குகிறோம்.

பெரிய மொழிமாதிரிகளை பொருத்தவரை, நாம் எல்லாவற்றிலும் கால் வைக்க வேண்டும் என்றில்லை. நாம் குறிப்பிட்ட துறை சார்ந்த மொழி மாதிரிகளை உருவாக்குகிறோம். இவற்றுக்கு பெரிய அளவு ஜிபியூக்கள் தேவையில்லை. குறைந்த வளத்தில் உருவாக்கலாம். இவை உருவான பிறகு நாம் நல்ல நிலையில் இருப்போம். இறையாண்மை கொண்டதாக விளங்கும் துறை சார்ந்த மாதிரிகள் பல இந்தியாவில் இருக்கும்.

ஒய்.எஸ்: ஏன் பல ஆழ் நுட்ப ஸ்டார்ட் அப்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் வர்த்தகமயமாக்கலை அடைவதில்லை. இதை சரி செய்வது எப்படி?

விகே: நான் நம்பிக்கையோடு பார்க்க விரும்புகிறேன். ஒரு ஸ்டார்ட் அப் விதைக்கு முந்தைய நிலையில் இருந்து ஏ,பி,சி என முன்னேற வேண்டும். இவற்றை அளிக்க விரும்புகிறோம்.

ஸ்டார்ட் அப்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் மாற்று விசி நிதியை உருவாக்க விரும்புகிறோம்.

ஸ்டார்ட் அப்’களை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறோம். அவற்றுக்கு இடம் அளித்து, ஆய்வுக்கூடம் அளிக்கிறோம். காப்புரிமை பெற உதவுகிறோம். அதையே அவர்களுக்கு சமபங்கு பெற்று அளிக்கிறோம். எனவே அவர்கள் பணம் செலவிட வேண்டியதில்லை.

ஒய்.எஸ்: தொழில்முனைவு தேவைகளுக்கு ஏற்ப ஐஐடி மெட்ராஸ் பாடத்திடங்கள் எப்படி அமைந்துள்ளன?

விகே:  சிஸ்டம் திங்கிங், சிஸ்டம் பில்டிங் மற்றும் தொழில்முனைவில் பாடத்திட்டங்கள் கொண்டுள்ளோம். விலை நிர்ணயம் உள்ளிட்டவை தொடர்பான பொருளாதாரம் சார்ந்த பாடதிட்டங்களும் உள்ளன. சந்தை அணுகுமுறை போன்றவை இதில் அடங்கும்.

நிர்வாக ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வம் கொண்டவர்கள் இணைந்து செயல்பட ஊக்குவிக்கிறேன். இரண்டு பிரிவைச் சேர்ந்தவர்களும் இணை நிறுவனர்களாக கொண்ட ஸ்டார்ட் அப்கள் உருவாக விரும்புகிறேன்.

இந்த முறையில் ஸ்டார்ட் அப்கள் இலக்கு கொண்டதாக இருப்பதோடு முறையான வழிகாட்டுதலும் பெறும். முறையாக வழிகாட்டப்படும் ஏவுகனையாக இருந்தால் ஸ்டார்ட் அப்கள் வெற்றிபெறும். அதாவது, இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கை அடைய வேண்டும். துடிப்புடன் இருக்க வேண்டும், சரியான திசையில் செல்ல வேண்டும்.

ஒய்.எஸ்: கல்வி மற்றும் தொழில்முனைவு எதிர்காலத்தில் தரவுகளின் பங்கு என்ன?

விகே: ஐஐடி மெட்ராசில் கல்வி மேம்பாட்டிற்கான ஏஐ மையம் இருக்கிறது. இந்த ஏஐ மையம் கல்வியில் ஏஐ நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என ஆய்வு செய்யும். இது ஒரு கோ பைலெட் போல இருக்கும். ஒவ்வொரு மாணவர் முன்னேற்றத்தையும் மதிப்பிட்டு, அவரது ஒட்டு மொத்த நலனுக்கு வழிவகுக்கும்.

குறிப்பிட்ட கல்வி நிறுவன பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் பொறுப்பான கோ பைலெட்டை உருவாக்கலாம். கல்லூரி அளவிலும் இவற்றை செயல்படுத்தலாம். மொழி வரம்புகளை கடந்து, பள்ளிக்கல்வி, உயர் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆய்வில் கோ பைலெட் போன்றவற்றை உருவாக்க தரவுகள் உதவும். இதற்கு ஏற்ற பெரிய மொழி மாதிரிகள் இருக்க வேண்டும்.

தொழில்முனைவுக்காக நிறைய சோதனை படுகைகளை உருவாக்கலாம். இந்த சோதனை படுக்கைகள், ஸ்டார்ட் அப்கள் வளர்வதற்கான, தங்கள் ஐடியாக்களை காப்புரிமை பெறுவதற்கான மேடையாக அமையும். பயிற்சி மற்றும் சோதனைக்கு பெரிய அளவிலான தரவுகள் தொகுப்பை பயன்படுத்தலாம்.

ஒய்.எஸ்: ஐஐடி மெட்ராஸ் பட்டதாரிகளில் 5 சதவீதம் தான் வெளிநாடு செல்கின்றனர், என ஒரு முறை குறிப்பிட்டிருந்தீர்கள். மேலும், அதிகமானோர் இந்தியாவிலேயே தங்கியிருப்பார்கள் என்றோ, வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்புவார்கள் என்றோ எதிர்பார்க்கிறீர்களா?

விகே: விசா கட்டுப்பாடுகள் போன்றவற்றால் இது நிகழலாம். பலரும் இந்தியாவை தவறவிடுகின்றனர். அதன் ஜனநாயகத்தை, சுதந்திரத்தை, கலாச்சாரத்தை, பன்முகத்தன்மையை இழப்பதாக உணர்கின்றனர். இங்கேயே வாய்ப்புகள் இருக்கின்றன. நன்றாக படித்தால் இங்கு வாய்ப்புகள் உள்ளன.நன்றாக வேலை செய்தாலும் வாய்ப்புகள் உள்ளன.

ஒய்.எஸ்: ஆக ஆண்டு ஊதியம் மற்றும் வெளிநாட்டு வேலை போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

விகே: ஊதியம் முக்கியமாக அமைகிறது. ஆனால், ஊதியம் மட்டும் போதுமா?

மக்களுக்கு ஆர்வம் அளிக்கும் வேலை தேவைப்படுகிறது. நிலையான வேலையும் தேவை. இன்று எல் அண்டு டி போன்ற நிறுவனத்தில் பொறியாளர் வேலை என்பது அரசு வேலை போல நிலையானது. மேலும் நமக்கு நல்ல சிவில் மற்றும் மெக்கானிகல் பொறியாளர்கள் தேவை.

சாலை அமைப்பது, கட்டுமானம், மெட்ரோ என எல் அண்டு டி போன்ற நிறுவனங்கள் அளிப்பது போன்ற பயிற்சி மற்றும் வாய்ப்புகளை வேறு நிறுவனம் தருவதில்லை.

எனவே, பணத்திற்கு பின் ஓடுவதை விட இத்தகைய நிறுவனங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இதை தான் மாணவர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவர்களும் கேட்கின்றனர். பலர் ஸ்டார்ட் அப்களில் பணியாளர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இணைகின்றனர். இந்தியா வேலைவாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறது. ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை எனில் வேறு யார் உருவாக்குவார்கள்?

ஒய்எஸ்: உங்கள் முன்னாள் மாணவர்கள் பலர் ஆழ்நுட்ப பரப்பில் செயலாற்றுகின்றனர். இதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?

விகே: ஜெர்மானியர்களால் நிறுவப்பட்டதால் இது இயல்பானது. எனவே ஜெர்மனி கலாச்சாரம் இங்கு இருக்கும். 1973 வரை ஜெர்மனி பேராசிரியர்கள் இருந்தனர். அவர்கள் தாக்கம் இன்னமும் இருக்கிறது. எதை செய்தாலும் துல்லியத்தை எதிர்பார்ப்பது ஜெர்மனியர்களிடம் இருந்து வருவது.

ஒய்.எஸ்: IITM சார்பில் உலகளாபிய ஆய்வு மையம் மைக்கப்பட்டுள்ளது. இனி கூட்டு முயற்சி தான் எதிர்காலமா?

விகே: பரஸ்பரம் சார்ந்து இருப்பதன் மூலம் உலக நிலையை உருவாக்கலாம். ஆனால் இந்த சார்பு சமமாக இருக்க வேண்டும். மேலும், அதிக நுட்பங்களுக்காக உலகம் இந்தியாவை நோக்குகிறது. நம் தொழில்நுட்பம் அனைத்தும் நம்பகமாக இருக்கிறது. மேலும் பல வெளிநாடுகள் நம் நுட்பத்தை பயன்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருக்கிறோம். எங்கள் மீது ஆர்வம் கொள்ளவில்லை எனில் எங்களுக்கும் ஆர்வம் இல்லை என உணர்த்தியுள்ளோம். இது தான் இந்தியாவுக்கான முக்கிய விற்பனை அம்சம் என நினைக்கிறேன். நாம் மதிப்பு மிக்க பங்குதாரராக செல்கிறோம். வேண்டுமானால் சில வளர்ந்த நாடுகள் போல, மிக நுணுக்கமான நுட்பங்கள் இல்லாமல் போகலாம். ஆனால் நம் மீது மிகுந்த நல்லெண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் தான் உலகளாவிய ஆய்வு மையத்தை அமைத்தோம்.

இந்த மையம் சிலவற்றை செய்யும். ஒன்று, இது ஸ்டார்ட் அப் தீர்வுகளை உலக அளவில் கொண்டு சென்று அவற்றுக்கான சந்தையை உருவாக்க முயலும். இங்குள்ள ஸ்டார்ட் அப்களுக்கான அந்நிய நேரடி முதலீடு வாய்ப்புகளையும் நோக்குகிறோம். ஐஐடி மெட்ராஸ் பல நுட்பங்களை கொண்டுள்ளது. தொழில்நுட்ப மாற்றத்தையும் நோக்குகிறோம்.

ஒய்.எஸ்: ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து பணியாற்றும் பேராசிரியர்களில் அதிக விகிதம் கொண்டுள்ளீர்கள். இது எப்படி சாத்தியமானது?  

வி.கே: மாற்றக்கூடிய ஆய்வை ஊக்குவிக்கிறோம்.பேராசிரியர்களிடம் ஐடியாக்களை காப்புரிமை பெற சொல்லி அதை ஸ்டார்ட் அப்பாக மாற்ற முயற்சிக்க சொல்கிறோம். இதற்கான பலன் கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தேவையான ஆதரவை அளிக்கிறோம். அந்த அளவு பணம் இல்லாமல் போகலாம். தொழில்நுட்பம் கொண்டு சோதனைகள் மேற்கொள்ளத் தேவையான ஆதரவு அளிக்கிறோம். அவர்கள் ஸ்டார்ட் அப் துவங்கினால் ஐஐடிமெட்ராசுக்கு சமபங்கு கிடைக்கும். 

ஒய்.எஸ்: காலத்திற்கு ஏற்ப மாறியிருக்கிறீர்கள், ஆனால் முன்னிலை இடத்தை இழக்காமல் இது எப்படி சாத்தியமானது? நன்றாக இருக்கும் விஷயங்களை பாதிக்க கூடாது என்பதற்காக தலைமையில் இருப்பவர் மாற்றத்தை கொண்டுவருவதை கடினமாக கருதலாம். இந்த நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

விகே: என் குரு காஞ்சி சங்கராச்சாரியார் சொன்ன ஒரு விஷயத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். முன்னேற்றம் நல்ல உண்மையான இலக்கு. சூரியனை நோக்கி சென்றால், நிழல் கண்டிப்பாக பின் தொடரும். நீங்கள் விரும்பா விட்டாலும் தொடரும். ஆனால் சூரியனை விட்டு, நிழலை பிடிக்க முயன்றால், அது விலகி விடும். எனவே, இலக்கு இருந்தால் அதை நோக்கி சென்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

பணம், புகழ், அதிகாரம் நிழல் போல உங்களை தொடரும். ஆனால் இலக்கை விட்டு அவற்றை பிடிக்க நினைத்தால் விலகி விடும். ஐஐடி மெட்ராசில் நாங்கள் வரையறுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் வியூகங்களை கொண்டுள்ளோம். இந்த திட்டத்தை இணைந்து உருவாக்கியுள்ளோம்.

எங்களுக்கு மாணவர்கள் நலன் தான் முன்னுரிமை. அவர்கள் இளமையானவர்கள். அவர்கள் முன் தொழில் வாழ்க்கை இருக்கிறது. எனவே மாணவர்களை முதன்மையாக கொண்டு செயல்படுகிறோம்.

தொழில்முனைவு தொடர்பாகவும் தெளிவான இலக்குகள் கொண்டுள்ளோம். மாணவர்களிடம் நீங்கள் சி.இ.ஓ ஆக வேண்டும் என சொல்லி ஊக்குவிக்கிறோம். ஏனெனில் உங்களால் வளத்தை உருவாக்க முடியும்.

ஒய்.எஸ்:  தொழில்முனைவோர் , ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கான செய்தி?

விகே: பொறுமை முக்கியம். ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மட்டும் அல்ல வென்சர் முதலீட்டாளர்களுக்கும் இது பொருந்தும். ஏத்தர் (ஐஐடி எம் முன்னாள் மாணவர்கள்) இந்த நிலையை அடைய 13 ஆண்டுகள் ஆனது. பொறுமையாக இருந்தால் குறிப்பிடத்தக்க பணம் கிடைக்கும்.

ஒய்.எஸ்: ஐஐடி மெட்ராஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

விகே: பணத்தை, ஊதியத்தை பார்க்காதீர்கள். தொழில்நுட்பத்தை நோக்குங்கள். நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என பாருங்கள். தேசம் முதலில் வருகிறது. ஏனெனில், இளம் மாணவர்கள் தான் விகிசித் பாரதம் 2047ன் தலைவர்களாக இருப்பார்கள். 2047ல் நாம் தொழில்நுட்ப வல்லரசாக சுதந்திரம் பெற விரும்புகிறோம்.

ஒய்.ஏஸ்; வெற்றியை எப்படி வரையறை செய்கிறீர்கள்?  

விகே: சமூகத்தின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதே வெற்றி. இதில் தெளிவாக இருக்கிறேன்.

ஆங்கிலத்தில்: ஸ்வேதா கண்ணன், ஜர்ஷத் என்.கே, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter