+

இந்திய கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச AI பயிற்சி: ஐஐடி மெட்ராஸ் ஸ்வயம் பிளஸ் புதிய முயற்சி!

ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், மத்திய கல்வி அமைச்சகத்தின் 'ஸ்வயம் பிளஸ்' (SWAYAM Plus) அமைப்புடன் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்களுக்காக இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக

ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், மத்திய கல்வி அமைச்சகத்தின் 'ஸ்வயம் பிளஸ்' (SWAYAM Plus) அமைப்புடன் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்களுக்காக இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

1 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள 'AI for Educators - K12 Teachers' என்ற இந்தச் சான்றிதழ் படிப்பு, வரும் பிப்ரவரி 5, 2026 அன்று தொடங்குகிறது. 40 மணிநேரம் கொண்ட இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள், வரும் ஜனவரி 31, 2026-க்குள் IITM Pravartak என்ற இணையதள முகவரியின் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், கல்வித் துறையில் AI ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், மாணவர்களுக்குக் கவரும் வகையில் பாடங்களை நடத்தவும், தரவு சார்ந்த மதிப்பீடுகளைச் செய்யவும் இது பெரிதும் உதவுகிறது. ஆசிரியர்கள் நவீன தொழில்நுட்பத்தை நம்பிக்கையுடனும், பொறுப்புடனும் கையாண்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனின் தலைமை அறிவு அதிகாரி பாலமுரளி சங்கர் கூறுகையில்,

"AI தொழில்நுட்பம் கல்வியின் எதிர்காலத்தை விரைவாக மாற்றியமைத்து வருகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் ஆசிரியர்களுக்குத் தேவையான நடைமுறை AI கருவிகள் மற்றும் கற்பித்தல் உத்திகளை வழங்கி, அவர்களை வருங்காலத்திற்குத் தயார்படுத்துவதே எங்கள் நோக்கம்," என்று தெரிவித்தார்.
IIT madras

பயிற்சித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

'AI for K12 Teachers' என்ற இந்தப் பயிற்சி, ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் AI கருவிகளைப் பயன்படுத்துவதற்கான நேரடி அனுபவத்தை வழங்கும். பாடங்களை எளிமையாக விளக்குதல், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்துதல் மற்றும் AI மூலம் மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்தல் போன்ற முக்கியத் திறன்கள் இதில் கற்பிக்கப்படும். மேலும், விளையாட்டு முறை கற்றல் (Gamification), கதை சொல்லும் திறன் (Storytelling), ஜெனரேட்டிவ் AI (Generative AI), பிராம்ட் இன்ஜினியரிங் (Prompt Engineering) மற்றும் AR/VR போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்து 8 தொகுதிகளாக (Modules) பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் இறுதியில், ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்தக் அமைப்பினால் இணைய வழியில் (Virtual Proctored Exam) ஒரு தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். குறிப்பாக, இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் முதல் 500 கிராமப்புறப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் கட்டணம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆங்கில மொழியில் நடத்தப்படும் இந்த 40 மணிநேரப் பயிற்சியானது, ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு பொன்னான வாய்ப்பாகும். சென்சார்கள், நெட்வொர்க்கிங் மற்றும் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமாக விளங்கும் ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்தக், நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த இத்தகைய முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

'AI for Educators - K12 Teachers' பயிற்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய:

facebook twitter