ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் தலப்பில் பிரதீப், சுவீடனின் கோத்தன்பர்கை தலைமையிடமாகக் கொண்ட ஐரோப்பிய பொறியியல் அகாடமியின் முழுநேர உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியைப் பெறும் 3-வது இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். நோபல் பரிசு, ஃபீல்ட்ஸ் பதக்கம், டியூரிங் விருது பெற்ற பலரும் இந்த அகாமியின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
நானோ நுட்பம்
நீர் சுத்திகரிப்பு, நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றில் மனித சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக இவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்சனிக், பூச்சிக்கொல்லிகள் போன்ற மாசுக்கள் அற்ற பாதுகாப்பான குடிநீரைப் பெற இவரது கண்டுபிடிப்புகள் வழிவகுத்துள்ளன.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பெயர்பெற்ற அறிவியலாளர்களான பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ், பேராசிரியர் பிமன் பாக்சி ஆகிய இருவரும் ஐரோப்பிய பொறியியல் அகாடமியின் உறுப்பினர்களாக இதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பலரும் இதே அகாடமியின் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
சர்வதேச, பிராந்திய, தேசிய அளவிலான பல்வேறு முக்கிய சவால்களுக்கு நுணுக்கமான ஆலோசனைகளை வழங்குவதற்காக, உலகெங்கிலும் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் பொறியியல் வல்லுநர்களை ஐரோப்பிய பொறியியல் அகாடமி ஒன்றிணைக்கிறது. 1992-ல் தொடங்கப்பட்ட இந்த அகாடமி அறிவியல், பொறியியல், பொதுச் சுகாதாரம், கல்வி, ஆதாரப்பூர்வ கொள்கை ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குடிநீர் ஆய்வு
நானோ பொருட்கள், மூலக்கூறு அமைப்புகள், குறைந்த செலவிலான தொழில்நுட்பங்களை உருவாக்கியதற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவர் பேராசிரியர் தலப்பில் பிரதீப். உலகின் மிக முக்கியமான சவால்களில் ஒன்றான—பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, நானோ அறிவியலின் அடிப்படை கண்டுபிடிப்புகளைச் அளவிடக்கூடிய தொழில்நுட்பங்களுடன் இவரது ஆராய்ச்சி ஒருங்கிணைத்துள்ளது.
“பாரதம் போன்றதொரு பெரிய நாட்டிற்கு சமூகத் தாக்கத்துடன், எளிதில் அணுகக்கூடிய பொறியியல் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் நானோ அறிவியல், தூய்மையான நீர் தொழில்நுட்பங்கள் போன்றவை மிகவும் முக்கியமாகும். இத்துறைகளில், பேராசிரியர் பிரதீப்பின் பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவருக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தால் இக்கல்வி நிறுவனம் மிகவும் பெருமிதம் கொள்கிறது,” என பேராசிரியர் தலப்பில் பிரதீப்புக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி கூறியுள்ளார்.
ஐரோப்பிய பொறியியல் அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெரும் கவுரவமாகக் கருதுவதாகவும், உண்மையான சமூகச் சவால்களுக்குத் தீர்வு காணக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்வதற்கான தனது மன உறுதியை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த அங்கீகாரம் அமைந்துள்ளதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார். மேலும்,
”சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அறிவியல்- தொழில்நுட்பத் துறையில் தலைமையை அங்கீகரிப்பதையும் இது பிரதிபலிக்கிறது,” என தமக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஐ.ஐ.டி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவன பேராசிரியர் மற்றும் தீபக் பரேக் கல்வி நிறுவனத் தலைமைப் பேராசிரியரான தலப்பில் பிரதீப் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan