
தமிழ்நாட்டின் பெருந்துறையைச் சேர்ந்தவரான அசோக் நாகேஸ்வரன், தற்போது அமெரிக்காவில் பிரபலமான சமையல் கலைஞராக திகழ்ந்து வருகிறார். சுமார் 90 நாடுகளின் உணவு வகைகளை அதே சுவையோடு வழங்குவதில் வல்லவரான இவர், அமெரிக்காவில் உள்ள மிசோரி மாகாணத்தில் செயிண்ட் லூயிஸ் பகுதியில் வசித்து வருகிறது.
தனது Food Raconteur நிறுவனம் மூலம், தனிப்பட்ட நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்கு உணவு தயாரிப்பதோடு, 'மருந்தே உணவு' என்பதை புரிய வைக்கும் வகையில் சமையல் வகுப்புகளையும் அசோக் நாகேஸ்வரன் நடத்தி வருகிறார்.

செஃப் அசோக் நாகேஸ்வரன்
நம் மனதிற்குப் பிடித்ததைச் செய்ய வயது எப்போதும் ஒரு தடையாக இருப்பதில்லை. இதை தன் வெற்றிகரமான வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அசோக் நாகேஸ்வரன்.
தமிழ்நாட்டின் பெருந்துறையைச் சேர்ந்த இந்த சமையல் கலைஞர், இளவயதில் படித்ததெல்லாம் மார்க்கெட்டிங் பற்றித்தான். 39 வயது வரை மார்க்கெட்டிங் துறையில் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் வேலை பார்த்த அவர், தனது 40வது வயதில் தனக்குப் பிடித்த சமையலை முறைப்படி கற்று, இன்று அமெரிக்காவில் பிரபலங்கள் விரும்பும் சமையல் கலைஞராக திகழ்ந்து வருகிறார்.
தனது ’Food Raconteur’ நிறுவனம் மூலம் இருவர் முதல் பத்தாயிரம் பேர் வரை, என ரொமாண்டிக் பார்ட்டிகள் தொடங்கி, விளையாட்டு வீரர்களுக்கான உணவுத்திட்டத்தை வடிவமைப்பதோடு, மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரிக்கும் வேலை, என சமையலில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் அசோக். அதோடு, வெல்னஸ் ஸ்டூடியோ (Wellness studio) என்ற பெயரில் உணவோடு, அதன் மகத்துவத்தைச் சொல்லும் வகுப்புகளையும், இன்குபேட்டர் கிச்சன் மூலம் அகதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து வருகிறார்.
கடந்த 2020ம் ஆண்டு உணவில் புதுமையான அணுகுமுறையைக் கொண்டு, சமூகப் பங்களிப்பு அளித்து வருவதற்காக, சிகாகோ மேயரால் கௌரவிக்கப்பட்ட தமிழர் என்ற பெருமையும் அசோக்கிற்கு உண்டு. மேலும், அவர் சமையல் பிரிவில் அமெரிக்காவின் மார்க்விஸ் Who's Who வில் இடம்பெற்றுள்ளார்.

பெருந்துறைக்காரர் அசோக் நாகேஸ்வரன்
தமிழ்நாட்டின் பெருந்துறையில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான அசோக், சமையல் கலைஞரான கதை சுவாரஸ்யமானது மட்டுமல்ல.. படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதும் கூட.
“அப்பா ஆசிரியர், அம்மா குடும்பத்தலைவி.. பெருந்துறையில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பாரம்பரிய குடும்பம் எங்களுடையது. படிப்பில் கெட்டி. பிறந்து வளர்ந்தது, படித்தது என எல்லாமே ஈரோடு மற்றும் பெருந்துறை என்பதால், அதைத் தாண்டிச் சென்று உலகைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதலே இருந்தது. அந்த சிறு வட்டத்திற்குள்ளேயே என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்,” என தனது கதையை அமெரிக்காவில் அமர்ந்தபடி யுவர்ஸ்டோரி தமிழுக்கு அளித்த பேட்டியில் உற்சாகமாக சொல்லத் தொடங்கினார்.
சினிமா நிறைய பார்ப்பேன். அதனாலேயே என்னவோ நண்பர்களுடன் உள்ளூரில் சுற்றிக் கொண்டு இருக்காமல், சென்னைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால், வீட்டில் மேற்கொண்டு என்னை எம்பிஏ படிக்கச் சொன்னார்கள். என் திறமைக்கு கிடைக்காத மரியாதை டொனேஷன் மூலம் கிடைக்க வேண்டாம் என அந்த வாய்ப்பை மறுத்து விட்டு சென்னையில் மாமா வீட்டிற்கு சென்று விட்டேன்.
என் வாழ்க்கையை செதுக்கியவர்களில் முக்கியமானவர் என் மாமாதான். அவர் வீட்டில் தங்கி ஒரு வருடம் மார்க்கெட்டிங் பற்றிய படிப்பை முடித்தேன், என தன் ஆரம்ப கால நாட்களை நினைவு கூர்கிறார் அசோக்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திருப்புமுனை
சென்னையில் படிப்பை முடித்த கையோடு மும்பையில் வேலை கிடைத்துவிட அங்கு சென்றுள்ளார் அசோக். அங்கிருந்து ஆரம்பித்த அவரது தொழில் பயணம் கோவா, பாண்டிச்சேரி என பல இடங்களுக்கு சென்றது.
“எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும், அதில் முதல் ஆளாக வர வேண்டும் என நினைப்பவன் நான். அதனாலேயே நான் வேலை பார்க்கும் இடங்களில் எப்போதும் முதன்மையானவனாக இருப்பேன். இந்தக் குணத்தால் எம்பிஏ படிக்கும் வாய்ப்பு ஒருமுறை கை நழுவி போக, கோபத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு பெருந்துறைக்கே சென்று விட்டேன்.”
மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்பாத நான், மேற்படிப்பு படிக்க முடிவு செய்தேன். இந்தமுறை நான் தேர்வு செய்தது ஆஸ்திரேலியா. எங்கள் பகுதியில் இருந்து வெளிநாட்டில் படிக்கப் போன முதல் ஆள் நான் தான். ஆனால், நினைத்தபடி வெளிநாட்டில் படிப்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. செலவுக்காக அங்கிருந்த பார் ஒன்றில் பார்ட்டைம் வேலை பார்த்தேன். சரியாக சாப்பிட எதுவும் கிடைக்காமல், தூங்கக்கூட நேரம் இல்லாமல் கடினமாக உழைத்தேன். என் உழைப்பின் பலனாக இத்தாலி உணவகம் ஒன்றில் வேலை கிடைத்தது. என் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனையே அந்த வேலைதான்.
”சுத்தம் செய்யும் வேலைக்காகச் சென்ற எனக்கு, சில மாதங்களிலேயே அந்த உணவகத்தின் முக்கிய பொறுப்பு கிடைத்தது. நிறைய உணவுப் பதார்த்தங்களை அங்கு நான் சமைக்கக் கற்றுக் கொண்டேன். ஒருபுறம் எம்பிஏ படித்துக் கொண்டு, மறுபுறம் பிராக்டிகலாகவும் சமையல் தொழிலைக் கற்றுக் கொண்டேன். மூன்று வருடங்கள் அங்கு நான் பெற்ற அனுபவம்தான், என்னை சமையல் தொழிலுக்குள் கொண்டு வந்தது என்றே சொல்லலாம்,” என்கிறார் அசோக்.

மனைவியின் தியாகம்
எம்பிஏ படித்து முடித்தவுடன் ஆஸ்திரேலியா, ஐரோப்பா என பல நாடுகளுக்குச் சென்று பல முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்த அவர், மீண்டும் இந்தியா திரும்பி இங்கும் சில ஆண்டுகள் மும்பையில் வேலை பார்த்துள்ளார். பின்னர், 2012ல் தன் மனைவியின் வேலை நிமித்தமாக அமெரிக்காவுக்கு குடிபெயர வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
“உண்மையைச் சொல்வதென்றால் அப்போது அமெரிக்கா செல்ல எனக்கு இஷ்டமே இல்லை. என்ன காரணத்திற்காக நாம் அங்கு செல்ல வேண்டும் என்ற குழப்பமே இருந்தது. ஆனாலும் மனைவிக்காக இங்கு வந்தேன், பல நிறுவனங்களில் வேலை தேடினேன். இதுவரை சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு வேலை நிராகரிப்புகளை நான் சந்தித்துள்ளேன். அப்போதுதான் என் மனைவி, ‘நீங்கள் ஏன் உங்களுக்குப் பிடித்த சமையலையே ஒரு தொழிலாக எடுத்துச் செய்யக்கூடாது’ எனக் கேட்டார். எனக்கும் அது சரியெனப்பட, என் 40 வயதில் மீண்டும் கல்லூரிக்குச் சென்று சமையலை முறைப்படி கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்காக தன்னுடைய கனவை அடகு வைத்தார் என் மனைவி. எனவே மிகுந்த கவனமுடன் எனது எதிர்காலத் திட்டமிடலை நான் தொடங்கினேன்.”
நான் சமையல் கற்க சென்ற வகுப்பிலேயே நான் தான் மிகவும் வயதான மாணவர். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் 18, 19 வயது என என் வயதில் பாதிதான் இருந்தார்கள். அவர்களோடு போட்டியிட்டு ஜெயிக்க வேண்டிய கட்டாயம். என் வயதில் இருந்த என் நண்பர்கள் அப்போது நல்ல பதவியில் இருக்க, இந்த வயதில் இதெல்லாம் உனக்குத் தேவையா? என்ற பரிகாசங்களையும் கடக்க வேண்டி இருந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு வருடம் அந்த கோர்ஸை முடித்தபிறகு, நிச்சயம் இதில் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஹோட்டல் துறையில் தேவையான அனுபவங்களைக் கற்றுக் கொண்டேன். அதில் முக்கியமானது ஸ்பெயினில் நான் இருந்த 6 மாத காலம். வீட்டை விட்டு பிரிந்து சென்று, சோசியல் மீடியா தாக்கம் எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க சமையலும், நானுமாக வாழ்ந்த காலம் அது.
“இந்தக் காலகட்டத்தில்தான், சின்ன பட்ஜெட் மீல்ஸில் இருந்து பத்தாயிரம் பேர் வரை சமைப்பது எப்படி என்ற நுணுக்கங்களை ஒவ்வொன்றாக கற்றேன். ஏற்கனவே எனக்கு இருந்த மார்க்கெட்டிங் அனுபவத்தையும், இந்த சமையல் அனுபவத்தோடு சேர்த்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிறுவனத்தை ஆரம்பித்தேன். அதுதான் எங்களது Food Raconteur,” என தான் தொழில்முனைவோரான கதையை விவரித்தார் அசோக்.

தனது குழுவினருடன் அசோக் நாகேஸ்வரன்
கதை சொல்லி
Raconteur என்பது ஒரு பிரெஞ்சு வார்த்தை. அதன் பொருள் கதை சொல்லுதல். உணவோடு சேர்த்து, அது உருவான கதையையும் எடுத்துக் கூறுவதால், தனது நிறுவனத்திற்கு இந்தப் பெயரை வைத்துள்ளதாக அசோக் கூறுகிறார்.
இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அசோக், சுமார் 90 நாடுகளின் உணவுகளை அதில் தயாரித்து பரிமாறியுள்ளார். ஒவ்வொரு வருடமும் புதுப்புது நாடுகளின் உணவுகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.
“ஒவ்வொரு நாடும், அதில் உள்ள இடங்களும் அதற்கென தனிப்பட்ட உணவுக் கதைகளை வைத்துள்ளன. ஒவ்வொரு உணவும் அதன் பாரம்பரிய வரலாற்றைக் கொண்டுள்ளன. அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். ஸ்டீரியோ டைப்புகளை உடைப்பதே எங்களது நோக்கம். உணவை வைத்து ஒரு பகுதி மக்களின் அடையாளத்தை நிர்ணயிப்பது சரியல்ல. அதேபோல், சாப்பாடு மீதான மரியாதையையும் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்,” என்கிறார் அசோக்.
தனது தொழிலாக மட்டும் சமையலை பார்க்காமல், அதனை ஒரு கதை சொல்லலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அசோக், அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக ’இன்குபேட்டர் கிச்சன்’ ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் மற்ற நாடுகளில் இருந்து நிராதரவாக வருபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, அவர்களுக்கு புதிய தொழில் தொடங்க உத்வேகமும் அளித்து வருகிறார்.
இதுதவிர மன அழுத்தத்தால், பேசுவதற்கும், தாங்கள் பேசுவதைக் கேட்க ஆளில்லாமல் தவிப்பவர்களுக்கும் உதவும் விதமாக வெல்னஸ் ஸ்டூடியோவை நடத்தி வருகிறார் அசோக்.
“நமது பாரம்பரிய சமையல் உணவே மருந்து என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இதனை இங்குள்ள மக்களுக்குப் பிடித்த மாதிரி எங்களது வெல்னஸ் ஸ்டூடியோவில் எடுத்துச் சொல்கிறோம். கல் சட்டியில் வைத்து சமையல் செய்வது, ஈயச் செம்பின் பலன்களை எடுத்துக் கூறுவது போன்ற பல நல்ல விசயங்கள் இதில் உண்டு. மாதத்திற்கு ஒரு டாப்பிக்காக இதனை எடுத்துச் செயல்படுத்தி வருகிறோம். விருதுகளைவிட எங்களிடம் வந்து உணவருந்தி விட்டு செல்பவர்களின் திருப்தி எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது,” என்கிறார்.
என்னிடம் 20 பேர் வேலை செய்கிறார்கள். கல்விதான் எனது பெரிய முதலீடு. ஏஜ - யின் தாக்கம் எவ்வளவு அதிகரித்தாலும் அது சமையல் தொழிலைப் பாதிக்காது, என நம்புகிறேன். ஏனென்றால் நிச்சயம் டெக்னாலஜியால் உணவிற்கு சுவை தர முடியாது, என்கிறார் அசோக்.

லாக்டவுன் தந்த வளர்ச்சி
உலகமே முடங்கிக் கிடந்த லாக்டவுன் சமயத்தில்தான் தங்களது நிறுவனம் 300 சதவீத வளர்ச்சியை அடைந்ததாகக் கூறுகிறார் அசோக்.
“லாக்டவுன் சமயத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல். அந்த சமயத்தில் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாதவர்கள், எங்களது சேவையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நாங்கள் சுமார் 90 நாடுகளின் உணவை அதே ருசியில் தருவது அவர்களுக்கு வசதியாக இருந்தது. எனவே அந்தச் சமயத்தில்தான் நாங்கள் தொழிலில் மென்மேலும் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும்.”
அதேபோல், அலுவலகங்களில் மன அழுத்தத்தில் இருந்த ஊழியர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தோம். அமெரிக்கா மட்டுமின்றி சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் நாங்கள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்ததால், எங்களது தொழில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் மேலும் விரிவடைந்தது என்றுதான் கூற வேண்டும், என்கிறார் அசோக்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என நினைப்பவர்களுக்கெல்லாம் அசோக் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அது,
“சிறுநகரங்களில் இருந்து வருகிறோம்... நம்மால் என்ன செய்ய முடியும் என யாருக்குமே தாழ்வுமனப்பான்மை இருக்க வேண்டியதில்லை. எப்போதும் புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வதற்காக கண்களையும், காதுகளையும் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.”
எப்போதும் மனதிற்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.. முதலில் உங்களை நீங்களே நம்புங்கள். எதற்காகவும் பயப்படாதீர்கள். செய்யும் வேலையை ஆத்மார்த்தமாக முழு மனதோடு, நேர்மையாக செய்யுங்கள். இந்த இடத்தில் இருந்து வந்தால்தான் ஜெயிக்க முடியும், என நினைக்காதீர்கள். நீங்கள் நினைத்தால் எந்த வயதிலும் மனதிற்குப் பிடித்ததைச் செய்து ஜெயிக்க முடியும்”!
பேசுகிற ஒவ்வொரு வார்த்தையிலும் கேட்பவர்களுக்கு தன்னம்பிக்கை தருவது போல் பேசும் அசோக், இந்தாண்டிற்கான எம் எஸ் என் டாப் 10 (MSN 2025 Top 10 men) பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அதோடு, சிகோகா டாப் 10 உணவு சாப்பிடும் இடங்கள் பட்டியலிலும் அசோக்கின் நிறுவனம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.