+

ஆப்பிள் ஊழியர் டு ஸ்டார்ட் அப் நிறுவனர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண்!

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஆப்பிள் நிறுவனத்திற்கு உதவியவரும், கோபால்ட் லேப்ஸ் என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனருமான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்யாணி ராமதுர்கம், நிதிப் பிரிவில் ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்ட 30 யுனைடெட் ஸ்டேட்ஸ் 2026 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

2026ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், ஃபோர்ப்ஸ் இந்தாண்டிற்கான பணக்காரர்கள், தொழில்முனைவோர் மற்றும் வல்லுநர்கள் உட்பட பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அதில், நிதிப்பிரிவில், ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 யுனைடெட் ஸ்டேட்ஸ் 2026 (Forbes 30 Under 30 United States 2026 list) பட்டியலில் இடம்பிடித்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான கல்யாணி ராமதுர்கம்.

kalyani ramadurgam

ஆப்பிள் வேலை கற்றுத் தந்த பாடம்

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் நிபுணத்துவம் பெற்றவரான, கல்யாணி ராமதுர்கம் (26), நியூயார்க்கில் வசித்து வருகிறார். தொழில்முனைவோராக மாறுவதற்கு முன்பு, இவர் ஆப்பிள் நிறுவனத்தில் பயங்கரவாத அமைப்புகளால் ஆப்பிள் பே (Apple Pay) தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

உலகளாவிய பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள நபர்கள், ஆப்பிள் பே கட்டணத் தளத்தை அணுகுவதைத் தடுப்பதை உறுதி செய்வது அவரது பொறுப்புகளில் முக்கியமானது.

கல்யாணி ராமதுர்கம், ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில், நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கும் இணக்க செயல்முறைகள் கையாளப்படும் விதத்திற்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதைக் கவனித்தார். ஆப்பிளில் நுட்பமான தன்மை இருந்தபோதிலும், பல அமைப்புகள் மெதுவாகவும், பெரும்பாலும் மனிதர்களால் கையாளப்பட வேண்டியதாகவும் இருந்தன. மேலும் பெரிய விரிவான ஆவணங்களை மதிப்பாய்வு செய்ய பெரிய குழுக்கள் தேவைப்பட்டன.

அதோடு, ஆவண சரிபார்ப்பு, இடர் மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றிற்கு, பல பெரிய நிதி நிறுவனங்கள்கூட தொடர்ந்து காலாவதியான அணுகுமுறைகளையே நம்பியிருப்பதையும் கல்யாணி கவனித்தார். இது ஊழியர்களின் செயல்திறனைக் குறைப்பதோடு, அவர்களுக்கு மன அழுத்தம் தருவதையும், இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிதி மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகின்றன என்பதையும் அவர் தனது தொழில் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டார்.

“நிறுவனங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல், அதிகப்படியான ஆட்களை மட்டுமே பணியமர்த்தின,” என்கிறார் கல்யாணி.
kalyani ramadurgam


ஏஐ தொழில்நுட்பம் மூலம் தீர்வு

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, இந்த செயல்திறன்கள் செயல்பாட்டு அழுத்தத்தை அதிகரித்து நிறுவனங்களை நிதி மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாக்குகின்றன என்று அவர் கண்டறிந்தார்.

எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப உதவியுடன் தீர்வு காண அவர் முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2023ம் ஆண்டு முன்னாள் அஃபர்ம் மென்பொருள் பொறியாளர் ஆஷி அகர்வாலுடன் இணைந்து கோபால்ட் லேப்ஸ் (Kobalt Labs) என்ற ஸ்டார்ட் அப்பை தொடங்கினார்.

கல்யாணியின் இந்த கோபால்ட் லேப்ஸ் நிறுவனமானது, வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கான இணக்க மதிப்பாய்வுகளை தானியங்குபடுத்தவும், விரைவுபடுத்தவும், இயந்திர கற்றல் கருவிகளை உருவாக்குகிறது. அதோடு, நிறுவனர்கள் தங்களது பார்ட்னர்களை மதிப்பிடுவதற்கும், நிதி ஆவணங்களைக் கண்காணிப்பதற்கும், அபாயங்களை மிகவும் திறமையாக அடையாளம் காண்பதற்கும் உதவுகிறது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுகிறது.

kalyani ramadurgam

மனித வேலையைக் குறைக்கும்

சுமார் 13 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ள கோபால்ட் லேப்ஸ், பிண்டெக் தளமான பில்ட் மற்றும் செல்டிக் வங்கி உட்பட 20க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது.  

ஆப்பிள் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, பயங்கரவாதிகளின் துஷ்பிரயோகத்திலிருந்து கட்டண முறைகளைப் பாதுகாக்க கல்யாணி எதிர்கொண்ட சவால்களையும் அதில் கிடைத்த அனுபவங்களையும், தற்போது தனது நிறுவனத்தின் நோக்கங்களில் பிரதிபலித்து வருகிறார் கல்யாணி.

‘இந்த தொழில்நுட்பம் மனிதர்களை ஆதரிப்பதற்காகவே தவிர, அவர்களை வேலையில் இருந்து மாற்றுவதற்காக அல்ல’ என்பதை வலியுறுத்தும் கல்யாணி, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீண்டும் மீண்டும் செய்யும் வேலையைக் குறைத்து துல்லியத்தை மேம்படுத்த முடியும் என்கிறார்.

குறுகிய காலத்தில் அதிக நிதி திரட்டியதற்காக, ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 யுனைடெட் ஸ்டேட்ஸ் 2026 பட்டியலில் கல்யாணி இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

facebook twitter