இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான IndiGo, இந்தியாவில் வளர்ந்து வரும் ஏர்-டாக்சி துறையில் தனது தடத்தை பதிக்க, Sarla Aviation என்ற ஸ்டார்ட்அப்பில் ரூ.10 கோடி முதலீடு செய்துள்ளது. இதற்கான விவரங்கள் சமீபத்திய கட்டுப்பாட்டு ஆவணங்களில் வெளியாகியுள்ளன.
அந்த ஆவணங்களின்படி, சர்லா ஏவியேஷன் நிறுவனத்தின் வாரியம், IndiGo Ventures Fund-I-க்கு ரூ.10 மதிப்புள்ள 10 ஈக்விட்டி பங்குகளை ஒவ்வொன்றும் ரூ.1,87,425 பிரீமியத்தில் வழங்கவும், மேலும் ரூ.10 முகவிலை கொண்ட 524 Series A1 கட்டாய மாற்றக்கூடிய முன்னுரிமைப் பங்குகளையும் அதே பிரீமியத்தில் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 கோடியாகும்.
பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் சர்லா ஏவியேஷன், இந்த புதிய முதலீட்டை பொதுப் பணிச்செலவுகள், வேலை மூலதனம், மூலதனச் செலவுகள் மற்றும் நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு அட்ரியன் ஷ்மிட், ராகேஷ் கவோங்கர் மற்றும் சிவம் சவுகான் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ‘Shunya’ எனப்படும் மின்சார (eVTOL) விமானங்களை உருவாக்கி வருகிறது. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Accel மற்றும் நிகில் காமத் தலைமையில் நடைபெற்ற Series A1 சுற்றில் $10 மில்லியன் திரட்டிய சர்லா ஏவியேஷன், இதுவரை மொத்தமாக சுமார் $13.4 மில்லியன் நிதி பெற்றுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, 2028ஆம் ஆண்டுக்குள் பெங்களூருவில் ஏர்-டாக்சி சேவையை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது.
இதற்கு முன், இண்டிகோ நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த Archer Aviation நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார ஏர்-டாக்சி சேவையை அறிமுகப்படுத்த முயன்றது. ஆனால், Archer Aviation நிறுவனம் ஒப்பந்திக்கப்பட்ட காலக்கெடுவை பூர்த்தி செய்யாததால் அந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.