+

தமிழ்நாடு கிராமப்புற விளிம்பு நிலை, பழங்குடியின மக்களை தொழில்முனைவோர் ஆக்க முயற்சிக்கும் திட்டம்!

பி.ஒய்.எஸ்.டி மற்றும் அசோக் லேலண்ட் அறக்கட்டளை துவக்கியுள்ள திட்டம் கிராமப்புறங்களில் உள்ள விளம்பு நிலை இளைஞர்கள் மத்தியில் குறும் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

பல நேரங்களில் தொழில்முனைவு வறுமையில் இருந்து விடுபடுவதற்கான வழியாக கருதப்படுகிறது. எனினும், பெரும்பாலான தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒரு நிறுவனத்தை சொந்தமாக கொண்டிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் (எம்.எஸ்.எம்.இ), 6.8 சதவீதம் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொந்தமாக இருப்பதாகவும், 2.1 சதவீதம் மட்டுமே பழங்குடியினருக்கு சொந்தமாக இருப்பதாகவும் எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி ஆணையரக தரவுகள் தெரிவிக்கிறது. பெரும்பாலான குறு நிறுவனங்கள், வளர்ச்சிக்கான, வாய்ப்பு, சந்தை மற்றும் மூலதன அணுகலை குறைவாக பெற்றுள்ளன.

இந்த இடைவெளியை போக்கி, தமிழ்நாட்டில் கிராமப்புற விளிம்பு நிலை மக்களில் இருந்து குறும் தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில், இளம் கிராமமுனைவோர் திட்டம் (Young Grampreneur Development) அமைகிறது. அசோக் லேலாண்ட் நிறுவனம் மற்றும் தில்லியின் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை இடையிலான மூன்று ஆண்டு திட்டமாக இது அமைகிறது.

Micro

உள்ளூர் சமூகத்தினர்

உள்ளூர் சமூகங்கள் தங்கள் மாவட்டங்களில் நிறுவனங்களை உருவாக்க ஊக்குவிப்பது இந்த திட்டத்தின் நோக்கம். மேலும், வேலைவாய்ப்பின்மை மற்றும் நகர குடிபெயர்வை தடுப்பதற்காக தொழில்முனைவை முன்னிறுத்தும் நோக்கமும் கொண்டுள்ளது.

2025 துவங்கி 2028 வரை நடைபெறும் இந்த திட்டம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. 4,500 இளைஞர்களை சென்றடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இவற்றில் 900 தொழில்முனைவோருக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

நிறுவனங்களை உருவாக்குவதில் உதவுவதோடு, அவர்கள் வாழ்வாதாரத்திற்கும், நீண்ட கால வருமானத்திற்கும் உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

“திறனும், நம்பிக்கையும் மிக்க, வேலைவாய்ப்புகளை நாடும் தேவை இல்லாத புதிய இளம் குறும் தொழில்முனைவோரை உருவாக்க இந்த திட்டம் உதவும்,” என்று பி.ஒய்.எஸ்.டி., நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் வெங்கடேசன் கூறுகிறார்.

சுய சார்பு கொண்டு உள்ளூரில் இயங்கும் தொழில்முனைவில் இந்த திட்டம் கவனம் செலுத்துவதை சுட்டிக்காட்டுகிறார்.

“ஓரளவு திறன் கொண்ட, வேலைவாய்ப்பில்லாத அல்லது சரியான வேலையில் இல்லாத இளைஞர்களை இலக்காக கொண்டுள்ளோம். ஏனெனில், இந்த பிரிவினர் தான் நிலையற்ற வேலைவாய்ப்புகளுக்கு தள்ளப்படுகின்றனர் அல்லது இடம்பெயர்கின்றனர்,” என்று இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் விளக்குகிறார்.

கிராமப்புற தொழில்முனைவு அணுகுமுறை, குறுகிய கால திறன் பயிற்சி முறைகளில் இருந்து வேறுபட்டது. வழிகாட்டுதல் முக்கிய வேறுபாடாக அமைகிறது.

“தொழில்துறையைச் சேர்ந்த தன்னார்வ வழிகாட்டிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். இவர்கள் அறிமுக நிலை, பயிற்சி, வங்கி இணைப்பு ஆகிய நிலைகளில் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுகின்றனர். கடனுக்கு பின் இரண்டு ஆண்டுகள் உதவுகின்றனர்.”

ஊதியம் அளிக்கும் வேலையே நிலையான ஒன்றாக பாரக்கப்படும் கிராமப்புற சூழலில், தொழில்முனைவை ஒரு சாத்தியமாகும் வாய்ப்பாக முன்வைக்கும் வகையில் சமூக அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் இந்த திட்டம் துவங்குகிறது. இந்த சமுக்கத்தினருக்கு பழக்கமான வீதி நாடகம்,நடமாடும் வாகனம், வர்த்தக ஐடியா போட்டிகள் உள்ளிட்ட வழிகளை இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இளைஞர்களை தொழில்முனைவு தொடர்பான விவாவதத்தில் ஈடுபடுத்துவது நோக்கம்.

எனினும், இவர்களில் சிறு பகுதியினர் தான் முன்னேறிச்செல்கின்றனர்.

“நாங்கள் அணுகும் 50 அல்லது 60 இளைஞர்களில் ஒருவர் தான் தொழில்முனைவை மேற்கொள்கின்றனர்,” என்கிறார் செய்தி தொடர்பாளர்.

வர்த்தக சாத்தியம், உள்ளூர் தேவை, தொழில்நுட்ப திறம், செயல்பாடு தன்மை, பூகோள சூழல் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் தொழில்முனைவு வாய்ப்புகள் பிஒய்.எஸ்டி அமைப்பால் தேர்வு செய்யப்படுகிறது. இது சாதி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

இந்த திட்டம் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறது. ரீடைல் வர்த்தகம் குறைவாக இருக்கிறது மற்றும் சூற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறுவனங்கள் தவிர்க்கப்படுகின்றன. டிஜிட்டல் தயார் நிலை, நிதி கல்வியறிவு, அறம் சார்ந்த வர்த்தக செயல்முறை ஆகியவற்றில் பயிற்சி கவனம் செலுத்துகிறது. மேலும், வங்கிகளுடன் தொடர்பு கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சவால்கள்

இந்த திட்டம் திறன் பயிற்சி அளிப்பதோடு, கடன் மற்றும் விலக்கம் ஆகிய வரம்புகளையும் எதிர்கொள்கிறது. பெரும்பாலான கிராமப்புற மற்றும் விளிம்பு நிலை சமூகங்கள் நீண்ட கால கடன் சுமையை குறைந்த வருமானம், மருத்துவ அவசர நிலை, அமைப்புசாரா கடன் பழக்கம் போன்றவற்றால் எதிர்கொள்கின்றன. கடன் பலரை தொழில்முனைவில் ஈடுபட அனுமதிப்பதில்லை. ஏனெனில், ஏற்கனவே உள்ள கடன் தொழில்முனைவுக்கான சிறிய இடரை கூட எதிகொள்ளவிடாமல் தடுக்கிறது.

இந்த சூழலில் கடன் வசதி முக்கிய தடையாகிறது. இந்த அமைப்பு நேரடியாக கடன் வழங்குவதில்லை, அரசு திட்டங்கள், வங்கிகள் வாயிலாக கடன் பெற உதவுகிறது.

“எனவே, யாரேனும் கடன் சுமை கொண்டிருந்தால், அல்லது கடனை அடைக்காமல் இருந்தால், அவர்கள் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில்லை. அவர்கள் கடனை அடைத்து மீண்டு வர ஆலோசனை அளிக்கிறோம்,” என்கிறார்.

மேலும், கடன் தொடர்பான அச்சமும் தொழில்முனைவு முயற்சிக்கு தடையாக அமைவதையும் இந்த அமைப்பு கவனித்துள்ளது.

ஒடிஷாவின் காலஹண்டி போன்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூட, மூன்றில் ஒருவரே தொழில்முனைவு ஆர்வம் கொண்ட பிரிவில் இடம்பெறுகின்றனர். விண்ணப்பித்தவர்கள் கூட, பொதுவாக ஒரு லட்சத்திற்கும் குறைந்த கடனை தேர்வு செய்கின்றனர். வங்கி அமைப்பில் இருந்து விலக்கப்பட்டதால் ஏற்பட்ட கடன் சுமை அச்சம் இதற்கு காரணமாக அமைகிறது.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக சமூக பொறுப்புணர்வு பிரிவான அசோக் லேலண்ட் அறக்கட்டளை செய்தி தொடர்பாளர், திட்டம் செயல்படுத்தப்பும் கொல்லி மலை, மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் அருகாமை பகுதிகளில் அறக்கட்டளை அதிகாரிகள் அடிக்கடி சென்று பார்த்து, பயனாளிகள் மற்றும் வங்கி மேலாளர்களுடன் உரையாடி, திட்ட பங்குதாரர்களுக்கு கருத்து தெரிவிப்பதாக கூறுகிறார். இந்த தலையீட்டை மீறி, தொழில்முனைவோர் முடிவு எடுக்க வேண்டிய கட்டங்களில் பிரதிநிதிகள் விலகி நிற்பதாகவும், கூறுகிறார்.

“வாழ்வாதாரம், விவசாய சுழற்சி, காலநிலை மற்றும் சந்தை அணுகல் போன்ற உள்ளூர் அம்சங்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவை, எந்த வெளிப்புற அமைப்புகளாலும் இவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது,” என்கிறார்.

தொழில்முனைவை வளர்ச்சிக்கான கருவியாக பயன்படுத்துவதில் உள்ள வரம்புகளையும் திட்டத்தின் பின்னே உள்ளவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். நிலமின்மை, மோசமான உள்கட்டமைப்பு, சமூக பாகுபாடு போன்ற அமைப்பு சார்ந்த போதாமைகளுக்கு தொழில்முனைவு ஈடாகாது, என்கின்றனர்.

MSME

நம்பிக்கை, வழிகாட்டுதல்

பெண் தொழில்முறை பணியாளர்கள், விளிம்பு நிலை பிரிவினரில் உள்ள முதல் தலைமுறை பட்டதாரிகள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்குவதில் திட்டம் கவனம் செலுத்துகிறது.

நிதி சுழற்சியை கடந்த நீடித்த தன்மை ஒரு முக்கிய கவலையாக இருக்கிறது. திட்டத்தின் இரண்டு அமைப்புகளும், கடந்த கால பயனாளிகள் உள்ளிட்ட உள்ளூர் வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

தொழில்முனைவோருக்கு 2028க்கு பிறகும் வழிகாட்டுதல் கிடைக்கும். பி.ஒய்.எஸ்.டி அமைப்பு பயிற்சி அளிக்கும் கல்வியாளர்கள், மாவட்ட அதிகாரிகள், இன்குபேஷன் ஊழியர்கள் உள்ளிட்டோர் தொழில்முனைவோர்களுக்கு சுயேட்சையாக பயிற்சி அளிக்க நிறுவனம் சார்ந்த வழிகாட்டுதல் மாதிரியையும் நடத்துகிறது.

“தொழில் துவங்க விரும்பும் இளைஞர் மூடிய கதவை அல்லாமல் ஊக்கம் அளிக்கும் சூழலை எதிர்கொள்ளும் வாய்ப்பை உருவாக்குவது,” இதன் நோக்கம் என்கிறார் இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர்.

அசோக் லேலண்ட் அறக்கட்டளை ஏற்கனவே கல்வி சார்ந்து மேற்கொண்ட திட்டத்தின் தொடர்ச்சியாக குறும் தொழில்முனைவு திட்டத்தை மேற்கொள்கிறது. முந்தைய சாலையில் இருந்து பள்ளிக்கு திட்டம் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு தொலைதூர பகுதிகளில் அரசு பள்ளிகளுக்காக உள்ளூர் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தியது. இந்த திட்டம் முடிந்தவுடன், புதிதாக திறன் பெற்ற இளைஞர்கள் மீண்டும் வேலையின்மைக்குள் செல்லாமல் இருப்பதற்கான வழியை யோசித்தது.

“தமிழ்நாடு திறன், தொழில்முனைவு, சமூக ஆற்றல் ஆகியவற்றுக்கு செழிப்பான பாரம்பரியம் கொண்டுள்ளது,” என்கிறார் அசோக் லேலண்ட் அறக்கட்டலை சி.இ.ஓ.டி.சசிகுமார் கூறுகிறார்.

“இருப்பினும், கிராமப்புறங்களில் உள்ள பல இளைஞர்கள், வழிகாட்டுதல், வலைப்பின்னல், கடன் வசதி அணுகலில் இடைவெளியை எதிர்கொள்கின்றனர். எங்கள் கூட்டு முயற்சி இந்த இடைவெளியை நடைமுறை நோக்கில், இளைஞர்கள் சின்ன சின்ன வேலைவாய்ப்புகளை தேடி மாநிலம் விட்டு குடிபெயராமல், தங்கள் வாழ்க்கைக்கான தொழிலை உருவாக்கும் வகையில், உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் வலுவான மதிப்பு சங்கிலிகளை உருவாக்குவதன் மூலம் எதிர்கொள்கிறது.”

தொழில்முனைவு இந்த பிரச்சனையை அர்த்தமுள்ள வகையில் குறைக்குமா என்பதை பார்க்க வேண்டும். விருப்பம் சார்ந்த குடிபெயர்வு மற்றும் வேறு வழி இல்லாத குடிபெயர்வு என இரண்டு வகையாக குடிபெயர்வை திட்ட பிரதிந்திகள் பிரிக்கின்றனர். இரண்டாம் வகையை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. .

“தாங்கள் வாழும் இடங்களில் இளைஞர்களால் தொழிலை உருவாக்க முடிந்தால் குடிபெயர்வு என்பது, அவசியம் ஆக அல்லாமல் தேர்வாகிறது,” என்கிறார்.

தொழில்முனைவு என்பது எல்லா இடங்களுக்கமான தீர்வு அல்ல என்பதை இரண்டு அமைப்புகளும் ஒப்புக்கொள்கின்றன. நீடித்த வழிகாட்டுதல், கடன் வசதி, எதிர்பார்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்து இது அமையும். குறிப்பாக கடன் மற்றும் சமூக விலக்கலை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு இது கூடுதலாக பொருந்தும்.

இந்த திட்டத்தின் தாக்கம், உருவாக்கப்படும் தொழில் முயற்சிகளை கொண்டு மட்டும் அல்லாமல், இந்த இளைஞர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடிந்து, தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப வளர்ச்சி அடைய முடிகிறதா என்பதை பொருத்தே அமையும்.

ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter