
வயது என்பது வெறும் எண் தான் என்பதை நிரூபித்து, தனது 80-வது வயதிலும் லட்சத்தீவின் கவரத்தியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்குக் காலை 8 மணிக்கெல்லாம் நர்சிங் பணிக்காகத் துல்லியமாக வந்துவிடுகிறார் ஹிந்தும்பி கௌரம் கக்காடா.
அவர் தனது 60-வது வயதில் முறைப்படி ஓய்வு பெற்றார். ஆனால், அடுத்த மூன்று மாதங்களிலேயே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிக்குத் திரும்பினார். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் அவர் உழைக்கிறார். ஏதேனும், அவசரநிலை என்றால் ஞாயிறு என்றும் பாராமல், நள்ளிரவு என்றும் பார்க்காமல் ஓடி வரத் தயாராக இருக்கிறார்.
“இது கடவுளின் விருப்பம். என்னால் இயன்றவரை நான் தொடர்ந்து பணியாற்றுவேன்,” என்று புன்னகையுடன் கூறுகிறார் ஹிந்தும்பி.
ஹிந்தும்பியின் வியக்கத்தக்க 53 ஆண்டு கால நர்சிங் வாழ்க்கையில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையே முக்கியத் தூண்களாக இருந்துள்ளன. இந்தியாவின் மிகவும் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றான லட்சத்தீவில், 20,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசரக் கால மருத்துவச் சூழல்களில் அவர் பங்களித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டின் புகழ்பெற்ற ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை வென்ற இவர், தற்போது 2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருதின் இறுதிப் பட்டியலில் உள்ள உலகளாவிய டாப் 10 செவிலியர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுத் தொகை கொண்ட இந்த சர்வதேச விருதின் வெற்றியாளராக, இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட உள்ளார்.
கடந்து வந்த பாதை
கவராட்டியில் பிறந்து வளர்ந்த ஹிந்தும்பி, மகாத்மா காந்தியுடன் 1930-ஆம் ஆண்டு தண்டி யாத்திரையில் பங்கேற்று, லட்சத்தீவுக்கு இந்திய தேசிய கொடியைக் கொண்டு வந்த தனது சுதந்திரப் போராட்ட வீரரான தந்தையைப் பற்றிப் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.
‘ஹிந்துஸ்தான்’ என்ற சொல்லில் இருந்துதான் அவரது பெயரில் உள்ள ‘ஹிந்த்’ உருவானது. தந்தையின் அந்தத் தேச சேவை மனப்பான்மையை, மகள் மருத்துவச் சேவையாக மாற்றிக்கொண்டார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, அவரது ஆங்கில ஆசிரியர் எதிர்கால லட்சியம் பற்றிக் கேட்டதற்கு,
“நான் ஒரு நர்ஸ் ஆக வேண்டும்” என்று பதிலளித்துள்ளார். அதற்காக, வட கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பிராவிடென்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படித்தார். மங்களூரு வழியாகக் கோழிக்கோட்டிற்கு மரத்தோணியில் செல்லும் அந்தப் பயணம் முடியவே 7 நாட்கள் ஆகும்.
பத்தாம் வகுப்பை முடித்த பிறகு, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிப்பில் சேர்ந்து 4 ஆண்டுகள் தங்கிப் படித்தார். அந்தப் பாதையில் அப்போது இரண்டு சிறிய கப்பல்கள் மட்டுமே இயங்கியதால், அந்த நான்கு ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூடத் தனது சொந்த ஊரான கவரத்திக்குத் திரும்பவில்லை. படிப்பை முடித்த உடனேயே இந்திரா காந்தி மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸாகப் பணியில் சேர்ந்தார்.
லட்சத்தீவு அனுபவங்கள்
ஹிந்தும்பி தனது பணியைத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் லட்சத்தீவில் மின்சார வசதியோ, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளுடன் எளிதான போக்குவரத்துத் தொடர்போ இருக்கவில்லை. 1975-ஆம் ஆண்டில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்ட ஒரு நள்ளிரவில், ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் நோயாளி ஒருவருக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு அவர் உதவினார்.
“அகத்தி தீவில் கடுமையான ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எங்களது மருத்துவமனை மகப்பேறு மருத்துவருடன் சேர்ந்து மீட்கச் சென்றது இன்னும் நினைவிருக்கிறது. அவரை அங்கே வைத்து குணப்படுத்த முடியாததால், ஒரு மீன்பிடிப் படகில் ஏற்றி, நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டே அவருக்கு ரத்த தானம் செய்தோம். கவராட்டியை அடைந்ததும் மருத்துவர் சிசேரியன் செய்தார். தாயும் சேயும் பாதுகாப்பாக உயிர் பிழைத்தனர்,” என்று தனது சவாலான நாட்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.
அமினி தீவில் காலரா பரவியபோது, அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றி சேவையாற்றினார். ஒரு கப்பல் பயணத்தின்போது, தாயின் வயிற்றில் தலைகீழாக இருந்த ஒரு குழந்தையை பிரசவிக்க மருத்துவருக்கு உதவியுள்ளார். 2004 சுனாமி பேரழிவு மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று எனப் பேரிடர் காலங்களிலும் அவரது அர்ப்பணிப்பு சற்றும் குறையவில்லை.
50 ஆண்டு கால நர்சிங் வாழ்க்கையில் மிகவும் சவாலான தருணம் எது என்ற கேள்விக்கு,
“எதுவுமே இல்லை. என் வேலையை நான் ஒருபோதும் கடினமாக உணர்ந்ததே இல்லை,” என்று மிக எளிமையாகப் பதிலளிக்கிறார்.
நெகிழ்ச்சித் தருணங்கள்...
கவராட்டியின் தெருக்களில் ஹிந்தும்பி நடந்து செல்லும்போது, பலரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, அருகில் இருக்கும் குழந்தையைக் காட்டி, “இந்தக் குழந்தையை நீங்கள்தான் பிரசவித்தீர்கள் அம்மா,” என்று நன்றியோடு கூறுகிறார்கள்.
தபால் நிலையத்திலோ அல்லது பொது இடங்களிலோ, “நீங்கள் உலகிற்குக் கொண்டு வந்த என் மகள் இன்று அரசுச் செயலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறாள்” என்று நெகிழ்ச்சியோடு கூறும் குரல்களை அவர் கடந்து செல்கிறார்.
முகம் தெரியாத அந்நியர்கள் கூட சாலையில் நின்று,
“அந்த இக்கட்டான நேரத்தில் நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள்” என்று கூறுவதுதான் 53 ஆண்டுகால நர்சிங் சேவை அவருக்குத் தந்துள்ள மாபெரும் சொத்து.
தனது குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இந்தச் சேவை சாத்தியமாகி இருக்காது என்று அவர் கூறுகிறார். நள்ளிரவில் அழைப்பு வந்தாலும் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் கொண்டு போய் விடுவார்கள். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, 7:30 மணிக்கெல்லாம் மருத்துவமனைக்குக் கிளம்பும் இந்த வழக்கத்தை அவர் பல ஆண்டுகளாக மாற்றியதே இல்லை.
ஓய்வு பற்றிக் கேட்டால், சிரித்துக் கொண்டே கடந்து போகிறார். அந்த எண்ணமே அவருக்கு இன்னும் வரவில்லை!
உலகளாவிய நர்சிங் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் ஹிந்தும்பி, ஒருவேளை அந்தப் பரிசுத்தொகை கிடைத்தால், அதை ஏழை நோயாளிகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப் போவதாகக் கூறுகிறார்.
கவராட்டியில் இன்று பல இளைஞர்கள் நர்சிங் துறையைத் தேர்ந்தெடுப்பது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அவரது மகனும் ஒரு நர்சிங் உதவியாளராகப் பணிபுரிகிறார். அவரது பேரனும் பி.எஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.
நவீன தலைமுறை செவிலியர்களுக்கு அவர் கூறும் மிகவும் ஆழமான செய்தி இதுதான்:
“நர்சிங் என்பது ஓர் உன்னதமான பணி. படுக்கையில் இருக்கும் நோயாளிகளை நம் பெற்றோரைக் கவனிப்பது போல நாம் அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்தத் தொழிலில் அசாத்தியமான இரக்கமும் மாண்பும் நிறைந்துள்ளது!”
ஆங்கிலத்தில் - ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: ஜெய்
Edited by Induja Raghunathan