+

புதுப்பித்த ஐபிஓ ஆவணங்களைத் தாக்கல் செய்த Zepto - ரூ.8,010 கோடி நிதி திரட்ட இலக்கு!

இந்தியாவின் முன்னணி துரித வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஜெப்டோ தனது புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப பொதுப்பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களைத் (DRHP) தாக்கல் செய்து, புதிய பங்குகள் வெளியீடு மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை (Offer for Sale) மூலம் மொத்தம் ரூ.8,010 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளத

இந்தியாவின் முன்னணி துரித வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான Zepto தனது புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப பொதுப்பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களைத் (DRHP) தாக்கல் செய்து, புதிய பங்குகள் வெளியீடு மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை (Offer for Sale) மூலம் மொத்தம் ரூ.8,010 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

மேலும், 11.347 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்திய பங்குச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஐபிஓ, க்விக்-காமர்ஸ் துறையில் கடும் போட்டி நிலவும் சூழலில் வெளியாகிறது.

இந்தத் துறையில் பிளிங்கிட் மற்றும் இன்ஸ்டாமார்ட் நிறுவனங்களுடன் ஜெப்டோ தீவிரமாக போட்டியிட்டு வருகிறது. இந்த ஐபிஓ-வில் நெக்சஸ் வென்ச்சர்ஸ், காண்ட்ராரி ZEP ஹோல்டிங்ஸ், ரேசர் வென்ச்சர்ஸ் ஜெப்டோ, கெய்சர் ஃபவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் கெய்சர் பெர்மனண்ட் குரூப் அறக்கட்டளை உள்ளிட்ட முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.

2020-ஆம் ஆண்டு ஆதித் பலிச்சா மற்றும் கைவல்ய வோரா ஆகியோரால் தொடங்கப்பட்ட ஜெப்டோ, 2025-26 நிதியாண்டில் ரூ.22,624 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் அதன் வருவாய் ரூ.11,110 கோடியாக இருந்தது. அதே நேரத்தில், நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.4,700 கோடியில் இருந்து ரூ.5,905 கோடியாக அதிகரித்துள்ளது.

ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியை புதிய டார்க் ஸ்டோர்கள் அமைத்தல், தொழில்நுட்ப மேம்பாடு, சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் நிறுவனக் கையகப்படுத்தல்களுக்கு பயன்படுத்த ஜெப்டோ திட்டமிட்டுள்ளது.

நிறுவனம் தனது அறிக்கையில், இந்திய மளிகை சில்லறை விற்பனைத் துறை பாரம்பரிய கடைகளிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட ஆஃப்லைன் விற்பனை, பின்னர், ஆன்லைன் விற்பனை, திட்டமிட்ட நேரத்தில் விநியோகம் மற்றும் தற்போது க்விக்-காமர்ஸ் என தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. உடனடி விநியோகம், தரமான பொருட்கள், அதிக தேர்வுகள், வசதி மற்றும் போட்டித்தன்மை கொண்ட விலைகள் ஆகிய காரணங்களால் இந்தியர்களின் வாங்கும் முறையை க்விக்-காமர்ஸ் முற்றிலும் மாற்றியமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 காலண்டர் ஆண்டில் இந்தியாவின் ஆன்லைன் மளிகை சந்தையின் அளவு ரூ.0.9 முதல் 1.1 டிரில்லியன் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துறையின் ஊடுருவல் வெறும் 1.7% முதல் 2% மட்டுமே இருப்பதாகவும், இது அமெரிக்காவின் சுமார் 12% மற்றும் சீனாவின் சுமார் 7% ஊடுருவலுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாக இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் க்விக்-காமர்ஸ் மளிகை பிரிவு சுமார் 78% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்தப் பிரிவின் மொத்த வணிக மதிப்பு (GMV) ரூ.685 பில்லியன் (சுமார் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவை எட்டியுள்ளது.

இருப்பினும், இந்தியாவின் முதல் 50 பெரிய நகரங்களில்கூட க்விக்-காமர்ஸ் சேவைகள் இன்னும் முழுமையாக ஊடுருவாத நிலையில் இருப்பதால், இந்தத் துறையில் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாக ஜெப்டோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

தொகுப்பு: முத்துகுமார்

facebook twitter