IPO அலை: இந்த வாரம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் மொத்தம் ரூ.6,400 கோடி திரட்ட உள்ள 7 நிறுவனங்கள்!

02:00 PM Aug 17, 2026 | YS TEAM TAMIL

முதன்மைச் சந்தையில் இந்த வாரம் பரபரப்பு தொடர உள்ளது. பிளாக்ஸ்டோன் ஆதரவு பெற்ற ஹொரைசன் இண்டஸ்ட்ரியல் பார்க்ஸ், லலிதா ஜுவல்லரி மார்ட் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் ஆரம்பப் பங்கு வெளியீடு (IPO) மூலம் மொத்தம் ரூ.6,400 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்ட உள்ளன.

இந்த வெளியீடுகள், நடப்பு வாரத்தில் தொடங்கப்பட்ட 5 ஐபிஓ-க்களைத் தொடர்ந்து வருகின்றன. இதற்கு முன் ஆகஸ்ட் மாதத்தில் 3 நிறுவனங்கள் ஏற்கனவே முதன்மைச் சந்தையை அணுகியுள்ளன.

ஹொரைசன் இண்டஸ்ட்ரியல் பார்க்ஸ் ரூ.2,600 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்குகிறது. அதே நாளில், நகை விற்பனை நிறுவனமான லலிதா ஜுவல்லரி மார்ட் ரூ.1,700 கோடி மதிப்பிலான ஐபிஓ-வைத் தொடங்குகிறது.

சங்கர் ஜுவல்லர்ஸ் மற்றும் திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான சன்ஷைன் பிக்சர்ஸ் ஆகியவை ஆகஸ்ட் 18ஆம் தேதி தங்களது ஐபிஓக்களைத் தொடங்குகின்றன. இவற்றின் மூலம் முறையே ரூ.367 கோடி மற்றும் ரூ.282 கோடி திரட்டப்பட உள்ளது.

காஜா கேபிடல் பிராண்டின் கீழ் செயல்படும் காஜா ஆல்டர்நேட்டிவ் அசெட் மேனேஜ்மென்ட் ரூ.550 கோடி மதிப்பிலான ஐபிஓவை ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்குகிறது. டெம்ப்சென்ஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (இந்தியா) ஆகஸ்ட் 20ஆம் தேதியும், ஒருங்கிணைந்த தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தக தளமான ஆக்மாண்ட் என்டர்பிரைசஸ் ஆகஸ்ட் 21ஆம் தேதியும் ஐபிஓவை தொடங்குகின்றன.

இந்த 7 நிறுவனங்களும் இணைந்து ரூ.6,400 கோடிக்கும் அதிகமாக பொதுப் பங்கு வெளியீடுகள் மூலம் திரட்ட உள்ளன. இதன் மூலம் முதன்மைச் சந்தையில் தொடர்ந்து விறுவிறுப்பு நிலவும், என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்படும் நிதி பெரும்பாலும் தொழில் விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட நிறுவனத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். அதேவேளை, ஆஃபர் ஃபார் சேல் (OFS) மூலம் கிடைக்கும் தொகை பங்குகளை விற்பனை செய்யும் பங்குதாரர்களுக்குச் செல்லும்.

இந்த புதிய வெளியீடுகளுடன், 2026ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை 55 ஆக உயரும், என தொழில்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஹொரைசன் இண்டஸ்ட்ரியல் பார்க்ஸின் ரூ.2,600 கோடி ஐபிஓ முழுவதும் புதிய பங்கு வெளியீடாகும். ஒரு பங்கின் விலை ரூ.57 முதல் ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதியை கடன்களைத் திருப்பிச் செலுத்த நிறுவனம் பயன்படுத்த உள்ளது.

லலிதா ஜுவல்லரி மார்ட் ஒரு பங்கின் விலை வரம்பை ரூ.190 முதல் ரூ.201 வரை நிர்ணயித்துள்ளது. ரூ.1,700 கோடி மதிப்பிலான இந்த வெளியீட்டில் ரூ.1,200 கோடி வரையிலான புதிய பங்கு வெளியீடும், ரூ.500 கோடி வரையிலான OFS-ம் இடம்பெற்றுள்ளன.

ஷங்கேஷ் ஜுவெல்லர்ஸ் ரூ.367 கோடி ஐபிஓவுக்கு ஒரு பங்கின் விலை ரூ.88 முதல் ரூ.93 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2.95 கோடி ஈக்விட்டி பங்குகள் வரையிலான புதிய வெளியீடும், 1 கோடி பங்குகள் வரையிலான OFS-ம் இடம்பெற்றுள்ளன.

சன்ஷைன் பிக்சர்ஸ் ரூ.282 கோடி மதிப்பிலான ஐபிஓவுக்கு ஒரு பங்கின் விலையை ரூ.342 முதல் ரூ.360 வரை நிர்ணயித்துள்ளது. இதில் 48 லட்சம் புதிய ஈக்விட்டி பங்குகளும், 30.37 லட்சம் பங்குகளுக்கான OFS-ம் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் மொத்தமாக 78.37 லட்சம் பங்குகள் வெளியிடப்படுகின்றன. நிறுவனத்தின் புரமோட்டர்களான விபுல் அம்ருத்லால் ஷா மற்றும் ஷெஃபாலி விபுல் ஷா ஆகியோர் OFS மூலம் பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.

காஜா ஆல்டர்நேட்டிவ் அசெட் மேனேஜ்மென்ட் ஒரு பங்கின் விலை வரம்பை ரூ.152 முதல் ரூ.160 வரை நிர்ணயித்துள்ளது. ரூ.550 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓவில் ரூ.450 கோடி வரையிலான புதிய பங்கு வெளியீடும், ரூ.100 கோடி வரையிலான OFS-ம் இடம்பெற்றுள்ளன.

டெம்ப்சென்ஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ரூ.95 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடுவதுடன், 1.85 கோடி பங்குகளை OFS முறையில் விற்பனை செய்ய உள்ளது.

ஆக்மாண்ட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ரூ.825 கோடி ஐபிஓவில் ரூ.620 கோடி புதிய பங்கு வெளியீடாகவும், ரூ.205 கோடி OFS ஆகவும் இருக்கும். டெம்ப்சென்ஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் ஆக்மாண்ட் என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் பங்கு விலை வரம்புகள் முறையே திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், விமான சரக்கு போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ஸ்கைவெய்ஸ் ஏர் சர்வீசஸ் ரூ.583 கோடி மதிப்பிலான ஐபிஓவை ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வரும் வாரத்திற்குப் பிறகும் முதன்மைச் சந்தையில் ஐபிஓ நடவடிக்கைகள் தொடர்ந்து விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.