+

ஜூலையில் ரூ.11,000 கோடி ‘ஐபிஓ’ - பங்குச் சந்தைக்கு ரெடியாகும் ‘ஜெப்டோ’!

இந்த தொடக்கப் பங்கு வெளியீடு வெற்றிகரமாக நடைபெற்றால், ஏற்கெனவே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சொமேட்டோ, மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களின் வரிசையில் ஜெப்டோவும் இணையும்.

விரைவு வர்த்தக (Quick Commerce) தளமான ஜெப்டோ ரூ.11,000 கோடி மதிப்பிலான ஆரம்ப பொது பங்கு வெளியீட்டை (IPO) வரும் ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொடக்கப் பங்கு வெளியீடு வெற்றிகரமாக நடைபெற்றால், ஏற்கெனவே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களின் வரிசையில் ஜெப்டோவும் இணையும்.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு, இந்த மாத தொடக்கத்தில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி முதல் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, நிறுவனம் விரைவில் தனது புதுப்பிக்கப்பட்ட வரைவு ரெட் ஹெர்ரிங் விவரக்குறிப்பு (Updated Draft Red Herring Prospectus-UDRHP)-ஐ சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய ஆதித் பலிச்சா மற்றும் கைவல்ய வோரா ஆகியோரால் தொடங்கப்பட்ட ஜெப்டோ, 2025 டிசம்பரில் ரகசிய (Confidential) முறையில் ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்திருந்தது.

ஜூலை 31-க்குள் பங்குச் சந்தையில் பட்டியலாகும் நோக்கத்துடன் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வெளியான பெர்ன்ஸ்டெய்ன் ஆய்வு அறிக்கையில், ஜெப்டோ தனது போட்டியாளர்களைவிட மாறுபட்ட வளர்ச்சி யுக்தியை பின்பற்றுவதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது, அதிக நகரங்களுக்கு விரிவடைவதை விட, குறைந்த நகரங்களில் அதிக சேவை அடர்த்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வழியையே நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

தற்போது ஜெப்டோவுக்கு ஒரு நகரத்திற்கு சராசரியாக 21 ‘டார்க் ஸ்டோர்கள்’ உள்ளன. இதேசமயம் அதன் போட்டியாளர்களுக்கு ஒரு நகரத்திற்கு சராசரியாக 9 கடைகள் மட்டுமே உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

ஜெப்டோ தற்போது 61 நகரங்களில் 1,255 டார்க் ஸ்டோர்களை இயக்கி வருகிறது. அதே நேரத்தில், அதன் போட்டியாளரான Blinkit 243 நகரங்களில் 2,222 கடைகளை கொண்டுள்ளது.

மேலும், ஜெப்டோ-வின் ‘ஸ்டோர் டு பின்கோட்’ துறையில் மிகவும் உயர்ந்ததாகவும், புதிய நகரங்களுக்கு விரிவடைவதை விட ஏற்கனவே உள்ள சந்தைகளில் ஆழமான சேவையை வழங்கும் நோக்கமே நிறுவனத்தின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் பெர்ன்ஸ்டெய்ன் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனத்தின் வலையமைப்பு பெரும்பாலும் மெட்ரோ நகரங்களில் மட்டுமே மையப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிவேக டெலிவரி, அதிக ஆர்டர் எண்ணிக்கை மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்த முடியும் என நிறுவனம் நம்புகிறது.

“அதிக நகரங்களில் சேவை வழங்குவதற்குப் பதிலாக, குறைந்த சந்தைகளில் அதிக செயல்திறன் மற்றும் லாபகரத்தன்மையை உருவாக்கும் முயற்சிதான் ஜெப்டோ-வின் முக்கிய உத்தி” என பெர்ன்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளது.

இந்த பங்கு வெளியீட்டு முயற்சி, நிறுவனத்துக்கு சமீபத்தில் கிடைத்த வலுவான தனியார் முதலீட்டு ஆதரவிற்குப் பிறகு நடைபெறுகிறது.

2025 அக்டோபரில், கலிபோர்னியா பொது ஊழியர்கள் ஓய்வு அமைப்புத் தலைமையிலான முதலீட்டு சுற்றில் ஜெப்டோ , 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.3,757.5 கோடி) நிதி திரட்டியது. அப்போது நிறுவனத்தின் மதிப்பு 7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது.

இதற்கு முன்பு, 2023 ஆகஸ்டில் நடைபெற்ற Series E நிதி திரட்டலில் 200 மில்லியன் டாலர்கள் பெற்றதன் மூலம் ஜெப்டோ ‘யூனிகார்ன்’ அந்தஸ்தையும் பெற்றிருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter