ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப்களில் ரூ.80-100 கோடி முதலீடு செய்ய JIIF திட்டம்!

01:36 PM Apr 07, 2026 | muthu kumar

இந்திய ஸ்டார்ட்அப் சூழலில் தனது முதலீட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில் JITO Incubation and Innovation Foundation (JIIF) அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ரூ.80–100 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், 100க்கும் மேற்பட்ட துவக்க நிலைக்கு முந்தைய (pre-seed) மற்றும் துவக்க நிலை (seed) ஸ்டார்ட்அப்'களில் ரூ.150 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 25 ஸ்டார்ட்அப்'களை ஆதரிக்க திட்டமிட்டுள்ள JIIF, ஒவ்வொரு முதலீட்டிற்கும் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யும். முதலீட்டு அளவு ஸ்டார்ட்அப்'பின் நிலை மற்றும் துறையைப் பொறுத்து மாறுபடும்.

மேலும், மும்பையை தளமாகக் கொண்ட Atomic Capital நிறுவனத்தில் ரூ.26.5 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் fund-of-funds என்ற புதிய முதலீட்டு முறையிலும் JIIF தன் இருப்பைப் பதிவு செய்துள்ளது. இதனால் நேரடி முதலீட்டுக்கு அப்பாற்பட்டு மேலும் பல வாய்ப்புகளை அணுக முடியும், என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய accelerator திட்டத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, fintech, காலநிலை மாற்றம், mobility மற்றும் digital infrastructure போன்ற துறைகளில் ஆரம்பநிலை ஸ்டார்ட்அப்'களுக்கு இந்த திட்டம் ஆதரவளிக்கும்.

“மூலதனம் அளிப்பதைக் கடந்தும் நிறுவனர் மையப்படுத்தப்பட்ட முதலீட்டு தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். Startup Singham மற்றும் Lead to Unicorn போன்ற தளங்களுடன் இணைந்திருப்பது தரமான முதலீட்டு வாய்ப்புகளை எங்களுக்கு வழங்கியுள்ளது,” என்று JIIF தலைவர் பண்டாரி தெரிவித்தார்.

JIIF நிறுவனத்தின் முதலீட்டு தொகுப்பு பல்வேறு துறைகளில் பரவியுள்ளது. அதில், AI மற்றும் deeptech 15%, consumer மற்றும் D2C 25%, சுகாதாரம் 15%, fintech 15–20%, mobility மற்றும் sustainability 20% உள்ளிட்டவை அடங்கும்.

Aten Porus, Elixia, Zintlr, DTown Robotics, Nautical Wings, BatX, S3V, Stroom, Snackible, Elefant போன்ற பல ஸ்டார்ட்அப்'களில் JIIF முதலீடு செய்துள்ளது. SaaS, பாதுகாப்பு தொழில்நுட்பம், mobility, sustainability, health tech மற்றும் D2C போன்ற பல துறைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட exit-களை JIIF பதிவு செய்துள்ளது. குறிப்பாக consumer, mobility மற்றும் fintech துறைகளில் secondary transactions மற்றும் buyback முறைகள் மூலம் வேகமான exit-கள் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. மேலும், முதலீட்டு காலப்பகுதியில் 20–30% க்கும் அதிகமான IRR இலக்கை அடையும் வகையில் வருவாய் கிடைத்துள்ளதாகவும் JIIF தெரிவித்துள்ளது.