எவரெஸ்ட் மாரத்தானில் ஹாட்ரிக் வெற்றி: ‘கல்பனா சாவ்லா’ விருது வென்ற கோவை நௌஷீன் பானு சந்த்!

04:00 PM Aug 17, 2026 | Chitra Ramaraj

உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. மலையேற்ற வீரர்கள் அனைவருக்குமே இந்த எவரெஸ்ட் சிகரத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது தொட்டுவிட மாட்டோமா என்பதுதான் ஆகப் பெரும் லட்சியங்களில் ஒன்று.

அப்படிப்பட்ட எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் நடைபெறும், டென்சிங் ஹிலாரி மாரத்தான் போட்டியில் வென்று, அதுவும் ஒருமுறை அல்ல... தொடர்ந்து மூன்று முறை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்தான் கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த். மூன்று முறையும், எவரெஸ்ட்டில் முழு மாரத்தான் தூரமான 42.195 கிமீ-ஐ இவர் வெற்றிகரமாகக் கடந்துள்ளார். அதோடு, தமிழ்நாட்டில் இருந்து இந்த மாரத்தானில் கலந்து கொண்ட ஒரே பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

அவரது இந்த ஹாட்ரிக் வெற்றியைக் கௌரவிக்கும் வகையில், இந்தாண்டிற்கான கல்பனா சாவ்லா விருதினை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. சுதந்திரத்தையொட்டி இன்று (ஆகஸ்ட் 15ம் தேதி) நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த விருதினை நௌஷீன் பானுவிற்கு வழங்கினார்.

யார் இந்த எவரெஸ்ட் நாயகி நௌஷீன்?

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்தவரான நௌஷீன் பானு சந்த்திற்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது அதீத ஆர்வம். தங்கையின் இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும், சிறுவயதில் இருந்தே அவரை தொடர்ந்து ஊக்குவித்து வந்துள்ளனர்.  

ஏரோநாட்டிக்கல் துறையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள நௌஷீன், இந்த மாரத்தான் ஓட்டத்திற்கான பயிற்சி தனது ஆறு வயதில் ஆரம்பித்தது என்கிறார்.

“எனது ஆறு வயதில் கோயில் படிக்கட்டுகளில் ஆரம்பித்ததுதான் இந்த ஓட்டம். பெண்கள் குறிப்பாக எங்கள் சமூகத்தில் பலர் நன்கு படித்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றனர். ஆனால் நான் அப்படி இருந்துவிடக் கூடாது என்பதில் எனது அண்ணன் உறுதியாக இருந்தார்.”

நீ ஏதாவது சாதித்தே ஆக வேண்டும் என அவர் தந்த ஊக்கம் தான் இன்று என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. இது ஆரம்பம்தான் இன்னும் நிறைய உயரங்களைத் தொட வேண்டும், என்கிறார் நௌஷீன்.

எவரெஸ்ட் மாரத்தானில் ஹாட்ரிக் வெற்றி

உலகிலேயே மிகக் கடுமையான மற்றும் மிக உயரமான இடத்தில் நடைபெறும் மாரத்தான்களில் ஒன்றுதான், இந்த டென்சிங்-ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான். சுமார் 42.195 கிமீ தூரம் இந்த மாரத்தான் போட்டிக்கான தூரம். குறைவான ஆக்ஸிஜன், உறைபனி, கரடுமுரடான மலைப்பாதைகள் என வார்த்தைகளில் விவரிக்க முடியாத சூழலில், கடினமான பயிற்சியும், விடாப்பிடியான மனஉறுதியும் கொண்டவர்கள்தான் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

இந்த சவாலான போட்டியில்தான் தொடர்ந்து 2024ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை மூன்று முறை கலந்து கொண்டு, முழு தூரத்தையும் கடந்து வெற்றி பெற்றுள்ளார் நௌஷீன். இந்தாண்டிற்கான இந்த மாரத்தான் போட்டியில் சர்வதேச மலையேற்ற வீரர்கள் 254 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் முழு மாரத்தான் தொலைவையும் கடந்த ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையோடு, கடந்த மே 29ம் தேதி நௌஷீன் இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடினார்.

டென்சிங்-ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் போட்டி மட்டுமின்றி, இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் நௌஷீனுக்கு உண்டு.  

குடும்பத்தினருடன் நௌஷீன்

கல்பனா சாவ்லா விருது

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை வழங்கி வருகிறது. இந்தாண்டிற்கான இந்த விருது, குறைந்த ஆக்சிஜன், குளிர் மற்றும் கரடு முரடான இமயமலைப் பகுதியின் கடுமையான சவால்களை எதிர்கொண்டு, சாதனைகளைப் படைத்ததற்காக நௌஷீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்த விருதினை முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த விருதினை நௌஷூக்கு வழங்கினார். விருது பெற்ற அவருக்கு சமூகவலைதளப் பக்கங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.