ஏழை மணப்பெண்களுக்கு திருமண ஆடைகளை இலவசமாக வழங்கும் 'ஆடை வங்கி' - கேரள நாசரின் உன்னத முயற்சி!

11:56 AM May 15, 2025 | YS TEAM TAMIL

ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வின் முக்கியமான நிகழ்வான அவர்களது திருமணத்தில், மணப்பெண்ணாக ஆடை, ஆபரணங்கள் அணிந்து ஜொலிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் அனைத்து மணப்பெண்ணுக்கும் அமைவதில்லை. இதை கவனித்த சமூக சேவைகளில் தன்னை அர்பணித்துவந்த நாசர், அதற்கான தீர்வாக மணப்பெண்களுக்கான இலவச ஆடை வங்கியை உருவாக்கி, ஆயிரத்துக்கும் மேலான மணப்பெண்களுக்கு ஆடைகளை வழங்கி மகிழ்வித்துள்ளார்...

மணப்பெண்களை மகிழ்விக்கும் "ஆடை வங்கி!"

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தூதா என்ற கிராமத்தைச் சேர்ந்த நாசர் துாதா, கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள வறிய பெண்களுக்கு இலவச மணப்பெண் ஆடைகளை வழங்கும் சமூகத்தால் இயக்கப்படும் 'ஆடை வங்கி'யை நடத்தி வருகிறார்.

முதலில் நாசர் மணப்பெண் ஆடைகளை நன்கொடையாக வழங்குபவர்களிடமிருந்து சேகரித்து, அவற்றை சுத்தம் செய்து, வாங்க முடியாத மணப்பெண்களுக்கு அவற்றை விநியோகிக்கிறார். ஆனால், சமூக நலன் கருதி நாசர் செயலாற்றிவரும் ஒரே முயற்சி ஆடை வங்கி மட்டுமல்ல. சிறு வயதிலிருந்தே, அவரது தாயார் பிறருக்கு உதவி செய்வதை பார்த்து வளர்ந்த அவருக்கு, பிறரை பற்றியும் நினை என்ற எண்ணம் பால்ய வயதிலே மனதில் திடமாகப் பதிந்தது.

"எங்களது குடும்பம் பெரிய வசதியானதில்லை. எங்களுக்கே மிகக் குறைவாகவே இருந்தபோதும், இருக்கிற கொஞ்சத்திலும் கொஞ்சத்தை அம்மா பிறருக்கு உதவுவதைப் பார்த்து வளர்ந்தேன். அது என்னுள்ளே பதிந்துபோனது. உண்மையில், இது தொண்டு அல்ல; இயன்றதை செய்ய வேண்டும்," என்று அவர் சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.

சவுதி அரேபியாவில் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாக 10 ஆண்டுகளை கழித்த பிறகு, அர்த்தமுள்ள ஒன்றைச் செய்ய விரும்பி 2012ம் ஆண்டில் அவரது சொந்த ஊருக்கு திரும்பினார் நாசர். ஒரு சமூக நோக்கத்துடன் நம்பிக்கையான நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து, எளிய குடும்பங்களில் நடக்கும் திருமண விசேஷங்களுக்கு வேண்டிய அரிசியை சேகரித்து உதவுவது, வீடற்றவர்களுக்கான இருப்பிடத்தை அமைத்து கொடுப்பது, ஒரு இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், கட்டில்கள், தண்ணீர் படுக்கைகள் மற்றும் ஏர் படுக்கைகள் வழங்க ஏற்பாடு செய்வது என தொடர்ந்து சமூக அக்கறையுடன் செயலாற்றி வருகிறார்.

மேலும், எளிய குடும்பத்தாரின் வீட்டு திருமண நிகழ்வுகளுக்கு உணவுப்பொருள்களை சேகரித்து வழங்கி, உதவி செய்து கொண்டிருந்த சமயத்தில் ​​குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மணப்பெண் ஆடைகளை வாங்குவது எவ்வளவு கடினம் என்பதை நாசர் உணர்ந்தார்.

ஏனெனில் பெரும்பாலான எளிய குடும்பங்களின் திருமண பட்ஜெட்டில், மணப்பெண் ஆடை என்பது எக்ஸ்பென்சிவ் ஒன்றாக இருக்கிறது. அவர்களில் சிலர் அவற்றை ஏற்பாடு செய்ய முடியுமா என்று கூட நாசரிடம் கேட்டுள்ளனர், ஆனால் மணப்பெண் ஆடைகளை வாங்க அவரிடம் நிதி இல்லை. இந்த எளிய கவனிப்பு அவரது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆடை வங்கி திட்டத்தின் பிறப்புக்கு வழிவகுத்தது.

"மக்களின் அலமாரிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திருமண ஆடைகள் பூட்டப்பட்டிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இவை அழகான ஆடைகள், அரிதாகவே பயன்படுத்தப்பட்டு, தூசி சேர்ந்து கிடக்கின்றன. அவற்றை சேகரித்து இல்லாதோரிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தால் என்ன என்று நினைத்தேன்?" என்று ஆடை வங்கி திட்டத்தின் யோசனையை பகிர்ந்தார் நாசர்.

இந்த யோசனையின் நீட்சியாக 2020ம் ஆண்டு வாக்கில், ஃபேஸ்புக்கில் மக்களிடம் அவர்களது மணப்பெண் ஆடைகளை நன்கொடையாக வழங்குமாறு ஒரு வேண்டுகோள்விடுத்து பதிவிட்டிருந்தார். முதலில் அதற்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. குறுகிய காலத்திலே, இந்த யோசனை ஈர்க்கப்பட்டது, நன்கொடைகள் வரத் தொடங்கின. முதலில் அருகிலுள்ள நகரங்களிலிருந்தும், பின்னர் மாவட்டங்கள் முழுவதிலும் இருந்தும், இறுதியில் நாடு முழுவதிலுமிருந்து வந்தன.

பிபிசி போன்ற சேனல்கள் மற்றும் முன்னணி தேசிய செய்தித்தாள்கள் உட்பட பிரதான ஊடகங்களிலிருந்தும் ஆடை வங்கி பரவலான கவனத்தை பெற்று பத்திரிகை செய்திகளில் இடம் பெற்றது. இது மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த மணப்பெண் ஆடை நன்கொடையாளர்களின் பங்களிப்புகளுக்கு வழிவகுத்தது.

"ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை மதிப்புடைய மணப்பெண் ஆடைகள் இலவசம்..."

"முதல் திருமண ஆடையை பாலக்காட்டில் உள்ள ஒரு குடும்பத்திற்கு வழங்கினோம். அச்செய்தி ஊர் முழுவதும் பரவியது, உள்ளூர் செய்தித்தாள்கள் எங்களைப் பற்றி செய்தி வெளியிட்டன, அதைத் தொடர்ந்து பலர் பங்களிக்க முன்வந்தனர்," என்றார்.

ஆரம்பத்தில், நாசர் ஆடைகளை வீட்டிலேயே சேமித்து வைத்தார். அவரது குடும்பத்தினர் அவரது முயற்சிகளுக்கு உதவினார்கள். பின்னர், அவர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதை ஆடை வங்கியாக மாற்றி அவரது முயற்சியை முறைப்படுத்தினார். அங்கு நூற்றுக்கணக்கான புடவைகள், சல்வார் செட்கள் மற்றும் திருமண ஆடைகள் உலர் சுத்தம் செய்யப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆடைகள் ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை மதிப்புடையவை என்று நாசர் கூறினார்.

மணப்பெண்கள் அவர்களது விருப்பத்திற்கேற்ற ஆடைகளை நாசரிடம் கேட்கிறார். அவர்கள் விரும்பும் ஆடைகளின் புகைப்படங்களை நாசர் அவர்களுக்கு அனுப்புகிறார். பின், தேர்வு செய்யப்படும் ஆடையை அவர் மணப்பெண்களுக்கு கூரியர் மூலம் அனுப்புகிறார்.

"நாங்கள் எதையும் விற்க மாட்டோம். எல்லாம் இலவசம். நாங்கள் யாருக்கும் ஒருபோதும் இரண்டாம் நிலை சிகிச்சை அளிக்க மாட்டோம். நாங்கள் அவர்களுக்கு தேர்வு மற்றும் கண்ணியத்தை வழங்குகிறோம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

மணப்பெண் உடைகளை வாங்கும் குடும்பங்களின் கண்ணியத்தையும் தனியுரிமையையும் பராமரிப்பதில் நாசர் உறுதியாக இருக்கிறார். மேலும், இந்த ஆடைகளைத் அவர்கள் திருப்பித் தர வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறினார்.

நாங்கள் மணப்பெண்களிடம் திருமணத்தின் புகைப்படங்களைக் கேட்பதில்லை. மணப்பெண்கள் ஆடைகளை அணிந்திருக்கும் படங்களை அவர்களே முன்வந்து அனுப்பினால், நாங்கள் அவற்றை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இது நிபந்தனைக்குட்பட்டது அல்ல. ஏனெனில், நாங்கள் விளம்பரத்தை தேடி கொள்ளும் நோக்கத்தில் செயல்படவில்லை. ஆடைகளை வழங்கியவர்கள் மற்றும் ஆடைகளைக் கோரியவர்களின் பதிவேட்டை நாங்கள் பராமரிக்கிறோம்.

அவர்கள் விரும்பினால் ஆடைகளை அவர்களே வைத்து கொள்ளலாம் அல்லது, ஆடை தேவைப்படக்கூடிய மற்றவர்களுக்கு அவர்களே அதை வழங்கலாம். அவர்கள் அவற்றைத் திருப்பித் தந்தால், அவை மீண்டும் உலர் சுத்தம் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்படும்," என்றார்.

ஆடை வங்கி தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனை கொண்டாடும்விதமாக சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உள்ளூர் அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் கேரள விளையாட்டு அமைச்சர் வி.அப்துர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"தற்போது, ​​எங்களிடம் சுமார் 1,000 ஆடைகள் கையிருப்பில் உள்ளன. மேலும், மணப்பெண்களுக்கு ஆபரணங்களையும் வழங்க விரும்புகிறேன். இதற்கு குறைந்தது ரூ. 3 லட்சம் நிதித் தேவைப்படும். இதற்கும் ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்!" என்று அவர் முடித்தார்.