மதுரை SimbliAi நிறுவனத்திற்கு ‘புதுமையாக்க ஏஐ ஸ்டார்ட் அப் விருது’

11:42 AM Dec 18, 2025 | cyber simman

இந்தியாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் 'சிம்ப்ளிஏஐ' (SimbliAi) இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற ஏஐ ஸ்டார்ட்-அப் விருது வழங்கும் விழாவில் ‘ஆண்டின் சிறந்த புதுமையாக்க ஏஐ ஸ்டார்ட் அப்’ எனும் விருதை வென்றுள்ளது.

நடைமுறை சார்ந்த, நிகழ் உலக வர்த்தக செயல்பாடுகளுக்கான ஏஐ ஏஜெண்ட்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள SimbliAi நிறுவனத்தின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த விருது அமைவதாக நிறுவனம் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்நிறுவனம், வழக்கமான தானியங்கிமயத்தை மீறி அளவிடக்கூடிய செயல்பாட்டு மதிப்பை அளிக்கக் கூடிய ஏஐ அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

அண்மையில் நிறுவனம் தனது முன்னணி ஏஐ ஏஜெண்ட் சேவை ஆல்பிரட்–ஐ தீவிர மேம்பாட்டு பணிகளுக்குப்பிறகு அறிமுகம் செய்தது. வர்த்தக தேவைகளை தொடர்ந்து கவனித்து மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப ஈடுகொடுக்கும் வகையில் இந்த மேடை உருவாக்கப்பட்டுள்ளது.

”நம்பகமான, வளர்ச்சி வாய்ப்புள்ள மற்றும் வர்த்தகங்களுக்கு தயாரான ஏஐ தீர்வுகளை உருவாக்கும் நிறுவனத்தின் நோக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த விருது அமைகிறது. இந்த மேடையின் வெற்றிகரமான அறிமுகத்திற்கு வித்திட்ட பொறியியல் மற்றும் பிராடக்ட் குழுவின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம், என்று இணை நிறுவனர் வெங்கடேஷ் சி.ஆர் கூறியுள்ளார்.

இந்த விருதை அடுத்து நிறுவனம் அடுத்த தலைமுறை ஏஐ ஏஜெண்ட்களை உருவாக்கும் கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், மேம்பட்ட, சூழலை புரிந்து கொண்டு செயல்படக்கூடிய சேவைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சி.ஆர்.வெங்கடேஷ், இணை நிறுவனராக உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், நிகழ் உலக வர்த்தக சூழல்களுக்கான ஏஐ ஏஜெண்ட்களை உருவாக்கி வருகிறது. பல்வேறு துறைகளில் பயன்படக்கூடிய நடைமுறை ஏஐ ஏஜெண்ட்களை உருவாக்குவதை நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.


Edited by Induja Raghunathan