ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம் அடுத்த மாதம் 20ம் தேதி வாக்கில் முதல் கட்ட ஆட்குறைப்பை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக, விஷயம் அறிந்த மூன்று பேரை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் கட்டமாக மெட்டா நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் 10 சதவீதம் அல்லது 8,000 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. மேலும், இந்த ஆண்டு பிற்பகுதியில் இரண்டாவது கட்ட ஆட்குறைப்பை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. ஏஐ திறன் சார்ந்த செயல்பாடுகள் அடிப்படையில் நிர்வாகிகள் இது தொடர்பாக தீர்மானிப்பார்கள் என்றுத் தெரிகிறது.
நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கடந்த மாதம் ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மெட்டா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
மெட்டா சி.இ.ஓ. மார்க் ஜக்கர்பர்க் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏஐ சார்ந்து மாற்றி அமைக்கும் வகையில் இந்த நுட்பத்தில் கோடிக்கணக்கான டாலர்களை செலவிட்டு வருகிறது. இது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்தியிலான பரவலான போக்கிற்கு ஏற்ப அமைகிறது.
இதே போல, அமேசான் நிறுவனம் அண்மை மாதங்களில் 30,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அண்மையில் நிதி நுட்ப நிறுவனம் பிளாக் தனது ஊழியர்களில் பாதி பேரை நீக்கியது.
இந்த இரண்டு நடவடிக்கைகளுமே ஏஐ செயல் திறன் சார்ந்து மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உலக அளவில் பணி நீக்கங்களை பின் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் Layoffs.fyi இந்த ஆண்டு இதுவரை 73,212 நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 2024ல் இந்த எண்ணிக்கை 153,000 ஆக இருந்தது.
மெட்டா நிறுவனம் கடந்த 2022 மற்றும் 2023 ம் ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அப்போது 21,000 பேர் நீக்கப்பட்டனர். இதன் விளைவாக மெட்டா பங்குகள் சரிந்தன. மேலும், கோவிட் கால வளர்ச்சி கணிப்பை தக்க வைக்க முடியாமல் நிறுவனம் தடுமாறியது.
நிறுவனம் தற்போது மேம்பட்ட நிதி நிலையில் இருந்தாலும், குறைவான நிர்வாக அடுக்கள் மற்றும் ஏஐ திறன் ஊழியர்களால் மேம்பட்ட செயல்திறனை நிறுவன நிர்வாகிகள் எதிர்நோக்குகின்றனர்.
நிறுவனம் கடந்த ஆண்டு 200 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டியதோடு, ஏஐ முதலீட்டை மீறி 60 பில்லியன் டாலர் லாபம் கண்டது. மெட்டா தற்போது 79,000 ஊழியர்களை கொண்டுள்ளது.
அண்மை வாரங்களில் மெட்டா தனது ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் ஊழியர்களை மாற்றி அமைத்து, பல பொறியாளர்களை உள்ளுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஏஐ பிரிவுக்கு மாற்றியுள்ளது. கடந்த மாதம் உருவாக்கப்பட்ட சிறு வர்த்தகம் பிரிவுக்கும் ஊழியர்கள் மாற்றப்படலாம், என கூறப்படுகிறது.
செய்தி- என்டிடிவி, தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan