22,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா Microsoft? - நிறுவனம் தந்த விளக்கம்!

02:30 PM Jan 09, 2026 | cyber simman

இந்த மாதம் 22 ஆயிரத்திற்கும் மேலான பணி நீக்கத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிரமாக மறுத்துள்ளது. இந்த யூகம் முற்றிலும் தவறானது, என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐடி துறையில் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்த மாதம் 22,000 பேரை நீக்க இருப்பதாக செய்தி வெளியானது.

அஸுர் கிளவுட், எக்ஸ் பாக்ஸ் மற்றும் சர்வதேச விற்பனை பிரிவுகளில் இந்த ஆட்குறைப்பு நிகழ இருப்பதாக தகவல்கள் வெளியாகின. டிப்ரேங்க்ஸ் இணையதளம் இது தொடர்பாக முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, 15,000 மேலான ஊழியர்களை நீக்கியது. கடந்த ஜூலை மாதம் பெரிய அளவில் 9,000 பேர் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கத்திலேயே மைக்ரோசாப்ட் அதிரடி ஆட்குறைப்பை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுவது தொழில்நுட்ப வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏஐ உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருவதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

எனினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது. நிறுவன தகவல் தொடர்பு முதன்மை அதிகாரி ஃபிரான்க் ஷா இது தொடர்பான எக்ஸ் பதிவில், இந்த யூகங்கள் முற்றிலும் தவறானவை, என்று தெரிவித்துள்ளார்.

100 சதவீதம் யூகம் சார்ந்தவ, தவறானவை என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக விண்டோஸ் செண்ட்ரல் இணையதளமும், இந்த செய்தி உண்மை அல்ல, என கூறியிருந்தது. குறைந்தபட்சம் எக்ஸ் பாக்ஸ் பிரிவில் இது தவறானது என தெரிவித்திருந்தது. இந்நிலையில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.


Edited by Induja Raghunathan