
பல அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி, தனது திறமையை இசைத்துறையில் நிரூபித்து, இன்று அடுத்தகட்டமாக அரசியலுக்குள் பிரவேசித்து வெற்றி கண்டுள்ளார் இளம் பாடகியான மைதிலி தாக்கூர். இந்த வெற்றி மூலம், 25 வயதில் பீகார் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

பீகாரின் இளம் எம்.எல்.ஏ
பீகார் சட்டசபைத் தேர்தலில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் இளம் பாடகி மைதிலி தாக்கூர். 25 வயதேயான அவர், சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம். அவரது திறமைக்காக அவர் பெற்ற பாராட்டுகளைவிட, ஆரம்பகாலத்தில் நிராகரிப்புகளும், அவமானங்களும் அதிகம்.
10 வயதில் பாடகியாக அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கிய போதே, பள்ளிகளில் கேலி, கிண்டல், ரியாலிட்டி ஷோக்களில் நிராகரிப்பு, என பல தடைகளைச் சந்தித்தார். சமூகவலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் செல்லமாக அழைப்பதே, ‘முட்டாள் பீகாரி’ என்றுதான். அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரினால், இதுவரை 17 வீடுகளை மாற்றியுள்ளார் இந்த இளம் பாடகி.
ஆனாலும், தொடர்ந்து மனம் தளராமல் அவர் தனது திறமைகளை வெளிப்படுத்தி, இன்று பிரபலமான பாடகியாக மட்டுமல்லாமல், பீகாரின் இளம் எம்.எல்.ஏ.வாகவும் மாறி இருக்கிறார். அவரது தன்னம்பிக்கைக்கு கிடைத்த இந்த வெற்றிதான் இன்று ஊடகங்களில் தலைப்புச் செய்தியே.

யார் இந்த மைதிலி தாக்கூர்?
கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி வடக்கு பீகாரில் உள்ள மதுபனி மாவட்டத்தின் பெனிபட்டி பிறந்தவர் மைதிலி தாக்கூர். மைதிலியின் தந்தை பாரம்பரிய பாடகர். பாடல்கள் பாடுவதன் மூலம் கிடைத்த வருமானத்தில்தான் அவர்களது குடும்பம் வாழ்ந்து வந்தது. தனது தந்தையையே தனது குருவாகக் கொண்டு மைதிலியும் இசையைக் கற்றுக் கொண்டார்.
தனது பழைய நேர்காணல் ஒன்றில், தான் கடந்து வந்த கடினமான பாதைகளைக் குறித்து மனம் திறந்துள்ளார் மைதிலி. தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில்,
அவரது முதல் முயற்சியான 'சரிகம லிட்டிள் சாம்ப்ஸ்' நிகழ்ச்சியில் தான் நிராகரிக்கப்பட்டது குறித்தும், அதற்காக ‘தான் நிறைய அழுதேன்’ என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் மைதிலி.
மேலும் அதில், நான் நிராகரிக்கப்பட்டபோது, பாலிவுட் பாடல்களைப் பாடுவதற்கு அப்படித்தான் தேவைப்பட்டாலும் நான் பாடுவேன் என்று என்னை நானே சொல்லிக் கொண்டேன்.
“சில நேரங்களில் நான் ஏன் நிராகரிக்கப்படுகிறேன் என்று கூட அவர்கள் சொல்ல மாட்டார்கள். அப்போதெல்லாம் நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். தொடர்ச்சியான தோல்விகள் என்னை மிகவும் பாதித்தன. இசையை முற்றிலும் விட்டுவிடலாமா என்றுகூட யோசித்தேன். பாடுவதை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராக விரும்பினேன். ஏனென்றால் நான் படிப்பிலும் சிறந்து விளங்கினேன்,” என வேதனையுடன் அந்த நாட்களை நினைவு கூர்ந்துள்ளார் மைதிலி.
பாரம்பரிய இசைப்படி பாடுவதாக காரணம் கூறி தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் அவரை நிகாரித்தார்கள். ஆனாலும் தன் தந்தையின் வார்த்தைக்குக்குக் கட்டுப்பட்டு தொடர்ந்து தனது ஸ்டைலிலேயே அவர் பாடி வந்தார். மற்றவர்களின் விமர்சனங்களுக்காக தனது ஸ்டைலை அவர் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

தனிமைப் படுத்தப்பட்ட மைதிலி
மைதிலியின் போராட்டங்கள் மேடைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவரது திறமையின் சமயத்தில் அவருக்கு நல்லதாகவும், சமயத்தில் அவருக்கு பிரச்சினையாகவும் மாறிப் போனது. ஆம், அவர் பாடும் திறமையே அவருக்கு தனியார் பள்ளி ஒன்றில் இலவச சேர்க்கையைப் பெற்றுத் தந்தது. ஆனால் பணக்கார மாணவர்கள் நிரம்பி இருந்த அந்தப் பள்ளி, அவளை மனதளவில் தனிமைப் படுத்தியது.
“எனக்கு என் வயதுப் பெண்கள் மீதே ஒருவித பயம் இருந்தது. அவர்களின் கருத்துக்களுக்கு நான் பயந்தேன். அவர்கள் என்னை, ‘முட்டாள் பிஹாரி’ என்று சொல்வார்கள்,” என்கிறார் மைதிலி.
பீகாரியாக இருப்பது எப்படி ஒரு அவமானமாக மாற்றப்பட்டது என்பதை அந்தப் பேட்டியில் அவர் பின்வருமாறு விளக்குகிறார்,
“அது ஒரு திட்டு வார்த்தை போல ஆகிவிட்டது. ஹரியானாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டால், அவர்கள் ஒருவரையொருவர் 'பீகாரி' என்று அழைத்து மற்றவரைத் தாழ்த்திப் பேசுவார்கள். நான் முதல் பெஞ்சர் ஆனேன். ஆனாலும் ஒருபோதும் நண்பர்களை உருவாக்க முடியவில்லை.“
அவர்களுடைய பேச்சுகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் பெரும்பாலும் தங்களது பெரிய டூர் பற்றியோ, அல்லது அனைவரும் சேர்ந்து தூங்கும் ஸ்லீப் ஓவர் பற்றியோ பேசுவார்கள். எங்கள் குடும்பம் அவர்களுக்கு இணையான பொருளாதார வசதி கொண்டதாக இல்லாததால், நான் அவர்களுடன் சேர்ந்து பேசுவதைத் தவிர்த்தேன். அதோடு கூடவே, நான் நஜாப்கரில் தங்கியிருந்தேன், அது மிகவும் தொலைவில் இருந்தது, என் பள்ளியில் உள்ள பெண்களிடம் இதைச் சொல்ல வெட்கப்பட்டேன், எனக் கூறியுள்ளார் மைதிலி.
இதேபோன்று மற்றொரு பேட்டியொன்றில், மைதிலியின் தாயார், தங்களது குடும்பம் சந்தித்த பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். அதில் அவர்,
‘பத்து வருடத்தில் நாங்கள் சுமார் 17 வீடுகளை மாற்றினோம். பெரும்பாலும் எங்களது வீடு ஒரு அறை கொண்டதாகவே இருக்கும். அதுவும் வேறொருவரின் வீட்டோடு இணைக்கப்பட்டிருக்கும். ஏதாவது ஒரு காரணம் கூறி எங்களைக் காலி செய்ய வைத்து விடுவார்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

மாற்றம் கண்ட வாழ்க்கை
மைதிலி, 2017ம் ஆண்டு ‘ரைசிங் ஸ்டார்' நிகழ்ச்சியில் முதல் ரன்னர்-அப் ஆக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக, டெல்லி துவாரகாவில் மைதிலியின் குடும்பம் ஒரு வீட்டை வாங்கியது. பின்னர், 2020ம் ஆண்டு ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் குடியேறினர். அந்த வீடு ஒலி புகா வண்ணம் சவுண்ட்ப்ரூப் (soundproofed) செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகே, அக்கம்பக்கத்தாரின் புகார்கள் குறைந்தன.
ரியாலிட்டி ஷோவில் மைதிலி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர் மற்றும் யாஷ் சோப்ராவின் அலுவலகங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் வந்தன. அவரது வீடியோக்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்தன.
இந்தியாவின் நாட்டுப்புற மரபுகளை போற்றும் ஒரு இசைக்குழுவை தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து, மைதிலி நடத்தி வருகிறார். இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் நாட்டுப்புற இசையில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக ஊடகங்களின் வளர்ச்சியுடன் அவரது புகழ் உயர்ந்தது. இன்று, அவருக்கு யூடியூப்பில் 5 மில்லியன் சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் பின்தொடர்பவர்களும், ஃபேஸ்புக்கில் 14 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும் உள்ளனர். மைதிலி தன் இசையின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் கலைஞர்களுக்கான உயரிய விருதான ’உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவா புரஸ்கார்’ விருதை, கடந்த 2021ம் ஆண்டு மைதிலிக்கு சங்கீத நாடக அகாடமி வழங்கியது.

பிரதமர் மோடியுடன் மைதிலி தாக்கூர்
முதல் வாய்ப்பிலேயே வெற்றிக்கனி
இசைத் துறையில் பிரபலமான மைதிலி, இந்தாண்டு சில மாதங்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்தபோதும், அவருக்கு தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது அக்கட்சி.
அலிநகர் தொகுதியில் வெற்றி பெற்றால், மிதிலா ஓவியத்தை பள்ளிகளில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவேன், அலிநகர் தொகுதியின் பெயரை 'சீதாநகர்' என மாற்றுவேன், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவேன் என்பதான வாக்குறுதிகளை முன்வைத்து மைதிலி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கூடவே, அரசியலில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மைதிலி, அலிநகர் தொகுதியில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முக்கிய தலைவரான வினோத் மிஸ்ராவை 12,000 வாக்குகள் மேல் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம், முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியை முதன்முறையாக பாஜக கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பீகாரின் இளம் எம்.எல்.ஏ. என்ற சிறப்பையும் மைதிலி பெற்றுள்ளார்.

புதிய அத்தியாயம்
இதற்கு முன்னர், 2005ம் ஆண்டு சுயேச்சை வேட்பாளர் தௌசீஃப் ஆலம் 26 வயதில் பீகாரின் இளம் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவரைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் 26 வயதில் ராகோபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதுதான் 25 வயதுடைய ஒருவர் அம்மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார்.
இளம் பாடகியான மைதிலி, இதுவரை தனது இசைத் திறமையால் மக்கள் மனதில் பிடித்த இடத்தை, இன்று வாக்குகளாக மாற்றி, தனது செல்வாக்கையும் நிரூபித்துள்ளார். இதன்மூலம் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை அவர் எழுதியுள்ளார் என்றே கூறலாம்.