முன்னணி தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ’டாடா கம்யூனிகேஷன்ஸ்’, வனத்துறையுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டம், போத்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த உப்பரபாளையம் கிராமத்தில் உள்ள நாகன் தாங்கல் ஏரியை வெற்றிகரமாக தூர்வாரி புனரமைத்துள்ளது. இதன்மூலம் அந்த ஏரியை செழிப்பான சுற்றுச்சூழலுடைய சமூக சொத்தாக மாற்றியுள்ளது.
நீர்ப் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு இந்த முயற்சியானது வழிவகுத்துள்ளதாக, W-CReS-ன் (நீர்நிலை அமைப்பு அறக்கட்டளை பின்னடைவு ஆய்வுகள் மையம்) சமீபத்திய மதிப்பீடு உறுதிப்படுத்தியுள்ளது.
15.01 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நாகன் தாங்கல் ஏரியின், நீர்வளவியல் நிலைமைகள், நிலத்தடி நீர் மட்டங்கள், நீர்ப்பிடிப்பு திறன், புவி இயற்பியல் ஆய்வுகள், புவியியல் மேப்பிங், நீர் தரம் மற்றும் நீர்நிலை அம்சங்கள் ஆகியவற்றை WOTR study மூலம் முழுமையாக பகுப்பாய்வு செய்த பிறகே இந்த புனரமைப்பு வேலையை டாடா கம்யூனிகேஷன்ஸ் செய்து முடித்துள்ளது. இந்த வெற்றி மூலம்,
“நன்கு திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பு முயற்சியானது, உள்ளூர் மக்களால் வெற்றிகரமாக சாதித்துக் காட்டமுடியும்” என எடுத்துக்காட்டுகிறது.
நாகன் தாங்கல் ஏரி சீரமைப்பு
நாகன் தாங்கல் ஏரியானது முன்பு, கிட்டத்தட்ட 2,800 குடியிருப்புவாசிகளுக்கு முக்கியமான நீர் ஆதாரமாக இருந்த ஏரியாகும். அதோடு, மழைக்காலங்களில் நீர் போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வெள்ளத் தடுப்புக்கு இது ஒரு அத்தியாவசியமான நீர்நிலையாகவும் இருந்தது. ஆனால், காலத்தின் கோலத்தால், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட இந்த ஏரி, மாசு படிந்து கிட்டத்தட்ட 75 சதவீதத்திற்கு சுருங்கி, சுற்றுச்சூழலை சீரழிப்பதாக மாறியது. ஒரு காலத்தில் செழிப்பாக மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்த இந்த ஏரி, ஒரு கட்டத்தில் யாருக்கும் பயன்படாமல், மாசுபட்ட நீர் தேங்கி நிற்கும் பயனற்ற நீர்நிலையாக மாறியது.
இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 2022ம் ஆண்டு டாடா கம்யூனிகேஷன்ஸ், ’நன்னீர்’ திட்டத்தை உருவாக்கியது. நாகன் தாங்கல் ஏரியை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அதனை மறுசீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது.
அதன் முதற்கட்டமாக, 15.01 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு, நன்கு திட்டமிடப்பட்ட நில வடிவமைப்பு உத்தி வடிவமைக்கப்பட்டது. தளங்கள், ஒரு தீவு மற்றும் நடைபாதைகள் கொண்ட இரண்டு சிறிய மலைகள் போன்ற அம்சங்கள் அதில் அடங்கி இருந்தது. அப்பகுதி நிலகட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, ஏரியின் 4 ஏக்கர் பகுதியை 1.5 மீட்டர் ஆழத்திற்கு தூர் வார முடிவு செய்யப்பட்டது.
ஏரியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணையும் வீணாக்காமல், அதனைக் கொண்டு ஏரியின் கரைப்பகுதியை வலுவாக்குவது, சிறிய மலைகளை உருவாக்குவது மற்றும் தீவுகளை வடிவமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நிலப்பகுதிக்கு பொருத்தமான சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள், வண்டல் நீக்கப்பட்ட ஏரிப் பகுதிக்குள் உள்ள கரைகள், தளங்கள், தீவு மற்றும் மலைகளில் நடப்பட்டன.
இந்த முயற்சிகளின் மூலம், நாகன் தாங்கல் ஏரியின் வருடாந்திர நீர் சேமிப்பு திறனும், நிலத்தடி நீர் மீள்நிரப்பல் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளதாக W-CReS அறிக்கை கூறுகிறது.
ஏறி மறுசீரமைப்பால் 12 ஆயிரம் பேர் பயன்
நாகன் தாங்கல் ஏரியின் மறுசீரமைப்பானது, நிலத்தடி நீர் உயர்வு, கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கல், அவ்வப்போது மீன்பிடித்தல், சமூக பொழுதுபோக்கு ஆகியவற்றை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
இதன்மூலம் சுமார் 12 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது. அவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புனரமைக்கப்பட்ட இந்த ஏரி நீரில், குறைந்த முதல் மிதமான மாசுபாடே இருப்பதாக நுண்ணுயிரியல் நீர் தரக் குறிகாட்டிகள் கூறுகின்றன. இது அந்த ஏரியின் மீது தொடர்ச்சியான சமூக விழிப்புணர்வு முயற்சிகளின் அவசியத்தைக் குறிக்கிறது.
கூடுதலாக, இந்த புதுப்பிக்கப்பட்ட ஏரியானது அருகிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுபவக் கற்றல் வாய்ப்புகளை வழங்குவதாகவும் உள்ளது. இதற்கென ஏரிக்கு அருகில் அறிவாற்றல் மற்றும் கற்றல் அமைப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நகரமயமாக்கல் தொடர்ந்து வளர்ந்து வருவதால், இந்த மேம்பாடுகளைப் பராமரிக்க, காலநிலை-எதிர்ப்பு நீர் நிர்வாகம், வழக்கமான கண்காணிப்பு மற்றும் தரவு சார்ந்த உத்திகளின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு முன்னிலைப் படுத்துகிறது.
இந்த புனரமைப்பு திட்டத்தின் அடுத்த கட்டமாக, இத்திட்டத்தின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், டாடா கம்யூனிகேஷன்ஸானது, அப்பகுதி மக்களின் சமூக ஈடுபாட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
W-CReS அறிக்கையின் சுருக்க விபரம் பின்வருமாறு:
2.6 மில்லியன் லிட்டராக இருந்த நீர் சேமிப்பு, புனரமைப்பிற்குப் பிறகு 8.5 லிட்டர் வரை அதிகரித்துள்ளது. இது முந்தைய நிலையை விட மூன்று மடங்கு அதிகம்.
நீர்ப்பிடிப்பு மாற்றம் (2022-24)
- நீர் பரவல் பரப்பளவு அதிகரிப்பு:
- 5.10 ஹெக்டேராக இருந்த நீர் பரவல் பரப்பளவு, பருவமழைக்கு முன்னர் மூன்று மடங்காக அதிகரித்து, 15.19 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
- இந்த அளவானது, பருவமழைக்குப் பின், 1.5 மடங்கு அதிகரித்து, 16.60 ஹெக்டேரில் இருந்து, 24.95 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
- நீர்ப்பெருக்கில் 3 மடங்கு அதிகரித்து, 179.54 மிமீ-ல் இருந்து, 508.93 மிமீ ஆக மாறியுள்ளது. (மழைக்கு முன் மற்றும் பின்)
- நில பயன்பாடு மேம்பாடு
- தரிசு நிலம் 15% குறைந்து, 236.11 ஹெக்டேரில் இருந்து 199.39 ஹெக்டேராக மாறியுள்ளது.
- கட்டுமானப் பரப்பளவு 86% அதிகரித்து, 13.11 ஹெக்டேரில் இருந்து 24.33 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
- புத்துயிர் பெற்ற பல்லுயிர்கள்
- 14 மீன் இனங்கள், 56 பறவை இனங்கள், 33 பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
- கருப்பு-கிரீடம் கொண்ட நைட் ஹெரான், மீசை கொண்ட டெர்ன், காமன் சாண்ட்பைப்பர்
- மோனார்க், எமிகிரண்ட் மஞ்சள்
- கல்வி வருகைகள்
- ஆண்டுக்கு 11,500+ பார்வையாளர்கள்
- 11 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 650 மாணவர்களின் கல்வி வருகைகள்
- சுற்றுச்சூழல் விழாக்களில் கிட்டத்தட்ட 1,100 பங்கேற்பாளர்கள்