+

ஐரோப்பிய சந்தையில் அடி வைக்கும் ‘நம்ம யாத்ரி’ தலைமை நிறுவனம்!

பெங்களூரைச் சேர்ந்த பிரபல போக்குவரத்து சேவை செயலியான 'நம்ம யாத்ரி'யின் தலைமை நிறுவனமான மூவிங் டெக் இன்னோவேஷன்ஸ் (Moving Tech Innovations), நெதர்லாந்தைச் சேர்ந்த 'ஆட்டோமிக்கிள் ஹோல்டிங் பிவி' (Automicle Holding BV) நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் மூலம் ஐரோப்பிய சந்தையில் தனது விரிவாக்கத்தைத் தொடங்கிய

பெங்களூரைச் சேர்ந்த பிரபல போக்குவரத்து சேவை செயலியான 'நம்ம யாத்ரி'-யின் தலைமை நிறுவனமான மூவிங் டெக் இன்னோவேஷன்ஸ் (Moving Tech Innovations), நெதர்லாந்தைச் சேர்ந்த 'ஆட்டோமிக்கிள் ஹோல்டிங் பிவி' (Automicle Holding BV) நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் மூலம் ஐரோப்பிய சந்தையில் தனது விரிவாக்கத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் கமிஷன் இல்லாத, திறந்தநிலை நெட்வொர்க் (ONDC) மாதிரியை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கையகப்படுத்துதலுக்கான நிதி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

யாத்ரி சாத்தி, பாரத் டாக்ஸி மற்றும் சென்னை ஒன் போன்ற பல்வேறு போக்குவரத்துத் தளங்களை இயக்கி வரும் மூவிங் டெக், இதுவரை 150 மில்லியனுக்கும் அதிகமான பயணங்களை ஒருங்கிணைத்துள்ளதுடன், ஓட்டுநர்களிடமிருந்து கமிஷன் ஏதுமின்றி சுமார் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை அவர்களுக்கு ஈட்டித் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Namma Yathri

வழக்கமான போக்குவரத்துச் செயலிகள் அதிக கமிஷன் வசூலிக்கும் நிலையில், அதற்கு மாற்றாக பொதுப் போக்குவரத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த மற்றும் நகர அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் வெளிப்படையான டிஜிட்டல் உள்கட்டமைப்பை மூவிங் டெக் முன்னெடுத்து வருகிறது.

2022-ல் மோஹித் மிஸ்ரா, ஜெஃப் ஹேஸ் மற்றும் அமித் பால் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஆட்டோமிக்கிள் நிறுவனம், நகரங்களுக்கான வாகன நிறுத்தம் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

பெக்ன் (Beckn) மற்றும் TOMP போன்ற திறந்தநிலை நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இவ்விரு நிறுவனங்களின் இணைப்பானது, பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பயணச் சேவைகளை ஒரே தளத்தில் இணைக்கும் 'மொபிலிட்டி-ஆஸ்-ஏ-சர்வீஸ்' (MaaS) முறையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பும், ஐரோப்பாவின் நகர்ப்புற போக்குவரத்து நிபுணத்துவமும் இணைவது உலகளாவிய அளவில் நிலையான நகர்ப்புற போக்குவரத்திற்குப் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இரு நிறுவனங்களின் நிறுவனர்களும் தங்களது கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

facebook twitter