
வாழ்வில் பலருக்கும் பல விதங்களில் துயரங்கள் துரத்தும். உலகெங்கும் வாழும் மக்களையும் ஒரேயடியாக துயரப்பிடியில் வைத்துக்கொண்டது கொரோனா பெருந்தொற்றின் தொடர்ச்சியான 2021ம் ஆண்டு.
துயரங்கள் விரட்டினாலும், அதில் வந்த தடைகளை வென்று சாத்தித்த பெண்கள் பற்றி 2021-ல் நாங்கள் வெளியிட்ட கட்டுரைகள் ஒரு பார்வை.
1. துப்புரவுப் பணியாளர் டூ பஞ்சாயத்துத் தலைவர்
கேரளாவில் இந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆச்சர்யங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தது. அரசியல், ஆள் மற்றும் பண பலம் இருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை உடைத்திருக்கிறார் 21 வயது ஆனந்தவள்ளி.

10 ஆண்டுகளாக கொல்லம் மாவட்டம் பதானபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் உள்ளாட்சித் தேர்தலில் சிபிஐஎம் சார்பில் போட்டியிட்டு 654 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எஸ்சி / எஸ்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஒதுங்கி ஒதுங்கி இருந்தவர் இன்று உத்தரவுகளை போடுகிறார். ஆனந்தவள்ளியைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்:
2. பால்காரர் மகள் டூ நீதிபதி
படித்து சாதிப்பதற்கு குடும்ப வறுமை தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரைச் சேர்ந்த சோனல் சர்மா. இவரது தந்தை பால் விற்பனை தொழில் செய்து வருகிறார், 26 வயதான சோனல், தந்தைக்கு உதவுவது மாட்டுக்கொட்டகையில் இருக்கும் எஞ்சிய நேரத்தில் படிப்பது என்று தன்னுடைய கனவை நிறைவேற்றி இருக்கிறார்.
ராஜஸ்தான் நீதித்துறை சேவை (ஆர்.ஜே.எஸ்) தேர்வில் தேர்ச்சி பெற்று கட் ஆஃபில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் காத்திருப்பு பட்டியலில் இருந்தவர் அவசர காலிப்பணியிட நிரப்புதலில் ராஜஸ்தான் அமர்வு நீதிமன்றத்தில் முதல் தர மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார்.
சோனல் சர்மாவின் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்:
3. கேரளாவின் முதல் திருநங்கை டாக்டர்
கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. 15 வயது மாணவனாக இருந்த போது தன்னிடம் பாலின மாறுபாடு இருப்பதை உணர்ந்த பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். பெண்மை உணர்வுடனே சித்த மருத்துவம் படித்து சீதாராம் ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றவும் தொடங்கி விட்டார்.
பெற்றோரின் சம்மதத்துடன் தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து மாற்றுப்பாலின அறுவை சிகிச்சையை செய்து கொண்டு தன்னுடைய அடையாளத்துடனே வாழும் கேரளாவின் முதல் திருநங்கையாக மருத்துவராக வரலாறு படைத்திருக்கிறார்.
பிரியாவின் வாழ்க்கைப் பயணம் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்:
4. சமூகப் பார்வையை உடைத்து வீராங்கனையான கலைவாணி
அப்பாவும், அண்ணனும் குத்துச்சண்டை வீரர்களாக ரிங்கிற்குள் இருக்க நான் மட்டும் சலைத்தவளா என்று தானும் குத்துச்சண்டை கற்றுக் கொண்டு இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கலைவாணி. குத்துச்சண்டை கற்றுக் கொண்டால் கல்யாணம் நடக்காது என்று முட்டுக்கட்டை போட்ட உறவினர்கள் ஒரு பக்கம் படிப்பில் கவனம் செலுத்து என்ற ஆசிரியர்கள் மறுபக்கம்.

இந்த சமூகத் தடைகளுக்கு மத்தியில் சோர்ந்து போகாமல் குத்துச்சண்டை கற்று மேரிகோம் கையால் வெள்ளிப்பதக்கமும் பெற்றிருக்கிறார். 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் கனவை நோக்கி குஸ்தி போட்டுக் கொண்டிருக்கிறார் கலைவாணி.
இவரைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
5. கொரோனா வாரியர் வெண்ணிலா
கொரோனா காலத்தில் பலரும் தன்லனலமின்றி பிறர் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள். அவர்களில் மத்திய அரசின் கொரோனா வாரியர்ஸ் விருதைப் பெற்றவர் நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகில் உள்ள காட்டேரி பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா.
அங்கன்வாடி ஆசிரியையான இவர் ஊரடங்கு நேரத்திலும், வனத்தையொட்டிய பகுதிகளான புதுக்காடு, கீழ் சிங்காரா ஆகிய கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களின் வீட்டுக்கே சென்று ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை வழங்கி இருக்கிறார். சுமார் 12 கிலோமீட்டர் நடந்தே சென்று தன்னுடைய பணியை நிறைவாகச் செய்திருக்கும் வெண்ணிலாவைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
6. சீரியல் விளக்கு வணிகத்தில் தடம் பதித்த தனலட்சுமி
அரசகுளத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பே படித்தவரான தனலட்சுமி கணவரின் தொழிலான சீரியல் விளக்கு அலங்காரத்தில் அவருக்குத் துணையாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் களம் இறங்கினார். சுறுசுறுப்பான பெண்ணான தனலட்சுமி சட்டென்று தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொண்டதுடன் தன்னுடைய தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு சீரியல் விளக்கு வணிகத்தை கற்றத் தரும் சுயஉதவிக்குழுவையும் நடத்தி வருகிறார்.
தனலட்சுமியின் முழு வெற்றிப் பயணத்தை தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
7. சராசரி பெண் டூ 'முயல் சத்யா'
மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர், சராசரிப் பெண்களைப் போலவே டாடியின் லிட்டில் பிரின்சஸாக வளர்ந்தவர் ஏமாற்றுத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, பெற்ற மகனுக்கு இருதயத்தில் ஓட்டை என்று கஷ்டங்கள் எல்லா பக்கத்திலும் சுழன்றடித்தது. அவற்றையெல்லாம் தைரியத்துடன் எதிர்கொண்டு முயல் பண்ணை நடத்தி, தானும் வளர்ந்து பிறருக்கும் உறுதுணையாகி இன்று 'முயல் சத்யா' வாக மக்களால் அடையாளம் காணப்படுகிறார்.
முயல், வான்கோழி, வாத்து, கோழி, ஆடு, மாடு, குதிரைகளுடன் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து மாதம் ரூ.80,000 வருமானம் ஈட்டி, பலர் முயல் பண்ணை அமைக்க காரணமாகி இருக்கிறார்.
சத்யாவின் தொழில்முனைவுப் பாதையை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
8. 'ராபிடோ' பணியில் தைரியமாக களமிறங்கிய அம்பிகா
இசைக் குடும்பத்தைச் சேர்ந்த 34 வயது சென்னைப் பெண்ணான அம்பிகா இசைக்குழு ஒன்றை நடத்தி வந்தார். கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவருக்கு பெருந்தொற்று வருமானத்தை குறைக்கவே பல பெண்கள் செய்யத் தயங்கும் சென்னை முழுவதும் டூவீலரில் பயணித்து சேவையாற்றும் 'ராபிடோ'வில் தைரியமாக இணைந்து வருமானத்திற்கு வழி செய்திருக்கிறார்.

அம்பிகா எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
9. கணவனால் கைவிடப்பட்டு ஜூஸ் விற்றவர் காவலரான கதை
கேரளாவின் வர்கலா பகுதியைச் சேர்ந்தவர் 3 வயதான ஆனி சிவா. 18 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டவர் பின்பு கசந்து போன காதலால் கணவனால் கைவிடப்பட்டார். பச்சிளம் குழந்தையுடன் கணவர் பெற்றோரால் நிர்கதியாய் இருந்தவர் கல்வி ஒன்றே ஜெயிப்பதற்கான வழி என்பதை அறிந்து படிக்கத் தொடங்கினார்.

குழந்தை, தனக்கான செலவை சமாளிக்க பகுதிநேரப் பணிகளைச் செய்தவர் 2016ம் ஆண்டில் எஸ் ஐஆக தேர்வாகி வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டினார்.
ஆனியின் வாழ்க்கை போராட்டங்களை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
10. பெற்றோரை கவுரவப்படுத்திய தலைமகள்
காய்கறி வியாபாரம் செய்து வந்தாலும் தன் பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று கஷ்டப்பட்ட பெற்றோருக்கு பெருமை தேடித் தந்திருக்கிறார் சென்னையை சேர்ந்த மதுபிரியா. ‘ஒரு தாயின் கனவு எப்படி நிறைவேறியது, தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒரு பெற்றோர் எப்படியான தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்...’ என்ற அவரது சக்திவாய்ந்த வரிகள் இணைய சென்சேஷன் ஆனது.
மதுபிரியா இணைமேலாளரான கதையை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
11. பெண் ஓதுவரான சுஹாஞ்சனா
தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக பெண் ஓதுவராக பணியானை பெற்றுள்ள வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் சுஹாஞ்சனா. 28 வயதான இவர் கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர். பக்தி நெறியிலேயே வளர்ந்த இவர் 10-ம் வகுப்பு முடித்த பின்னர் தேவாரம் பாடுவதில் ஆர்வம் கொண்டார்.
கோயில் விழாக்கள், உறவினர்கள் முன்னிலையில் பாடுவது எனத் தொடங்கி இசைப்பள்ளியில் தேவாரம், திருவாசகம் பயின்றவருக்கு இறைவன் முன்பு பாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது. சுஹாஞ்சனாவைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
12. நோயை நோகடிக்க வைத்த அல்மா சோப்ரா
அமெரிக்காவின் நியூஜெர்சியில் பிறந்த அல்மா சோப்ரா சராசரி குழந்தைகளைப் போலவே வளர்ந்து வந்தார். அவருடைய 10வது வயதில் அல்மாவிற்கு சிறுமூளை அடாக்சியா என்ற அறிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் இந்த நோயால் 18 வயதிலேயே பலர் சக்கர் நாற்காலியில் முடங்கிவிடுவார்கள் என்று மருத்துவத்துறை கூறுகிறது.
ஆனால் தன்னம்பிக்கையால் அவற்றை தவிடுபொடியாக்கி 37 வயதில் மற்றவர்களுக்கு உந்துதல் தரும் ஊக்கமளிக்கும் பேச்சாளர், செரெபெல்லர் அடாக்சியா சாம்பியன் என பன்முகத்தன்மை கொண்டவராகத் திகழ்கிறார் அல்மா. இவரின் கடின பக்கங்களை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்: