மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு விளையாட்டு எதற்கு என்று கேலி செய்தவர்களை “என் கைகளின் வலிமையை இந்த உலகமே அறியட்டும்” என்று பாராலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று உணர்த்தி இருக்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன்.
காஞ்சிபுரத்து பெண்
ஏப்ரல் 11, 2002 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தவர் துளசிமதி. 24 வயதாகும் துளசி, நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார். பிறந்தது முதலே துளிசியின் இடது கையில் குறைபாடு இருந்தது. கட்டைவிரல் இழப்பு, நாள்பட்ட உல்நார் நியூரிடிஸ் மற்றும் தசைச் சிதைவு போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டார். இதனிடையே, விபத்து ஒன்றால் அவருடைய இடது கையை தூக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் துளசி.
இருப்பினும், துளசிக்கு சிறு வயது முதலே விளையாட்டு மீது ஆர்வம் இருந்தது. ஓட்டப்பந்தயம் போன்ற தடகள விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டவருக்கு, அவருடைய 7வது வயதில் பேட்மிண்டன் மீது ஆர்வம் ஏற்பட்டது.
பொருளாதார வசதி இல்லாத குடும்பம் என்கிற நிலையில் தொடக்கத்தில் துளசியின் தந்தை டி.முருகேசன் விளையாட்டுக்கான வழிகாட்டுதல்களைத் தந்தார். தந்தையின் ஆதரவு துளசியின் ஆர்வத்தைத் தூண்டியது. அவரது பயிற்சியின் கீழ், துளசிக்கு பாரா-ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அவரது பயணத்தில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது.
துளசியின் சாதனைகள்
பின்னர், சிறப்பு பயிற்சி தேவைப்பட்டதால் ஹைதராபாத் சென்று அங்கு பேட்மிண்டன் விளையாட்டில் முறையான பயிற்சி பெற்றார் துளசிமதி. இவர் ஏற்கனவே பல்வேறு ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் விளையாட்டு போட்டி, ஒற்றையர் பிரிவு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார் துளசி.
2023ம் ஆண்டு சீனாவின் காங்சூ பகுதியில் நடந்த ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.
தொடர் பயிற்சி விடாமுயற்சியோடு பேட்மிண்டன் விளையாடி வந்த துளசிமதி, பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றார். பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் - சீனாவின் க்யு ஹ்யா யங் உடன் மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வியடைந்ததால் வெள்ளிப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற க்யு ஹ்யா யங் தங்கப்பதக்கம் வென்றார்.
தந்தை பெருமிதம்
துளசிமதியின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவரது தந்தை,
“என் மகளுக்கு இடது கை சரியா இயங்காது. பிறந்துலேருந்தே அவளுக்கு இந்த பிரச்னை இருக்கு. ஆனா அவ மத்த பசங்களவிட எந்த விதத்துலயும் குறைந்தவள் இல்லன்னு, அவளுக்கு சொல்லி கொடுத்து வளர்த்தோம். அவளுக்கு விளையாட்டுல ஆர்வத்த கொண்டு வந்தேன். பலரும் இது வேண்டாத வேலை என்று எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி துளசிக்கு நானே பயிற்சியாளராக இருந்து பேட்மிண்டன் பயிற்சி அளித்தேன்.
“பொருளாதாரம், சமூகத்தின் பாரபட்ச நிலை என்று பல்வேறு இடையூறுகளை தாண்டியே அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தோம். அவரை இந்த இடத்துக்கு வர விடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளைச் செய்தனர். துளசிமதி இந்த நிலைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார்,” என்று கூயிறள்ளார் முருகேசன்.
தங்கப்பதக்கமே இலக்கு
துளசியின் இந்த வெற்றி, உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் தரக்கூடியது. துன்பங்களை எதிர்கொண்டு சாதிப்பதற்கான மன உறுதிக்கான உதாரணமாகத் திகழ்கிறார் துளசி.
சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே ஆசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று என்னுடைய வெற்றிகளை பெற்றேன். பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என்னுடைய இலக்கு. இந்த முறை அது நிறைவேறாமல் போனாலும் நிச்சயம் அடுத்த பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று துளசிமதி கூறியுள்ளார். பாராலிம்பிக் மடுமல்ல ஆசியா மற்றும் சர்வதேச போட்டிகளிலும் இந்தியாவிற்காக தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதே தன்னுடைய லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர், முதல்வர் பாராட்டு
"2024 பாரா ஒலிம்பிக் மகளிர் பேமிண்டன் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது பெருமைப்படக் கூடிய தருணம்! அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்..." என்று பிரதமர் நரேந்திர மோடி x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“நம்பமுடியாத சாதனை சாத்தியமாகி இருக்கிறது.. வாழ்த்துக்கள். உங்களுடைய வெற்றியால் தமிழகம் பெருமை கொள்கிறது," என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Paralympics2024: வெண்கலம் வென்ற 19 வயது நித்யஸ்ரீ சிவன் - கிரிக்கெட் ரசிகை பேட்மிண்டன் வீராங்கனை ஆன கதை!