'வால் ஸ்ட்ரீட்டில் ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை' - ஐஐடி மெட்ராஸ் மாணவர் புதிய சாதனை!

02:00 PM Dec 05, 2024 | Chitra Ramaraj

ஐஐடியில் படிப்பதுதான் இங்கு பல மாணவ, மாணவியரின் கனவு எனலாம். ஏனென்றால், வெறும் திறமைசாலிகளுக்கு அல்ல, அதி அதி திறமை பெற்றவர்களுக்கே அங்கு படிக்கும் வாய்ப்பு கைகூடுகிறது. ஏனென்றால், அங்கு படிக்க புத்திசாலி மாணவர்கள் போட்டி போடுவதுதான்.

அதனால்தான் பல முன்னணி நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான ஊழியர்களை ஐஐடியில் தேர்வு செய்ய அதிக விருப்பம் காட்டுகின்றன. அதிலும், குறிப்பாக வெளிநாட்டு முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி மாணவர்களை நேர்காணல் செய்து தங்களது நிறுவனத்தில் பணியமர்த்திக் கொள்கின்றன. இதற்காக, அந்த மாணவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தைத் தரவும் அந்நிறுவனங்கள் தயங்குவதில்லை.

அந்தவகையில், இந்தாண்டு ஐஐடி மெட்ராசில் நடந்த பிளேஸ்மெண்ட் முதல் நாளில், கணினி அறிவியல் மாணவர் ஒருவருக்கு நியூயார்க்கில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனமான, ஜேன் ஸ்ட்ரீட்டில், வருடத்திற்கு ரூ.4.3 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. இதுவரை மெட்ராஸ் ஐஐடி பிளேஸ்மெண்ட்டில் வேலை கிடைத்தவர்களிலேயே இது அதிகபட்ச சம்பளம் எனக் கூறப்படுகிறது.

இறுதி ஆண்டு மாணவர்கள்

தொழில்நுட்பப் படிப்புகளில் சிறந்த கல்வி நிலையமாக இந்திய தொழில்நுப்ட கல்வி நிறுவனங்கள் (IIT) செயல்படுகிறது. சென்னை, டெல்லி, பாம்பே, கான்பூர், ரூர்க்கி, காரக்பூர், கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் ஐஐடி செயல்பட்டு வருகிறது. இதில், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவுகள்படி, இந்தியாவிலையே தலைசிறந்த கல்லூரியாக ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) உள்ளது. தொடர்ந்து 6வது முறையாக மெட்ராஸ் ஐஐடி முதலிடம் பிடித்து வருகிறது

இங்கு, ஒவ்வொரு வருடமும் பல்துறையில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் வகையில், பிளேஸ்மெண்ட் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு ஐஐடி கல்வி நிறுவனங்களில் பிளேஸ்மெண்ட்டில் உலகின் பல மூலைகளில் இருந்தும் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து, தங்கள் நிறுவனங்களுக்கான வருங்கால ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

அதில், முதல் நாளே ஐஐடி வரலாற்றிலேயே இதுவரை யாரும் பெறாத சம்பளமாக, மெட்ராஸ் ஐஐடி மாணவருக்கு வருடத்திற்கு ரூ.4.3 கோடி சம்பளத்திற்கு வேலைக் கிடைத்துள்ளது.

ரூ. 4.3 கோடியில் வேலைவாய்ப்பு

இந்த மாணவர், ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவருக்கு நியூயார்க்கில் அமைந்துள்ள முதன்மையான வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனமான, ஜேன் ஸ்ட்ரீட்டில், வருடத்திற்கு ரூ.4.3 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. இந்த சம்பளமானது அனைத்து சலுகைகளையும் உள்ளடக்கியது ஆகும்.

முன்னதாக இந்த நிறுவனத்தில் அம்மாணவர் இன்டெர்ன்ஷிப் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை வெளியான தகவல்படி, தேர்வு செய்யப்பட்ட மாணவர் ஹாங்காங்கில் வர்த்தக பிரிவில் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமின்றி, பிளாக்ராக், க்ளீன் மற்றும் டா வின்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும், தங்களது நிறுவனத்திற்காக ஐஐடி மெட்ராசில் இருந்து, சுமார் 2 கோடி வரை சம்பளத்துடன் மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்துள்ளனர். ஏபிடி போர்ட்ஃபோலியோ மற்றும் ரூப்ரிக் நிறுவனங்கள் ரூ.1.4 கோடிக்கு மேலும், டேட்டாபிரிக்ஸ், எபுலியண்ட் செக்யூரிட்டிஸ் மற்றும் ஐஎம்சி டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் ரூ.1.3 கோடிக்கு மேல் சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளனர்.

மற்ற முன்னணி நிறுவனங்கள்

இதேபோல், குவாடேய், குவாண்ட்பாக்ஸ், கிராவிடன், டிஇ ஷா, பேஸ் ஸ்டாக், ப்ரோக்கிங், ஸ்கொயர்பாயிண்ட் கேபிடல், மைக்ரோசாப்ட், கோஹெஸிட்டி உள்ளிட்ட சர்வதேச முன்னணி நிறுவனங்கள் ரூ.1 கோடி முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளத்தில் மாணவர்களை தேர்வு செய்துள்ளனர்.

இவையில்லாமல் குவால்காம், கோல்ட்மேன் சாக்ஸ், , பஜாஜ் ஆட்டோ, ஓலா எலக்ட்ரிக், அல்போன்சா மற்றும் நுட்டானிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஐஐடி பிளேஸ்மெண்ட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு பிளேஸ்மெண்ட் மூலம் வேலை கிடைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், ஐஐடி கரக்பூரில், அம்மாதம் 1ம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்கான பிளேஸ்மெண்ட் நடைபெற்றது. இதில், முதல் நாளே சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதில்,

ஒன்பது மாணவர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமான சலுகைகளைப் பெற்றுள்ளனர். அதிகபட்ச தொகுப்பு ரூ.2.14 கோடியாக சம்பளம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, 13 மாணவர்கள் சர்வதேச அளவில் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பு சந்தை மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ள நிலையில், உலகம் முழுவதும் இருந்து முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக ஐஐடியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவது, நமது மாணவர்களின் திறமைக்குச் சான்றாக உள்ளது. 

தகவல் உதவி: லைவ்மிண்ட்