+

'குளிக்க சோம்பலா?' - 15 நிமிடங்களில் மனிதனை குளிப்பாட்டும் ஏஐ வாஷிங் மெஷின் கண்டுபிடிப்பு!

குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதையே பெரிய வேலையாக கருதுபவர்களுக்கு வசதியாக, ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் "ஹியூமன் வாஷிங் மிஷினை" கண்டுபிடித்திருக்கிறது ஜப்பான் நிறுவனம்.

வாழைப்பழ சோம்பேறி என்று சிலரை நாம் குறிப்பிடுவது போன்று. இவர்களைப் போலவே குளிக்கத் தயங்கும் சோம்பேறிகளும் நம்மூரில் நிறைய பேர் உண்டு. இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்காகத்தான் ஜப்பான் பொறியாளர்கள் ஒரு அற்புதமான குளியல் மிஷினை உருவாக்கியுள்ளனர்.

human washing machine

ஹியூமன் வாஷிங்மெஷின்

வரவர வீடுகளில் மனிதர்களைவிட மிஷின்களின் புழக்கம்தான் அதிகமாக இருக்கிறது. சமைப்பதற்கு, அரைப்பதற்கு, துவைப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு, தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு, தரையை சுத்தம் செய்வதற்கு என எல்லாவற்றிற்கும் புதுப்புது மிஷினை கொண்டு வந்து இறக்கி விட்டார்கள்.

சரி, இயந்திர உலகில் எல்லோரும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடும் நிலையில், இப்படி எல்லாவற்றிற்கும் மிஷின்கள் இருப்பது நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவும், என எடுத்துக் கொண்டால், தற்போது இந்தக் கண்டுபிடிப்புகளின் நீட்சி நம் வீட்டுக் குளியலறை வரை வந்து விட்டது. ஆம், துணிகளை துவைக்க நாம் வாஷிங்மெஷினைப் பயன்படுத்துவதுபோல், நம்மை துவைக்க (அட அதாங்க நம்மை குளிக்க வைக்க) ஒரு புது இயந்திரத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் ஜப்பானிய பொறியாளர்கள்.

human washing machine

மிராய் நிங்கன் சென்டகுகி

இந்த மெஷினை ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ உருவாக்கியுள்ளது. இந்த மனித வாஷிங்மெஷினுக்கு மிராய் நீங்கன் சென்டகுகி (Mirai Ningen Sentakuki) என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

ஒரு 15 நிமிடம் நாம் இந்த மெஷின் டப்பில் உட்கார்ந்தால் போதும், இந்த AI மெஷினானது நம்மை குளிக்க வைத்து ட்ரை செய்து வெளியே அனுப்பி விடுமாம். அதாவது, ஒரு நபரின் உடலை 15 முதல் 20 நிமிடங்களுக்குள் முழுமையாக சுத்தம் செய்யும் வகையில் இதனை வடிவமைத்துள்ளனர்.

இன்னமும் சந்தையில் விற்பனைக்கு வராத இந்த மிஷினை, அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஒசாகா கன்சாய் எக்ஸ்போ 2025ல் காட்சிப்படுத்தப்படுத்த அதன் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். வெறும் பார்வைக்காக மட்டும் வைக்காமல், அந்த எக்ஸ்போவில் இந்த மெஷினை மக்கள் பயன்படுத்திப் பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, எக்ஸ்போவில் ஆயிரக்கணக்கானோர் இந்த மெஷினை பயன்படுத்தி தங்களது அனுபவத்தை வெளிப்படுத்த இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு இந்த மெஷினை உருவாக்கியுள்ளனர். மேலும், இதில் சுத்தம் செய்யும் செயல்முறையின் போது மக்கள் பிரைவசி மற்றும் ஆறுதல் உணர்வை அளிக்கும், எனக் கூறப்படுகிறது.

human washing machine

எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த மெஷின் பார்ப்பதற்கு பாட் அல்லது காக்பிட் போன்று காட்சியளிக்கிறது. இதில் குளிக்க விரும்பும் நபர், அதன் உள்ளேயுள்ள பிளாஸ்டிக் பேடில் அமர வேண்டும். இந்த மெஷினில் உள்ள AI சிஸ்டமே, உள்ளே அமரும் நபரின் உடல் மற்றும் தோல் வகையின் அடிப்படையில் வாஷ் மற்றும் ட்ரை விருப்பங்களை தீர்மானித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமரும் நபரின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப, அந்த டப்பானது பாதி வெந்நீரால் நிரப்பப்படும். அதன்பிறகு, நீரின் ஜெட்களிலிருந்து டைனி ஏர் பப்பில்கள் உருவாகத் தொடங்கும். இந்த குமிழிகள், உள்ளே அமர்ந்திருக்கும் நபரின் தோலில் இருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்யும்.

நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உடலின் உயிரியல் தகவல்களை சேகரித்து, உள்ளே இருப்பவர் சரியான வெப்பநிலையில் குளிப்பாட்டப்படுவதை உறுதி செய்யும். அதோடு, மெஷினில் உள்ள ஏஐ சென்சார்கள், மனித உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து, மனதை அமைதிப்படுத்தும் வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்பும். எனவே, மனித தோலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதோடு மட்டுமின்றி, அதில் குளிப்பவரின் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இந்தக் குளியல் அமையும் என அதன் பொறியாளர்கள் கூறுகின்றனர்.
human washing machine

பழைய கண்டுபிடிப்புதான்

துணிமணிகளைத் துவைப்பதுபோல், மனிதர்களைச் சலவை செய்யும் இந்த இயந்திரம் தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு ஒன்றும் புதிதானது அல்ல... இது கடந்த 1970ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். அப்போதும் இது ஜப்பான் உலக கண்காட்சியில்தான் காட்சிப்படுத்தப்பட்டது.

தற்போதுள்ள பானாசோனிக் நிறுவனம், அப்போது சான்யோ எலக்ட்ரிக் நிறுவனமாக இருந்தது. இந்த நிறுவனம்தான், ஓவல் வடிவத்தில், அல்ட்ராசோனிக் குளியல் முறை என்ற பெயரில் இந்த மனித வாஷிங்மெஷினை அப்போது அறிமுகப்படுத்தியது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள மனித வாஷிங்மெஷின் மாதிரியே, இந்த மெஷினிலும் ஒருவர் உட்கார்ந்த உடனேயே, தானாக வெந்நீர் நிரப்பப்பட்டு, அல்ட்ராசோனிக் வேவ் மற்றும் மசாஜ் பால்கள் மூலம் உடல் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர், நீர் தானாகவே வெளியேறிவிடும். அந்த நேரத்தில் அல்ட்ராசோனிக் குளியல் முறை பிரபலமடையாத காரணத்தால், இந்த மெஷின் வெற்றியடையவில்லை.

கூடுதல் தொழில்நுட்பம்

பழைய மனித வாஷிங்மெஷினிலில் இருந்து, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெஷினில் கூடுதலாக சில தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, முந்தையதைவிட இதில் அதிக மசாஜ் பால்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 

ஒசாகா கண்காட்சிக்குப் பிறகு, மிராய் நீங்கன் சென்டகுகி சந்தை விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் என ‘சயின்ஸ் கோ’ நிறுவனத்தின் தலைவர் அயோமா தெரிவித்துள்ளார்.

facebook twitter