Stock News: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு - தடுமாறும் நிறுவனங்கள்!

01:37 PM Dec 19, 2024 | Gajalakshmi Mahalingam

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை ஆரம்ப நேர வர்த்தகத்தில், 925.21 புள்ளிகள் சரிந்து 79,256.69 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 309.75 புள்ளிகள் சரிந்து 23,889.10 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (19-12-2024) கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, சுமார் 925.21 புள்ளிகள் சரிந்து அதிர்ச்சி தொடக்கத்தை கண்டது. 1,100 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது 12 மணிக்குப் பிறகு சரிவில் இருந்து சற்று மீண்டது. நிப்டி 309.75 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, 880 புள்ளிகள் சரிந்து 79,301.71 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 230 புள்ளிகள் சரிந்து 23968.50 புள்ளிகளாகவும் உள்ளன.

காரணம் : அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அடிப்படை புள்ளி வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் தாக்கத்தால், இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (டிசம்பர் 19) கடுமையாக சரிந்தன.

நிப்டி பேங்க் குறியீடு இன்று 502 புள்ளிகள் சரிய நிப்டி ஐடி குறியீடு 226 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 220 புள்ளிகளும் சரிவு கண்டன. செக்டார்களில் ஐடி மற்றும் நிதிநிறுவன பங்குகள் பின்ண்டைவு காண, பார்மா, ஹெல்த் துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்: சிப்ளா, பிபிசிஎல், டாக்டர் ரெட்டி, சன் பார்மா, பவர் கிரிட், அப்பலோ ஹாஸ்பிடல்,எஸ்பிஐ லைஃப், ஹிந்துஸ்தான் யுனிலீவர்

இறக்கம் கண்ட பங்குகள்: பஜாஜ் பைனானஸ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி,பெல், டைடன், எச்சிஎல் டெக்

இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமையன்று சற்றே குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று பின்னடைவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.85. 05 ஆக உள்ளது.