70 மணி நேரம் கடினமாக வேலை பார்ப்பது அவசியமா? - ஸ்ரீதர் வேம்பு சொல்லும் பதில் என்ன?

04:00 PM Dec 27, 2024 | cyber simman

இன்போசிஸ் இணை நிறுவனர் நாரயாண மூர்த்தியை தொடர்ந்து, நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வாரம் 70 மணி நேரம் பணியாற்ற வேண்டுமா? எனும் விவாதத்தில் ஜோஹோ சி.இ.ஓ.ஸ்ரீதர் வேம்புவும் இணைந்திருக்கிறார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய நாடுகளை சுட்டிக்காட்டியுள்ளவர், இந்த நாடுகள் மிகவும் கடினமாக உழைக்கும் கலாச்சாரத்தை பின்பற்றியதால் பொருளாதார வளர்ச்சி கண்டன என்று தெரிவித்துள்ளார்.

“பொருளாதார வளர்ச்சிக்கு தேவை என்பது 70 மணி நேர உழைப்பிற்கான காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், ஜப்பான், தென்கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய நாடுகளை எடுத்துக்கொண்டால், இவை கடின உழைப்பு கலாச்சாரம் மூலம், தங்கள் மக்கள் மீது மோசமான பணி அளவை திணிக்கும், பணி கலாச்சாரத்தை வளர்த்துக்கொண்டன,” என்று குறிப்பிட்டுள்ளவர், இந்த நாடுகள் குறைந்த பிறப்பு விகிதத்திற்கு உள்ளாகி, மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு சலுகைகள் அறிவிக்கும் நிலை உண்டானது, எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு கடின உழைப்பு அவசியமா? மற்றும் பெரும்பாலான மக்களுக்கு தனிமையான வயதான காலத்தை உருவாக்கும் வகையில் இதற்கு விலை கொடுப்பது ஏற்றதா? எனும் இரண்டு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

முதல் கேள்விக்கு பதிலாக, மக்கள் தொகையில் சிறு அளவினர், 2- 5 சதவீதம் பேர் அதிக நேரம் பணியாற்றுவதே வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு போதுமானது எனகூறியுள்ளார்.

“முதல் கேள்விக்கான எனது பதில், சிறிய அளவிலான மக்கள் தாங்களே விரும்பி கடினமாக உழைத்தால் போதும் என்பதாகும், என்று கூறியுள்ளார்.

“தாங்களே விரும்பி- என்பதை தயவு செய்து கவனிக்க வேண்டும். நானும் இதே பிரிவைச் சேர்ந்தவன் தான் என்றாலும் யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் பேர் (2-5%). கடினமாக உழைக்க முனைப்பு கொண்டிருப்பார்கள்.

இது பரவலான வளர்ச்சிக்கு போதுமானது. மற்றவர்கள் பணி- வாழ்க்கை சமநிலையை பார்த்துக்கொள்ளலாம். இந்த சமநிலை அவசியம் என கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் தொகையை பாதிக்கும் அளவுக்கு இந்த 70 மணி நேர கடின வேலை தேவையா எனக் கேட்டால், இல்லை என்பதே பதில் என கூறியுள்ளார்.

“இரண்டாவது கேள்விக்கான பதில் இல்லை என்பதே ஆகும். பொருளாதார வளர்ச்சிக்கு சீனா கொடுக்கும் விலை மக்கள்தொகை வீழ்ச்சி தான் என்றால் இந்தியா சீனாவை பின்பற்றுவதை விரும்பவில்லை. இந்தியா ஏற்கனவே பதிலீடு அளவு கருத்தரித்தல் கொண்டுள்ளது. (தென் மாநிலங்கள் இதற்கு கீழே உள்ளன), கிழக்காசிய நாடுகள் அளவுக்கு இது மேலும் சரியக்கூடாது, என அவர் கூறியுள்ளார்.

“மக்கள்தொகை தற்கொலைக்கு வித்திடும் அளவுக்கு கடின உழைப்புக்கு உள்ளாகாமலே நம்மால் வளர்ச்சி அடைய முடியும், என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan