2024-இல் 59,11,065 யூனிட்கள் விற்று ஹீரோ மோட்டோகார்ப் விற்பனையில் 7.5% அதிகரிப்பு!

04:05 PM Jan 03, 2025 | cyber simman

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, ஹீரோ மோட்டோகார்ப் 2024ம் ஆண்டில், மொத்த விற்பனையில் 7.5 சதவீத வளர்ச்சி கண்டு, 59,11,065 வாகங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய 2023ம் ஆண்டில் இது 54,99,524 வாகனங்களாக இருந்தது.

மேலும், 2024ம் ஆண்டில் நிறுவனம் உலகலாவிய வர்த்தக விற்பனையில் 49 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு பகுதி வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற ஒவ்வொரு மாதிரி என எட்டு புதிய மாதிரிகளை சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளதாக, ஹீரோ மோட்டார்கார்ப் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மின் வாகனங்கள் பிரிவில், (EV) நிறுவனம், 2024ல்  46,662 VIDA V1 இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்திற்கு மைல்கல் ஆண்டாக அமைந்துள்ளதாகவும் நிறுவன சி.இ.ஓ. நிரஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.

"பல்வேறு பிரிவுகளில் இருந்து கிடைத்துள்ள வளர்ச்சி – மைய வாகனங்கள், 125 சிசி வாகனம், வளர்ந்து வரும் மின்வாகனம்- நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் விருப்பத்தேர்வாக ஹீரோமோட்டார்கார்ப் இருப்பதை உணர்த்துகிறது,” என நிரஞ்சன் குப்தா கூறியுள்ளார்.

"2025ம் ஆண்டைப்பொருத்தவரை, மின்வாகன பிரிவில் விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய வாகன அறிமுகங்களோடு உற்சாகமான பயணத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரிமியம் பிரிவு மற்றும் புதிய ஸ்கூட்டர் பிரிவில் நிலையை வலுவாக்கி கொள்ள முடியும், என கூறியுள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலான மேம்பாடு, நிறுவனம் மற்றும் துறைக்கு வலுவான மீட்சியை அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

செய்தி; பிடிஐ


Edited by Induja Raghunathan