ஓலா எலெட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் அதன் தற்போதைய தலைமை நிதி அதிகாரி (CFO), ஹரிஷ் அபிசந்தானி ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, நிதித்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட தீபக் ரஸ்தோகியை புதிய சி.எப்.ஓவாக நியமித்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவன இயக்குனர் குழு, ரஸ்தோகி நியமனத்தை அங்கீகரித்துள்ளது. அபிசந்தானி தனிப்பட்ட காரணங்களுக்காக இப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
அவர் ஓலா எலெக்ட்ரிக் சி.எப்.ஓ-வாக 2023 நவம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார்.அதற்கு முன் அவர் ஓலா குழுமத்தில், ஆறு ஆண்டுகளாக குழும தலைமை நிதி அதிகாரி, ஓலா பைனான்சியல் சர்வீசஸ் இடைக்கால சி.இ.ஓ உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதற்கு முன் அவர் ஃபிளிப்கார்டின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு இ-கார்ட் மற்றும் டாடா டெலிசர்விசஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரஸ்தோகி, ஆட்டோ, உற்பத்தி, ரசாயனம், சுரங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித்துறை சார்ந்த பொறுப்புகளை வகித்துள்ளார், என நிறுவனம் தெரிவித்துள்ளது. சி.ஏ மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றுள்ள ரஸ்தோகி புரவன்காரா குழுமம், தீபக் பெர்டிலைசர்ஸ் அண்ட் பெட்ரோகெமிகல்ஸ் மற்றும் டாடா ஆட்டோகம்ப் சிஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றில் குழும சி.எப்.ஓ அல்லது முத்த நிதி பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஐபிஓ, கையகப்படுத்தல் உள்ளிட்ட ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான சமபங்கு பரிவர்த்தனைகளை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஓலா எலெக்ட்ரிக்கின் செல் பிரிவு செயல்பாடுகள் வர்த்தக தலைவர் விஷால் சதுர்வேதி டிசம்பர் 31ல் ராஜினாமா செய்தததாக நிறுவனம் தெரிவித்தது. தனிப்பட்ட காரணங்களினால் அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பிற்கான நியமனம் தொடர்பான உடனடியாக நிறுவனம் அறிவிக்கவில்லை.
மேலும், நிறுவனம் தனது தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் சுவட்டை விரிவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தனது 4680 பாரத் செல் மேடையை ஸ்டார்ட் அப் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடுவதாகவும் அறிவித்தது.
(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஷரத்தா சர்மா ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சுயேட்சை இயக்குனர்.)
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan