
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக வெவ்வேறு இடங்களில் தனித்தனியே பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது நான்கில் ஒருவருக்கு முடிவுகள் சந்தேகத்துக்குரியவையாகவும், தவறானவையாக உள்ளதாக சென்னை மார்பக மையத்தின் (Chennai Breast Centre) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர்க்க ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட மருத்துவ மையத்தில் (One-Stop Centre) பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
தவறான முடிவுகளால் பெண்கள் பாதிப்பு
உலகளவில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிய சவாலாக உள்ள நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், இந்த நோயின் தாக்கத்தில் இருந்து குணமாக முடியும். ஆனால், இதில் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்குச் செல்கின்றனர் என்பதுதான்.
மார்பக புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது இதற்கு ஒரு காரணம் என்றால், சமயங்களில் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளும் மற்றொரு காரணம் என்கிறது சென்னை மார்பக மையத்தின் சமீபத்திய ஆய்வு.
சென்னை மார்பக மையத்தின் இயக்குநரும், மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா தலைமையில், முதுநிலை மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேபஸ்ரீ சங்கர்ராமன் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 12 வயது முதல் 93 வயது வரை உள்ள 12,156 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வு மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், நோயாளிகளின் உடல் நிலை, மருத்துவத் தரவுகள், பரிசோதனை விவரங்கள், அதன் முடிவுகள், என அனைத்து நிலையிலான தகவல்களும் மதிப்பீடு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் பல முக்கிய மற்றும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. சர்வதேசப் புகழ்பெற்ற 'சான் ஆண்டோனியோ மார்பகப் புற்றுநோய் மருத்துவ மாநாட்டில் அண்மையில் இந்த ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. மருத்துவத் துறையினரிடம் இந்த ஆய்வு முடிவுகள் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
இதுதொடர்பாக டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா கூறுகையில்,
“மார்பகப் பரிசோதனை தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் குறைவாக உள்ளது. ஓரளவு புரிதல் உள்ளவர்கள் கூட மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளும்போது சில விஷயங்களை கவனிக்க மறந்துவிடுகின்றனர். அதாவது, ரத்தப் பரிசோதனை, திசுப் பரிசோதனை (Biopsy), ஸ்கேன் பரிசோதனைகளை தனித்தனியாக வெவ்வேறு ஆய்வகங்களில் மேற்கொள்ளும்போது அதன் முடிவுகள் தவறாக இருக்க அதிக வாய்ப்புள்ளது," என்கிறார்.
மறுபரிசோதனையில் அதிர்ச்சி
வெவ்வேறு ஆய்வகங்களில் மார்பகத் திசுப் பரிசோதனை (Biopsy) செய்தவர்களில் 25% பேருக்கு அந்த முடிவுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன. அதனால், மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது எங்களது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதாவது,
- மொத்தம் இருந்த 12,156 நோயாளிகளில், 479 பேர் திசுப் பரிசோதனை செய்திருந்தனர். அவர்களில், 120 பேருக்கு மீண்டும் பயாப்ஸி சோதனை தேவைப்பட்டது. அவ்வாறு மேற்கொண்டபோது அதில், 75 பேருக்கு (62.5%) புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 37.5% பேருக்கு சாதாரண கட்டி என்பதும் தெரியவந்தது.
- அதேபோன்று, ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 50% பேரின் முடிவுகளும் முரணாக இருந்தன. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்களுக்கு (51%) முறையாக மேமோகிராம் பரிசோதனை செய்யவில்லை என்பதும் ஆய்வின் வாயிலாக புலனானது.

ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களே தீர்வு
மார்பக் கட்டிக்காக ஒரு சிறிய மருத்துவமனை அல்லது கிளினீக்குக்கு செல்லும்போது, அங்கிருந்து ஸ்கேன் செய்ய ஒரு இடத்துக்கும், திசுப் பரிசோதனைக்கு மற்றொரு இடத்துக்கும் நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அலைக்கழிக்கப்படும்போது ஒவ்வொரு இடத்திலும் காத்திருக்கவும், உளைச்சலுக்கு உள்ளாகவும் நேரிடுகிறது. அதுமட்டுமல்லாமல், பரிசோதனை முடிவுகள் தவறாகி நோயாளியின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.
இதற்கு ஒரே தீர்வு என்னவெனில், ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களை (one-stop centre) அணுகுவது மட்டுமே. அந்த மையத்தில், மருத்துவரின் நேரடிப் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் திசுப் பரிசோதனை ஆகிய மூன்றையும் சராசரியாக 125 நிமிடங்களில் மேற்கொண்டுவிடலாம். திசுப் பரிசோதனை முடிவுகள் 72 மணி நேரத்துக்குள் கிடைத்துவிடும். இதன் மூலம் சிகிச்சையைத் தொடங்க வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. இரண்டு அல்லது மூன்றாவது முறை மருத்துவமனைக்குச் செல்லும்போதே முறையான சிகிச்சைத் திட்டமிடலை ஆரம்பித்துவிடலாம்.
இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 2.5 லட்சம் புதிய மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்றத்தில், 'மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நோயறிதல் சட்டம் 2025' மசோதா அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும் அரசு தரப்பில் ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை மையங்களை அதிகமாக அமைக்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். அதனுடன் சமூகத்தில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த புரிதல் மேம்பட வேண்டும். தொடக்க நிலையிலேயே அவர்கள் பரிசோதனைக்கு வருவது அவசியம், என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.