சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI), அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாக, அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) ரகசிய எஸ்-1 (S-1) அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் உள்துறை வணிகத் திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் போட்டியாளர்களின் பார்வைக்கு உடனடியாக வராமல், ஒழுங்குமுறை ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.
இந்த அறிவிப்பு வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பே, ஓபன்ஏஐயின் முக்கிய போட்டியாளரான, Anthropic நிறுவனமும் தனது ரகசிய எஸ்-1 அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. தற்போது சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை நெருங்கியுள்ள ஆந்த்ரோபிக், பொதுச் சந்தைக்கு வருவதற்கான போட்டியில் முன்னிலை வகிப்பதாகக் கருதப்படுகிறது.
எனினும், பங்குச் சந்தை பட்டியலிடலுக்கான துல்லியமான காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.
“பொதுச்சந்தைக்கு எப்போது வருவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தனியார் நிறுவனமாக இருப்பதால் எளிதாக மேற்கொள்ளக்கூடிய சில திட்டங்கள் எங்களிடம் உள்ளன. இருப்பினும், சரியான நேரத்தில் பொதுச் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பை திறந்தவண்ணம் வைத்திருக்கிறோம்,” என்று நிறுவனம் கூறியுள்ளது.
ஓபன்ஏஐயின் ஐபிஓ திட்டங்கள் குறித்த தகவல்கள் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியாகத் தொடங்கின. நிறுவனம் சுமார் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடாக, ஓபன்ஏஐ தன்னை “பப்ளிக் பெனிபிட் கார்ப்பரேஷன்” (Public Benefit Corporation) என்ற அமைப்பாக மறுசீரமைத்துள்ளது.
இந்த முறை, பங்குதாரர்களின் லாபத்தையும் சமூக நலனையும் சமநிலைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. தற்போதைய உரிமை அமைப்பின்படி, நிறுவனத்தின் ஆரம்ப இலாப நோக்கமற்ற அறக்கட்டளை 26 சதவீத பங்குகளையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 27 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீட்டு போட்டி வேகமாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில், சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓபன்ஏஐ, 122 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டி, 852 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியது. அதனைத் தொடர்ந்து, ஆந்த்ரோபிக் தனது ‘Series H’ நிதி திரட்டல் மூலம் 965 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்து, முதன்முறையாக ஓபன்ஏஐயை முந்தியது. செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணியில் நிலைத்திருக்க பெருமளவு முதலீடுகள் தேவைப்படுவதை இந்த போட்டி வெளிப்படுத்துகிறது.
ரகசிய எஸ்-1 தாக்கல் முறை, சமீப காலங்களில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் விருப்பமான நடைமுறையாக மாறியுள்ளது. இதன் மூலம், ஒழுங்குமுறை அமைப்புகளின் கேள்விகள் மற்றும் ஆய்வுகளை சந்தை ஊகங்கள் இல்லாமல் கையாள முடிகிறது. ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகள், வால் ஸ்ட்ரீட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய ஐபிஓ அலை உருவாகி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.