+

மறைந்த ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது - பழமையான ஓவியங்களுக்கு புத்துயிர் தந்த கிருஷ்ணன்!

3000 ஆண்டுகள் பழமையான குறும்பர் ஓவியக் கலையை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றி, அதற்கு புத்துயிர் வழங்கியதற்காக, நீலகிரியைச் சேர்ந்த மறைந்த ஆர்.கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சாதனைகள் புரிந்த இந்தியர்கள், ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். அதன்படி, இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், ஐந்து பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்தப் பட்டியலில், கடந்தாண்டு மறைந்த நீலகிரியைச் சேர்ந்த கிருஷ்ணனும் ஒருவர். சுமார் 3,000 ஆண்டுகள் தொன்மையான குறும்பர் ஓவியக் கலையை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றி, அதற்குப் புத்துயிர் அளித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

kurumba artist krishnan

குறும்பா ஓவியங்களுக்கு புத்துயிர்

குறும்பர் பழங்குடியின மக்களால் செல்லமாக 'கிட்னா' என அழைக்கப்படுபவர்தான் ஓவியர் ஆர்.கிருஷ்ணன். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள வெள்ளரிக்கோம்பை பகுதியைச் சேர்ந்த இவர், நீலகிரி மலைத் தொடர்களில் வாழும் ஆலு குறும்பர் சமூகத்தின் தனித்துவமான ஓவியப் பாணியை கடந்த 30 ஆண்டுகளாகப் பேணி பாதுகாத்து வந்தவர் ஆவார்.

சிறு வயதில் தனது தாத்தாவிடம் இருந்து இந்த ஓவியக்கலையைக் கற்றுக் கொண்டுள்ளார் கிருஷ்ணன். ஆரம்பத்தில் இருந்தே, குறும்பர் ஓவியக் கலையை, வெறும் ஓவியக் கலையாக மட்டும் இதனைப் பார்க்காமல், அழிவின் விளிம்பில் இருந்த தொன்மையான கலைகளில் ஒன்றாகவும் அவர் பார்த்துள்ளார். அதனால்தான், அக்கலையைப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அதனைக் கொண்டு சேர்க்க அவர் விரும்பினார். எனவே, தன் வாழ்நாள் முழுவதையும் அக்கலைக்காகவே அவர் அர்ப்பணித்தார்.

குறும்பர் பழங்குடியின கோவில்களின் சுவர்களில் இந்த ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. காலப்போக்கில் அந்த ஓவியங்கள் அழியத் தொடங்கியதால், அதற்கு புத்துயிர் கொடுக்கும் வேலைகளில் கிருஷ்ணன் ஈடுபட்டார். நவீன காலத்திற்கேற்ப அந்த பழமையான ஓவியங்களுகு கேன்வாஸ் மூலம் புத்துயிர் கொடுத்த பெருமை கிருஷ்ணனையே சாரும்.

kurumba artist krishnan


எழுத்துப் பாறை ஓவியக்கலை

கிருஷ்ணனின் ஓவியங்கள், ‘எழுத்துப் பாறை’ எனப்படும் ஓவியக்கலையை அடிப்படையாகக் கொண்டது. சுமார் 3000 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியங்கள், எளிமையானவையாகவும், அதேசமயம் ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்தவைகளாகவும் உள்ளன. கிருஷ்ணன் வரைந்த ஓவியங்களின் மற்றொரு சிறப்பு, அவை முழுக்க முழுக்க இயற்கை நிறமிகளைப் பயன்படுத்தி வரையப் பட்டவை என்பதும்தான்.

கிருஷ்ணன் எப்போதுமே தனது ஓவியங்களுக்கு செயற்கையான ரசாயன வண்ணங்களைப் பயன்படுத்தியது இல்லை. காடுகளில் கிடைக்கும் இலைகள், மண் மற்றும் மரப்பட்டைகள் போன்ற இயற்கைத் தாதுக்களில் இருந்து பெறப்படும் இயற்கை நிறமிகளையே தனது ஓவியங்களை வண்ணமயமாக்க அவர் பயன்படுத்தினார்.

அதோடு, பாரம்பரிய முறைப்படி தூரிகைகள் இல்லாமல் குச்சி, இலை மற்றும் வெள்ளைத் துணிகளைக் கொண்டே இந்த ஓவியங்களை அவர் படைத்துள்ளார்.

புவிசார் குறியீடுக்கு முயற்சி

ஆலு குறும்பர் மக்களின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் கலாச்சார விழாக்களை கிருஷ்ணனின் ஓவியங்கள் தத்ரூபமாக ஆவணப்படுத்தியுள்ளன. அதோடு, அப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் தாவரங்களும் அவரது ஓவியங்களின் நாயகர்கள்தான். குகைகள் மற்றும் பாறைகளில் இருந்த ஓவியங்களை அதன் பழமை மாறாமல், தனது தூரிகளைகள் மூலம் புத்துயிர் கொடுத்துள்ளார் கிருஷ்ணன்.

கோத்தகிரி பகுதியில் தனது கலைக்கூடத்தில் ஓவியங்களை உருவாக்கிய கிருஷ்ணன், அவற்றைப் பல தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, குறும்பர் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் உயர்த்தியுள்ளார்.

அதோடு, ஆறாவது வரை மட்டுமே படித்த கிருஷ்ணன், தான் கற்றுக் கொண்ட குறும்பர் ஓவியக் கலையை மற்றவர்களுக்கும் கற்பித்து வந்துள்ளார். குரும்பர் கலை வடிவத்தைப் பாதுகாக்க அரும்பாடு பட்டதோடு, அதற்கு புவிசார் குறியீடு பெறவும் தன்னுடைய கடைசி காலம் வரை பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் கிருஷ்ணன்.

kurumba artist krishnan

மறைவுக்குப் பின் பத்மஸ்ரீ விருது

குறும்பர் ஓவியக்கலையின் மறுவாழ்வுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கிருஷ்ணன். தனது 53வது வயதில், கடந்தாண்டு மார்ச் மாதம் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, தொன்மையான குறும்பர் ஓவியக் கலைக்கு அவர் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் விதமாக, தற்போது அவருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.

மறைந்த ஓவியர் கிருஷ்ணனுக்கு சுசிலா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கிருஷ்ணனின் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பம் வறுமையில் வசித்து வருகிறது. பத்மஸ்ரீ விருது அவர்களுக்கு கௌரவமாக மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வரும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

kurumba artist krishnan

ஓவியர் கிருஷ்ணனின் மனைவி மற்றும் குழந்தைகள்

“எனது கணவர் இருந்தவரை நான் எந்தவொரு வேலைக்கும் செல்லவில்லை. ஆனால். அவரது மறைவிற்குப் பிறகு பாக்குத் தோட்டத்தில் வேலைக்குச் சென்று குழந்தைகளை வளர்த்து வருகிறேன். பொருளாதாரப் பிரச்சினைகளால், மருத்துவம் படிக்க விரும்பிய எனது மூத்தமகள் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்குச் செல்கிறார்.

”குறும்பா ஓவியங்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் எனது கணவர். அவர் இறப்பதற்கு முதல்நாள் வரை தனக்குத் தெரிந்த கலையை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென வகுப்புகள் எடுத்து வந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே இந்த பத்மஸ்ரீ விருது கிடைத்திருந்தால், அவர் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்திருப்பார்,” என்கிறார்.

தற்போது இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாகவே இருந்தாலும், எங்களுக்கு குடியிருக்க ஒரு வீடும், குழந்தைகள் படிப்பதற்கு தேவையான உதவிகளும் செய்து தந்தால் இன்னமும் மகிழ்ச்சியாக இருக்கும், எனத் தெரிவித்துள்ளார் கிருஷ்ணனின் மனைவி சுசிலா.

facebook twitter