பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் வங்கி நடவடிக்கைகளுக்கான உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரத்து செய்துள்ளது. இதனால், அந்த வங்கி அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கியின் மூடல் செயல்முறையில் அதன் கடன்கள் மற்றும் பொறுப்புகளை திருப்பிச் செலுத்த போதுமான நிதி இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
“பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை மூடுவதற்கான நீண்டகால கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் இறுதி கட்டமே இன்றைய தீர்மானம்,” என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதற்கு முன்பே, புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதையும், புதிய வைப்பு தொகைகளை ஏற்பதையும் ஆர்பிஐ தடை செய்திருந்தது.
2022ஆம் ஆண்டிலிருந்து இந்த வங்கிக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து மேலாண்மை, ஒழுங்குமுறை பின்பற்றல் மற்றும் செயல்பாடுகளில் குறைகள் இருப்பதாக கண்டறியப்பட்டதால், 2024ஆம் ஆண்டு இந்த கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
“வங்கியின் நிர்வாகம் வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது,” என்றும், அதன் மேலாண்மையின் நிர்வாக முறைகள் பொதுநலத்திற்கும் வைப்பு நிதியாளர்களின் நலன்களுக்கும் பாதகமாக உள்ளன,” என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.
மேலும், “இந்த வங்கியை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதில் எந்த பயனும் இல்லை,” என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் One 97 Communications Ltd வெளியிட்ட அறிக்கையில், “PPBL உடன் எங்களுக்குச் நேரடி நிதி தொடர்போ அல்லது முக்கிய வணிக ஒப்பந்தங்களோ இல்லை,” என்று கூறியுள்ளது.
மேலும், “PPBL தனித்துவமாக செயல்படுகிறது; அதன் நிர்வாகம் அல்லது வாரியத்தில் எங்களுக்குத் தொடர்பில்லை. இதனால் எங்கள் நிறுவனத்திற்கு நேரடி நிதி பாதிப்பு இல்லை,” என்றும், “முன்னதாகவே 2024 மார்ச் 31 நிலவரப்படி எங்களது முதலீட்டை முழுமையாக இழப்பாகக் கணக்கிட்டிருந்தோம்,” என்றும் விளக்கப்பட்டுள்ளது.
அதே சமயம்,
“பேடிஎம் செயலிகள் மற்றும் சேவைகள் எந்த தடையுமின்றி தொடர்ந்து இயங்கும்” என்றும், “Paytm App, Paytm UPI, Paytm Gold, Paytm QR, Paytm Soundbox, Paytm Card Machines, Paytm Payment Gateway, Paytm Money உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் தொடரும்,” என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.