
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் தேடுபொறியான 'Perplexity', இந்தியாவின் பங்குச் சந்தைகளிலிருந்து நேரடித் தரவை அதன் நிதித் தளத்தில் சேர்த்துள்ளது.
இதன் மூலம் தன் உலகளாவிய சந்தை வியூகத்தை விரிவுபடுத்தி பயனர்களுக்கான வலுவான தளத்தை உருவாக்க முனைந்துள்ளது Perplexity செயற்கை நுண்ணறிவு தேடுதல் பொறி நிறுவனம்.
இத்தகைய ஒருங்கிணைப்பினால் பங்குச்சந்தைப் பயனர்கள் தற்போது பங்கு விலைகள், பங்குச் சந்தை செய்திகள், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளிலிருந்து கார்ப்பரேட் நிறுவனத்தின் பங்குச் செய்திகள் ஆகியவற்றைப் பெறலாம். நிறுவனத்தின் டெஸ்க்டாப் தளம், மொபைல் வெப் பதிப்பு மற்றும் செயலிகள் முழுவதும் தகவல்கள் நிகழ்நேரத்தில் கிடைக்கின்றன.

பாரம்பரிய நிதி இணையதளங்களைப் போலல்லாமல், Perplexity அதன் AI இடைமுகம் மூலம் சந்தைத் தரவை வழங்குகிறது, பயனர்கள் "Infosys முடிவுகள்" அல்லது "Tata Motors பங்கு விலை என்ன போன்ற கேள்விகளை எளிய மொழியில் கேட்டு பதில்களைப் பெற முடியும்.
பங்கு விலைகளில் மாற்றம் ஏற்படுவதற்கான காரண சக்திகளை எடுத்துக்காட்டுவதோடு நம்பிக்கை தரும் சூழ்நிலைகள் முதல் அவநம்பிக்கையான சூழ்நிலைகள் வரை அனைத்தையும் சுட்டிக்காட்டி விடும். நிறுவன ஃபைலிங் முதற்கொண்டு நிறுவனத்தின் வரலாற்று செயல் திறன் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது.
இந்தச் சேவை பங்குச் சந்தைகளை மட்டுமல்ல, கிரிப்டோகரன்சிகள், வரவிருக்கும் நிறுவன வருவாய்கள் மற்றும் துறை சார்ந்த போக்குகளைத் தேடும் திறனுடன் பலவற்றை உள்ளடக்கியது. ஆஃப்லைன் பகுப்பாய்விற்காக, பயனர்கள் கடந்த கால நிதி முடிவுகள் போன்ற சில தரவுத்தொகுப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம். கஸ்டம் ஸ்டாக் ஸ்க்ரீனிங் மற்றும் விலை எச்சரிக்கைகள் போன்ற கருவிகள் தயாரிப்பில் இருப்பதாக பெர்ப்ளெக்ஸிட்டி கூறியுள்ளது.