'ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி' – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு!

11:04 AM Aug 17, 2026 | YS TEAM TAMIL

இந்தியாவின் வளர்ச்சி இலட்சித்தின் மையமாக தொழில்நுட்பம் மற்றும் புதுமையாக்கத்தை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தலைமையேற்க அழைப்பு விடுத்ததோடு, அடுத்த ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி திட்டத்தை அறிவித்தார்.

தேசத்தின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நரேந்திர மோடி, ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங், விண்வெளி, ரோபோடிக்ஸ் மற்றும் தரவு மையங்களில் புதிய எல்லைகள் திறக்கப்படுவதாகவும், தொழில்நுட்பம் மற்றும் புதுமையாக்கத்தில் தேசம் தலைமை வகிப்பது அவசியம் என்றும் கூறினார்.

விக்சித் பாரதத்திற்கான ஏழு அம்ச வரைவு திட்டத்தை அறிவித்த மோடி, தொழில்நுட்பம் மற்றும் புதுமையாக்கம், ஏழு ஓடைகளில் (சப்த தாரா) மூன்றாவது சக்தியாக விளங்குகிறது என்றும், குவாண்டம் நுட்பம், விண்வெளி, ரோபோடிக்ஸ், தரவு மையங்கள் ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன என்றார்.

"இன்று உலகம், ஏஐ, குவாண்டம், விண்வெளி, தரவு மையங்கள் சார்ந்ததாக இருக்கிறது. புதிய துறைகள் உருவாகி வருகின்றன,” என்று கூறிய பிரதமர் வளர்ந்து வரும் புதிய நுட்பங்கள் புதிய சவால்களை கொண்டுள்ளன என்றும் கூறினார்.

இந்தியா புதுமையாக்கத்தின் மையமாக உருவாக வேண்டும் என்றும் கூறினார்.

யுபிஐ மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியா உலகிற்கு தனது ஆற்றலை உணர்த்தியுள்ளது என்று கூறிய பிரதமர் டிஜிட்டல் பொது தொழில்நுட்பங்களில் ஒரு சக்தியாக உருவாக வேண்டும் என்றார்.

"இந்தியா அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று கூறியவர் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 6ஜி நுட்பம் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைய வேண்டும் என்றார். இது நம் இலக்காக இருக்க வேண்டும்," என்றார்.

ஏஐ சார்ந்த பொருளாதாரத்திற்கு நாட்டின் இளைஞர்களை தயார் செய்வது முக்கியம் என்று கூறிய பிரதமர் அதற்கான பெரிய திட்டத்தையும் அறிவித்தார்.

"வரும் ஓராண்டில், இந்திய இளைஞர்கள் ஏஐ யுகத்தில் முன் நிற்கும் வகையில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி அளிக்க முயற்சிப்போம்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

செய்தி- பிடிஐ


Edited by Induja Raghunathan