‘கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்யா கட்டி வருகிறது’ - இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின்

11:12 AM Dec 06, 2025 | Chitra Ramaraj

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், ‘இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கூடங்குளத்தில் ரஷ்யா கட்டி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். அதோடு, , கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள மூன்றாவது அணு உலையின் முதற்கட்ட ஏற்றுதலுக்கான அணு எரிபொருளின் முதல் தொகுதியையும், ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் (Rosatom) வழங்கியுள்ளது.

More News :

இந்தியா -ரஷ்யா உச்சி மாநாடு

23வது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின். அதன் ஒரு பகுதியாக, தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேற்று சந்தித்தார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் புடின் இந்தியா வந்துள்ளார். ஏற்கனவே ரஷ்யாவிடன் எரிபொருள் வாங்கினால் கூடுதல் வரியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், புடினின் இந்த வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி - புடின் சந்திப்பில், இந்தியா - ரஷ்யா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் தெரிகிறது. அதனை உறுதி செய்வதுபோல், இந்த சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் மோடியுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் புடின். அப்போது அவர்,

“இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் ரஷ்யா கட்டி வருகிறது,” எனத் தெரிவித்தார்.


மலிவு விலையில் மின்சாரம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் அணுமின் நிலையத்தை இயக்கி வருகிறது இந்தியா. இதில் உள்ள ஆறு அணு உலைகளில் இரண்டு எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டு, மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. மீதமுள்ள நான்கு உலைகளையும் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.

இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை, 1988ம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் கையெழுத்திட்டனர். ஆனால், அதன்பிறகு ரஷ்யா பல நாடுகளாகப் பிரிந்து போனதாலும், இந்தியா அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்தினாலும், கூடுதலாக அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இத்திட்டம் பத்தாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஒப்பந்தம் 2001ம் ஆண்டில் கையெழுத்தானது.

இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஒருபுறம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த அணுமின் நிலையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தால், இந்தியாவிற்கு மலிவான, அதே சமயம் சுத்தமான மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

மிகப்பெரிய அணுமின் நிலையம்

எதிர்பார்ப்பு, எதிர்ப்பும் கலந்த இந்த சூழ்நிலையில்தான், பிரதமருடனான நேற்றைய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து நேரடியாக புடின் பேசியுள்ளார். அதாவது, ‘கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலைகள் கட்டப்பட்டு வருவதையும், அவற்றை விரைந்து முடிக்க ரஷ்யா எவ்வாறு உதவுகிறது,’ என்பது பற்றியும் அவர் பேசினார்.

“கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டுவதற்கான ஒரு முதன்மைத் திட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். ஆறு அணு உலைகளில் இரண்டு ஏற்கனவே மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் நான்கு கட்டுமானத்தில் உள்ளன. இந்த அணு உலையை முழு திறனுக்குக் கொண்டுவருவது இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்கு ஈர்க்கக்கூடிய பங்களிப்பை வழங்கும். தொழில்கள் மற்றும் வீடுகளுக்கு மலிவான மற்றும் சுத்தமான மின்சாரத்தை வழங்கும்.”
”ரஷ்யா மற்றும் பெலாரஸிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் உட்பட புதிய சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட வழித்தடங்களை உருவாக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். சென்னையிலிருந்து விளாடிவோஸ்டாக் கடல்வழி திட்டத்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது,” என்றார்.

இந்தியா - ரஷ்யா நட்பு தொடரும்

கடந்தாண்டு எங்கள் இருப்பு வர்த்தக வருவாய் 12% அதிகரித்துள்ளது. இது இருநாட்டு வர்த்தகத்தில் மற்றொரு சாதனை. இந்தாண்டு முடிவில் இருதரப்பு வர்த்தக வருவாய் இதைவிட அதிகமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர் அளவுக்கு கொண்டு செல்லும் பணியை நாங்கள் தீவிரப் படுத்திருக்கிறோம்.

”எதிர்வரும் காலங்களில் எங்களுடைய இந்த நட்பு, சர்வதேச சவால்களை எதிர்கொள்ள எங்களுக்கு பலத்தைக் கொடுக்கும். இந்த நம்பிக்கை எங்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் என நம்புகிறேன்,” என இவ்வாறு புடின் பேசினார்.

கோடைகாலம், குளிர்காலம் என்றில்லாமல் இந்திய மாநிலங்கள் அண்மைக்காலமாக மின் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் விரிவாகம் தொடர்பான புடினின் பேச்சு மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

கூடுதலாக அமெரிக்காவின் எச்சரிக்கையால், ரஷ்யாவுடனான கொள்முதலை இந்தியா குறைக்க நேரிடலாம் என்ற பேச்சு இருந்த நிலையில், ‘எரிபொருள் விநியோகத்தை தொடர நாங்கள் தயார். 2023க்கு பிறகும் இந்தியா–ரஷ்யா ஒத்துழைப்பு தொடரும்’ என புடின் பேசியிருப்பது, வருங்கால இந்தியா - ரஷ்யா உறவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

எரிபொருள் அனுப்பிய ரோசாட்டம்

புடின் இந்தியா வந்துள்ள நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள மூன்றாவது அணு உலையின் முதற்கட்ட ஏற்றுதலுக்கான அணு எரிபொருளின் முதல் தொகுதியை ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் (Rosatom) வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ரோசாட்டமின் அணு எரிபொருள் பிரிவால் இயக்கப்படும் விமானம் மூலம் வழங்கப்பட்ட இந்த சரக்கு, நோவோசிபிர்ஸ்க் கெமிக்கல் கான்சென்ட்ரேட்ஸ் ஆலையில் தயாரிக்கப்பட்டது. ரஷ்யாவிலிருந்து மொத்தம் ஏழு பெரிய விமானங்கள் மூலம் இந்த எரிபொருள் வழங்கப்பட உள்ளது. தற்போது இதில் ஒரு விமானம் மட்டும் இந்தியா வந்தடைந்துள்ளது.

இந்த எரிபொருள் விநியோகம் 2024ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த மொத்த எரிபொருளும் (7 விமானங்களில் வரும் எரிபொருள்), கூடங்குளம் ஆலையில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது VVER-1000 உலைகளுக்கு, அவற்றின் ஆயுட்காலத்துக்குத் தேவையான எரிபொருளை வழங்க இருக்கின்றன.

6000 மெகாவாட் மின்சார உற்பத்தி

கூடங்குளம் அணுமின் நிலையமானது ஆறு VVER-1000 அணு உலைகளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றும் தலா 1,000 மெகாவாட் என்ற அளவில், மொத்தமாக 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. முதல் இரண்டு அணு உலைகள் முறையே 2013 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்தியாவின் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டன. மீதமுள்ள நான்கு அணு உலைகளும் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன.

ரோசாட்டமின் கூற்றுப்படி, ஆரம்ப இரண்டு அணு உலைகளின் செயல்பாட்டின் போது அவற்றின் செயல்திறனை மேம்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகள், குறிப்பாக மேம்பட்ட அணு எரிபொருள் மற்றும் நீட்டிக்கப்பட்ட எரிபொருள் சுழற்சிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. மூன்றாவது உலைக்கான எரிபொருளை வெற்றிகரமாக வழங்குவது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

மேலும், தற்போதுள்ள உலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதில், ரஷ்ய மற்றும் இந்திய பொறியாளர்களுக்கு இடையேயான வலுவான கூட்டணி இருப்பதாகவும் ரோசாட்டம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.