அன்றாடம் வீட்டில் மீஞ்சும் உணவுகளை தெருநாய்களுக்கு அளிக்கத் தொடங்கிய ரிம்ஜிம், காலப்போக்கில் தெருநாய்களின் காப்பாளராக மாறி, கேட்பாடற்று சுற்றித்திரியும் அவற்றை விபத்திலிருந்தும், காணாமல் போவதிலிருந்தும் காப்பதற்காக, QR கோடுடன் கூடிய காலர் பெல்ட்களை உருவாக்கி வருகிறார்.
தெருநாய்களின் காதலர் டூ காப்பாளர்!
இந்தூரைச் சேர்ந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் ரிம்ஜிம் ஜோஷி. தொடக்கத்தில் இருந்தே சமூகப் பணிகளில், குறிப்பாக கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தெருநாய்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் வசித்த அவர், ஒவ்வொரு நாளும் ஒரு நாய்க்கு உணவளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஆனால், ஒரு நாள் அவரது வீட்டு உதவியாளர், ''தீதி, உங்கள் நாய் வீட்டிலிருந்து குப்பைகளை எடுக்க யாரையும் விடுவதில்லை'' என்று கூறியபோது அவரது பார்வை மாறியது. ஏனெனில், ரிம்ஜிம் எந்தவொரு நாயையும் வளர்க்கவில்லை.
''நான் உணவளித்த தெருநாய் என் வீட்டைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஒரு சில உணவுத் துண்டுகளுக்கு ஈடாக அந்த நாய் அசைக்க முடியாத விசுவாசத்தை திருப்பி அளித்தது'' என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் ரிம்ஜிம்.
அன்று, அவர் அந்த நாயுக்கு டிம்மி என்று பெயரிட்டார். அந்த நொடியிலிருந்து, அவர் தெருநாய்களை வேறொரு புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தார். அதுவரை, தெருநாய்களுக்கு எஞ்சிய உணவை அளித்துவந்தவர், அன்றிலிருந்து அவைகளுக்காக உணவு சமைக்கத் தொடங்கினார். அக்கம் பக்கத்தில் உள்ள பல "டிம்மிகளுடன்" நட்பு கொண்டு, அவற்றிற்கு உணவளித்து பராமரித்தார்.
2016-ஆம் ஆண்டில், ஒரு நாள் அவர் வழக்கமாக உணவளிக்கும் தெருநாய்களில் ஒன்றான வயதான ஒரு கருப்பு நாய் லேட் நைட்டில் கார் விபத்துக்கு ஆளாகியது. ஓட்டுநர் காரை நிறுத்தினார். ஆனால் என்ன செய்வது என்று தெரியாது, காயமடைந்த நாயை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அந்நாய் சாலையோரத்தில் வலியுடன் போராடியது.
இச்சம்பவம் தாமதாகவே ரிம்ஜிம்மின் பார்வைக்கு வர, அவர் மிகவும் வேதனையடைந்தார். இருட்டில் நாய் இருப்பது தெரிந்திருந்தால், அந்த விபத்து நேர்ந்திருக்காது என்று தனக்குள் புலம்பி கொண்டேயிருந்தார்.
அதன் விளைவாக இருளான பகுதியிலும் தீயணைப்பு வீரர்களின் சட்டைகள் ஒளிருவது போல தெருநாய்களுக்கும் ஒளிரும் பெல்ட்களை மாட்டிவிட்டால் டிரைவர்கள் நாய்களை இருள்சூழ்ந்த பகுதியிலும் தெளிவாக பார்க்க முடியுமே என்ற யோசனை வந்துள்ளது.
சற்றும் தாமதிக்காது, வடிவமைப்பு பற்றியோ உற்பத்தியோ பற்றி எந்த அறிவும் இல்லாமல், டெனிம் மற்றும் தற்காலிக பிரதிபலிப்பு பட்டைகளைப் பயன்படுத்தி அவரது முதல் பெல்ட்டை தைத்து, பரிசோதனை செய்யத் தொடங்கினார். பின்னர் அவர் துணி மற்றும் நைலான் பட்டைகளுக்கு மாறினார். பல அப்டேஷன்களுக்குப் பிறகு, பொருத்தமானதை உருவாக்கினார்.
''முதலில், நான் அவற்றை என் சுற்றுப்புறத்தில் உள்ள நாய்களுக்கு அணிவித்து சோதித்தேன். ஆச்சரியப்படுத்தும் வகையில், விபத்துகள் குறைந்தன. நாய்கள் காணாமல் போவது குறைந்தது. மற்ற மீட்பவர்களுக்கும் உணவளிப்பவர்களுக்கும் பெல்ட்களை விநியோகிக்கத் தொடங்கினேன்" என்றார் ரிம்ஜிம்.
அப்படியாக, 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அவர் 10,000-க்கும் மேற்பட்ட பெல்ட்களை விநியோகித்தார். ஆனால், தேவை இன்னும் அதிகரித்தது. 2019-ம் ஆண்டில், அவரும், அவரது கணவர் துஷார் ஷெண்டேவும் இணைந்து நாய்களுக்கு ஒளியை பிரதிபலிக்கும் பெல்ட்களை தயாரிக்கும் பாவ்சிட்டிவிட்டி எனும் வணிகத்தைத் தொடங்கினர். இருப்பினும், பெல்ட்டை மலிவு விலையான ரூ.40 நிர்ணயித்து அனைவருக்கும் குறிப்பாக மீட்பவர்கள் மற்றும் விலங்கு நலக்குழுக்கள், வாங்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இருளிலும் தெருநாய்களின் இருப்பை உறுதிச் செய்யும் ஒளிரும் பெல்ட்கள்!
2023ம் ஆண்டில், அவர்கள் QR குறியீடுடன் கூடிய பெல்ட்களை அறிமுகப்படுத்தினர்.
"இந்த QR குறியீட்டில் ஒரு நாயின் இருப்பிடம், அதன் மெடிக்கல் ஹிஸ்டரி மற்றும் அதன் பராமரிப்பாளரின் விவரங்களைச் சேமிக்க வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாய் தொலைந்து போனால், யார் வேண்டுமானாலும் காலரை ஸ்கேன் செய்து அவற்றின் பராமரிப்பாளருடன் அவற்றை மீண்டும் இணைக்க முடியும்.
குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பட்டாசுகளின் சத்தத்தால் நாய்கள் அதன் சுற்றுப்புறங்களை விட்டு ஓடிவிடும் போது இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த காலர் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டு, தீபாவளியின் போது மட்டும் 70க்கும் மேற்பட்ட தொலைந்து போன நாய்களை அதன் உரிமையாளரிடம் சேர்ப்பதற்கு உதவியது" என்று விவரித்தார் அவர்.
ஒரு காலத்தில் ஒரு பொத்தானைத் தைக்கவே சிரமப்பட்ட ரிம்ஜிம், பெல்ட்களை தைக்க பின்தங்கிய பின்னணியை சேர்ந்த பெண்களைப் பணியமர்த்தத் தொடங்கினார். ''எனது முதல் ஊழியர் எனது வீட்டு உதவியாளர். வேலை தேவைப்படும் மற்ற பெண்களுக்கு அவர் என்னை அறிமுகப்படுத்தினார். இன்று, இந்த பெல்ட்களை தயாரிக்க 23 பெண்கள் எங்களுக்கு உதவுகிறார்கள். அவர்களில் பலர் தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்கிறார்கள். இதுவரை, 150 பெண்கள் எங்களுடன் இணைந்துள்ளனர்" என்று பெருமையும் கூறினார் ரிம்ஜிம்.
ஆனால், ரிம்ஜிம் பார்ப்பது போல் எல்லோரும் தெருநாய்களைப் பார்ப்பதில்லை. அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, தெருநாய்களை ஒரு தொல்லையாகக் கருதும் மக்களைக் கையாள்வது.
"நாங்கள் ரேபிஸ் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தும்போது, மக்கள் எங்களிடம், 'இந்த நாய்களை அகற்றுங்கள். அவை இங்கே இருப்பதை நாங்கள் விரும்பவில்லை' என்று கூறுகிறார்கள். சுற்றுப்புறங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது பிரச்சினையைத் தீர்க்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மாறாக, எலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சமநிலையை குழைக்கும்" என்றார்.
தெருநாய்களை பற்றிய பயமும், தவறான புரிதலும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடும் என்பதை உணர்ந்த அவர், பள்ளிகளில் விழிப்புணர்வு அமர்வுகளை நடத்தத் தொடங்கினார். தெருநாய்களுடன் பாதுகாப்பாக எவ்வாறு தொடர்புகொள்வது, நாய் நடத்தையைப் புரிந்துகொள்வது மற்றும் நாய் துரத்துதல் அல்லது குரைக்கும் போது அச்சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் நிஜ வாழ்க்கை உதாரணங்களைப் பயன்படுத்தி, குழந்தைகள் எளிய முறையில் கற்றுக் கொடுக்கின்றனர்.
இதுவரை, பாவ்சிட்டிவிட்டி இந்தூரில் உள்ள 14 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேலும் நகரங்களுக்கு விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. பாவ்சிட்டிவிட்டியின் பெல்ட்கள் அதன் சொந்த வலைத்தளத்திலும் அமேசானிலும் கிடைக்கின்றன.
வணிகரீதியாகவும் பாவ்சிட்டிவிட்டி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு, 2023ம் ஆண்டில் ரூ.56 லட்சம் வருவாயை ஈட்டியது. விலங்கு தீவன நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தெருநாய்கள் மற்றும் பிற விலங்குகளின் பாதுகாப்பை மேம்படுத்த விரும்பும் செல்லப்பிராணி உரிமையாளர்கள் என 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளது.
"பெரியவர்களின் பார்வையை நாம் எப்போதும் மாற்ற முடியாது, ஆனால் நாம் ஒரு இரக்கமுள்ள தலைமுறையை உருவாக்க முடியும். குழந்தைகள் சரியான கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். விலங்குகளுடன் எவ்வாறு இணைந்து வாழ்வது என்பதை அவர்கள் புரிந்துகொண்டு வளர்ந்தால், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும், மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க முடியும்.
எதிர்காலத்தில் அதிகமான பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்குவதற்கும் எங்கள் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும் நாங்கள் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். அடுத்ததாக நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் பசுக்களுக்கு பெல்ட்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் அவை தாக்கப்படும் அபாயத்தில் உள்ளன" என்று கூறி முடித்தார்.
Edited by Induja Raghunathan