+

சிறிய ஆலையில் துவங்கி ரூ.190 கோடி பிராண்டாக வளர்ந்த காஸியாபாத் நிறுவன வெற்றிக்கதை!

வெகுமக்களுக்கான வாங்ககூடிய விலையிலான ஏர்கூலர்களை தயாரிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட ’தெர்மோகூல் ஹோம் அப்லையன்சஸ்’ இப்போது ஆய்வில் கவனம் செலுத்தி சர்வதேச விரிவாக்கத்தை இலக்காக கொண்டுள்ளது.

1990'களில் ஏசி சாதனங்கள் ஆடம்பரமாக கருதப்பட்டு, சில இந்திய இல்லங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இந்த நிலையை மாற்ற விரும்பினர்.

குறைந்த மூலதனம் மற்றும் தரம் மீதான மிகுந்த கவனத்தோடு, ராஜீவ் குப்தா மற்றும் சஞ்சீவ் குப்தா சகோதரர்கள் எல்லாராலும் வாங்கக் கூடிய விலையில், தங்களின் சிறிய ஆலையில் இருந்து ஏர்கூலர்களை தயாரிக்கத்துவங்கினர்.

Thermocool

முப்பது ஆண்டுகளுக்கு பின் இப்போது, அவர்களின் சிறிய ஆலை ’தெர்மோகூல் ஹோம் அப்லையன்சஸ்’ (Thermocool Home Appliances) என்ற ஆலமரமாக வளர்ந்துள்ளது. ரூ.190 கோடி மதிப்பிலான இந்த பிராண்ட், திறன் மிக்க, எரிசக்தி ஆற்றல் கொண்ட, சூரிய சக்தியால் இயங்கும் சாதனங்களின் பலத்தால் உருவாகி, சர்வதேச சந்தையிலும் நுழைய திட்டமிட்டுள்ளது.

“என் தந்தை மற்றும் மாமா, வாடிக்கையாளர்கள் பிராண்டின் தரம் மற்றும் சேவையில் நம்பிக்கை வைத்தால், வளர்ச்சி தானாக வரும்,” என நம்பிக்கை கொண்டிருந்தனர் என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசிய ராஜீவின் மகனும் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை தலைவருமான துஷார் குப்தா கூறினார்.

1992ல் எளிமையாக துவங்கப்பட்ட, தெர்மோகூல் நிறுவனம், பிராந்திய ஏர்கூலர் தயாரிப்பாளர் என்பதில் இருந்து, வாஷிங் மெஷின், டிவி, ஹீட்டர், சமையலறை பொருட்கள் என 200க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் பிராண்டாக இன்று உருவாகியிருக்கிறது.

இந்நிறுவனம் குளிர்சாதனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பிரிவில் 8-10 சதவீத பங்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. உபி, பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை முக்கிய சந்தையாக கொண்டுள்ளது.

இந்த ஆண்டு ரூ.190 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், அடுத்த ஆண்டு ரூ.250 கோடி ஈட்ட திட்டமிட்டுள்ளது.
Factory

புதுமையாக்கத்தை நோக்கிய பயணம்

“ஏர்கூலர்களை கடந்து பரவலான பொருட்கள் பிரிவுக்கு விரிவாக்கம் அடைந்தது தெர்மோகூல் நிறுவனத்திற்கான முக்கிய மாற்றமாக அமைந்தது, என்கிறார் துஷார் குப்தா. அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலையில் பட்டம் பெற்ற பிறகு, தெர்மோகூலை தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமாக மாற்றும் நோக்கத்துடன் 2020ல் குடும்ப வர்த்தகத்தில் இணைந்தார் துஷார்.

“தரவுகள் சார்ந்த முடிவெடுத்தலை அறிமுகம் செய்து, உற்பத்தியை ஆட்டோமேஷன் நோக்கி கொண்டு செல்ல முதலீடு செய்து, நேரடி விற்பனை (D2C) பிரிவை மேலும் வளர்த்தெடுத்தோம்,” என்கிறார்.

மேம்பட்ட எரிசக்தி ரேட்டிங் கொண்ட மாடுலர் ஏர்கூலர்கள், ஸ்மார்ட் வாஷிங் மெஷின், பசுமை ஹீட்டர்கள் உள்ளிட்டவற்றை நிறுவனம் அறிமுகம் செய்தது. மலிவான விலை மற்றும் நீடித்த உழைக்கும் தன்மையை உறுதி செய்வதன் மூலம் இந்த புதுமையாக்கங்கள் நிறுவனம் புதிய சந்தைகளில் நுழையவும் மாறிவரும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவியது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், உற்பத்தி மற்றும் செயல்திறன் மேம்பாட்டிற்காக நிறுவனம் ரூ.30 கோடி மதிப்பிலான தானியங்கி உற்பத்தி ஆலையை காஸியாபாத்தில் துவக்கியது. மேலும், வழக்கமான டீலர் முறையில் இருந்து D2C முறையில் கவனம் செலுத்துவதும் அதன் சந்தை இருப்பை வலுவாக்கியுள்ளது.

நுகர்வோர் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பிறகு 2023ல் நிறுவனம் இ-காமர்சில் நுழைந்தது. "பெரும்பாலான வர்த்தகம் ஆப்லைன் வழிகளில் வரும் நிலையில், 10 சதவீத வர்த்தகம் ஆன்லைனில் வருகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.”

“எங்கள் சொந்த D2C இணையதளமும் மெல்ல வளர்ந்து பிராண்டிற்கான முக்கிய அறிமுக புள்ளியாக அமைகிறது. லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் வாயிலாக அடுத்த சில ஆண்டுகளில் ஆன்லைன் விற்பனை அதிகரிக்கும், என எதிர்பார்க்கிறோம்,” என்கிறார் துஷார்.

தெர்மோகூல் நீடித்த தன்மையை முக்கியமாகக் கொண்டுள்ளது. நிறுவன உற்பத்தி ஆலை எரிசக்தி செயல்திறன் அமைப்புகள், மறுசுழற்சி பேக்கேஜ், கழிவுகளை குறைப்பது ஆகியவற்றை பின்பற்றுகிறது.

“வடிவமைப்பில் பிளாஸ்டிக்கை குறைத்து, மறுசுழற்சி தீர்வுகளை செயல்படுத்துகிறோம். செயல்திறன் மிக்க ஏர்கூலர், ஹீட்டர்கள் மற்றும் வாஷிங் மிஷின் எங்கள் விற்பனையில் மையமாக திகழ்கின்றன,” என்கிறார் குப்தா.
aircooler

பாரம்பரியத்துடன் தொழில்நுட்பம்

இந்திய வீட்டு உபயோக பொருட்கள் சந்தை 2024ல் 22.54 பில்லியன் டாலராக இருக்கிறது மற்றும் 2030ல் ஆண்டு அடிப்படையில் 7.2 சதவீதம் வளரும், என கிராண்ட் வியூ ரிசர்ச் தெரிவிக்கிறது. மேக் இன் இந்தியா போன்ற அரசு திட்டங்கள், இந்த தேவையை அதிகரித்து, கோத்ரெஜ், வோல்டாஸ் போன்ற உள்நாட்டு பிராண்டுகள், பன்னாட்டு பிராண்ட்களை எதிர்கொள்ள உதவுகின்றன.

வர்த்தகம் வளரும் நிலையில், விலை, விநியோக வலைப்பின்னல், பிராண்ட் விழிப்புணர்வுக்கான ஒதுக்கீடு ஆகியவற்றில் நிறுவனம் ஏற்கனவே நிலைப்பெற்ற பிராண்ட்களிடம் இருந்து சவாலை எதிர்கொள்கிறது.

போட்டி சூழலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மலிவான விலை மற்றும் புதுமையாக்க உத்திகளை நிறுவனம் நம்புகிறது.

"மூலப்பொருட்களை உள்ளூரில் தருவித்து, உற்பத்தி செலவை கட்டுப்படுத்துகிறோம், என கூறும் குப்தா, எங்கள் புதுமையாக்கம் தேவையில்லாத தொழில்நுட்ப அம்சங்களில் அல்லாமல், எரிசக்தி திறன், உகந்த வடிவமைப்பு ஆகிய நடைமுறை தன்மை கொண்டுள்ளது,” என்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளில் நிறுவனம் சீரான வளர்ச்சி கண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் 25-30 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

“எங்கள் ஏர்கூலர் வர்த்தகம் சிறப்பான செயல்பாட்டை கொண்ட பிரிவாக தொடர்கிறது. எங்கள் முன்னணி பொருளாக விளங்கி, அதிக விற்பனை, வருவாய் ஆகியவற்றை அளிக்கிறது,” என்கிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் நிறுவனம் வலுவான இருப்பை உருவாக்கியுள்ளது. ”இந்த பகுதிகள் ஆண்டு அடிப்படையிலான சீரான வளர்ச்சியை அளித்து, மத்திய வருவாய் பிரிவினரை கவரும் பணத்திற்கு ஏற்ற மதிப்பை அளிக்கிறது, என்கிறார்.

வருங்காலத்தில் இந்தியாவுக்குள் தீவிரமாக விரிவாக்கம் செய்வதோடு, நேபாளம், பூட்டான் மற்றும் தென்னமரிக்காவிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது தெர்மோகூல்.

“இந்த சந்தைகள் நம்நாட்டு நுகர்வோர் போன்ற தன்மையை பெற்றுள்ளதோடு, எங்கள் பொருட்களுக்கும் ஏற்றதாக அமைகின்றன,” என்கிறார்.

ஸ்மார்ட் மற்றும் சூரிய மின்சக்தி பொருட்களுக்காக நிறுவனம் ஆய்விலும் கவனம் செலுத்தி வருகிறது. ஃபிரிட்ஜ், ஏசி, ஐஓடி கொண்ட வாஷிங்மெஷின் ஆகியவை இதில் அடங்கும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி வருவாயை இலக்காக கொண்டுள்ளதோடு, ஐந்தாண்டுகளில் ரூ.500 கோடியை அடைய விரும்புகிறது.

தொழில்நுட்ப மேம்பாடு, கொள்ளலவு விரிவாக்கம் ஆகியவற்றுக்கு தேவையான நிதி திரட்ட அடுத்த 2-3 ஆண்டுகளில் பங்குச்சந்தையில் நுழையவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று கூறும் குப்தா, எங்கள் விழுமியம் மற்றும் வளர்ச்சி பார்வைக்கு ஏற்ற கூட்டு முயற்சி மற்றும் இணை திட்டங்களை பரிசீலிக்கிறோம், என்கிறார்.

ஆங்கிலத்தில்: டெபோலினா பிஸ்வாஸ், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter