சென்னை நகர போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் போட்டி - வெற்றியாளர்கள் அறிவிப்பு!

10:05 AM Mar 06, 2026 | cyber simman

சென்னையின் நகர்ப்புற போக்குவரத்து சவால்களுக்கு தீர்வு காண CUMTA மற்றும் StartupTN இணைந்து நடத்திய ‘Urban Move: Open Innovation Challenge’ சவாலில் பங்கேற்று வெற்றிபெற்ற அணிகள் அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.


சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு  (CUMTA) மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) இணைந்து ‘Urban Move: Open Innovation Challenge’ சவாலை அறிமுகப்படுத்தியது. சென்னை நகரின் போக்குவரத்து சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் உருவாக்கும் வகையில் இந்த சவால் தொடங்கப்பட்டது.

இந்த முயற்சி, மார்ச் 13, 2025 அன்று StartupTN-ன் சென்னை அலுவலகத்தில், CUMTA-வின் உறுப்பினர் செயலாளர் ஜெயக்குமார், மற்றும் StartupTN-ன் செயல்திட்ட இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

கருப்பொருள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் / மாணவர்கள் கீழ்க்கண்ட முக்கிய தலைப்புகளை மையமாகக் கொண்டு தீர்வுகளை உருவாக்க அழைக்கப்பட்டனர்:

கருப்பொருள் 1: சென்னை பொது போக்குவரத்திற்கான தொடர்பாடல் திறன் கொண்ட திறந்த வலை வரைபடம் (Interactive Web Map)

கருப்பொருள் 2: மொபைல் செயலிகள் இல்லாமல் பொதுப் போக்குவரத்திற்கான தடையற்ற டிக்கெட் முறை

கருப்பொருள் 3: செயற்கை நுண்ணறிவு மூலம் போக்குவரத்து தரவு உருவாக்கம் மற்றும் கண்காணிப்பு

கருப்பொருள் 4: மொபைல் செயலியின் மூலம் நகர்ப்புற கட்டமைப்பு வரைபடம் மற்றும் தணிக்கை

கருப்பொருள் 5: நகர்ப்புற கட்டமைப்பு மேலாண்மைக்கான Augmented Reality செயலி

பங்கேற்ற அணிகள்

இந்த Urban Move - Open Innovation Challenge சலவலில் 161 அணிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். அவற்றில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற மதிப்பீட்டு செயல்முறையின் மூலம் சிறந்த 20 அணிகள் அடுத்தக் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன.

ஒவ்வொரு கட்டத்திலும், தொழில்நுட்ப நிபுணர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் வழிகாட்டுதலும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் அணிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், அணிகள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), Augmented Reality, பொருட்களின் இணையம் (Internet of Things – IoT), மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (GIS) போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சென்னை பெருநகரப் பகுதி (Chennai Metropolitan Area – CMA) எதிர்கொள்ளும் முக்கியமான போக்குவரத்து சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கி உள்ளனர்.

20 அணிகள் தேர்வு

முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 20 அணிகளின் தீர்வுகள் வழிகாட்டிகள் / தொழில் துறை நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு கருப்பொருளுக்கும் வெற்றியாளர் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற அணி (Runner-up) தேர்வு செய்யப்பட்டது.

ஒவ்வொரு வெற்றியாளர் அணிக்கு ரூ.50,000/- பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ. 30,000/- பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணிகள் உருவாக்கிய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளில் மேலும் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு (Scaling) நடைமுறைப்படுத்தப்படுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும். மேலும், இந்த அணிகளுக்கு வளர்ப்பு (Incubation) மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை வழங்குவதற்காக CUMTA மற்றும் StartupTN தொடர்ந்து வழிகாட்டுதல் (Mentorship) வழங்கும்.

வெற்றியாளர்கள்

இத்தகைய போக்குவரத்து சார்ந்த புதுமைகளை CUMTA ஆதரித்து வளர்ச்சியடையச் செய்து, அவற்றின் மேம்பாடு மற்றும் வணிகரீதியான செயல்படுத்தலுக்கு தேவையான ஆதரவினை வழங்கும்.

இந்தப் போட்டியின் மூலம் உருவாகியுள்ள தீர்வுகள், மேலும் மேம்படுத்த தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் (Mentorship) CUMTA மற்றும் StartupTN ஆல் வழங்கப்படும் என்று CUMTAவின் உறுப்பினர் செயலாளர் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற திட்ட முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன; அவற்றை CUMTA பரிசீலித்து, முன்னெடுத்து செல்ல தேவையான ஆதரவினை வழங்கும்.

உருவாக்கப்பட்ட தீர்வுகளின் செயல்முறை காட்சி (Demo) காணொளிகள் மற்றும் தகவல்களை CUMTA இணையதளத்தில் காணலாம்: https://cumta.tn.gov.in/openinnovationchallenge/


Edited by Induja Raghunathan