தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் 'StartupTN', விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்வெளித் தொழில்நுட்ப துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வழியாக, தமிழ்நாட்டில் இயங்கும் விண்வெளித் தொழில்நுட்பத் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு இணை பங்கு முதலீடு வழங்கும் 'தமிழ்நாடு விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிதித்திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெற துவங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை இணை பங்கு முதலீடு வழங்கப்படும், என இது தொடர்பான செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இணை முதலீடு
அதாவது, பிற முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டும் நிறுவனங்களுக்கு அதற்கேற்ப இணை பங்கு முதலீட்டு நிதியினை தமிழ்நாடு அரசு வழங்கும். விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நிபுணர் குழு கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டு, நிபுணர் குழுவின் பரிந்துரைக்கேற்ப முதலீட்டு நிதி வழங்கப்படும். மேலும், நிதியானது பல்வேறு கட்டங்களாக செயல்திறன் சார்ந்து மதிப்பிடப்பட்டே வழங்கப்படும்.
செயற்கைக்கோள் அமைப்பு, ஏவூர்தி தொழில்நுட்பம், பூமி கண்காணிப்பு தீர்வுகள், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விண்வெளி பகுப்பாய்வு உள்ளிட்ட விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் புதிய தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
நிறுவனங்கள் பதிவு
- விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் DPIIT தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- வலுவான சந்தை வாய்ப்பு உள்ள புத்தாக்கம் நிறைந்த தயாரிப்புகள் அல்லது சேவைகளை கண்டறியும் நிறுவனமாக இருக்க வேண்டும்.
- இந்த நிதியினை, மாதிரி வடிவமைப்பு, பொறியியல் வடிவமைப்பு, தொழிநுட்ப சோதனை, ஆய்வக சோதனை, சந்தைக்கு ஏற்ற தயாரிப்பு ஆகியவற்றிக்கு பயன்படுத்தலாம்.
- ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனத்தின் பிரிவாகவோ, கூட்டு/இணை நிறுவனமாகவோ இருக்கக் கூடாது.
- எந்த அரசு அமைப்பினாலும் தடைசெய்யப்பட்டவராக இருந்தால் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.
இந்த நிதி ஆண்டில் இத்திட்டத்திற்கென ரூபாய் 10 கோடி நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
விண்ணப்பம்
தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதிக்காக விண்ணப்பிக்க விரும்பும் புத்தொழில் நிறுவனங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: https://form.startuptn.in/TNSTF
தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு StartupTN இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும் தவல்களுக்கு spacetech@startuptn.in முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
Edited by Induja Raghunathan