Stock News: சென்செக்ஸ் 1800 புள்ளிகள் கடும் சரிவு - காரணம் என்ன?

12:35 PM Mar 23, 2026 | muthu kumar

சர்வதேச சந்தை பலவீனம் மற்றும் மேற்கு ஆசியப் பதற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை கடுமையாக சரிந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் காலை 10:45 மணியளவில் 1,785.12 புள்ளிகள் அல்லது 2.4% வீழ்ச்சி அடைந்து 72,747.84 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடு நிப்டி 567.15 புள்ளிகள் அல்லது 2.45% சரிந்து 22,547.35 ஆக குறைந்தது. இது 2025 ஏப்ரல் 9க்கு பின் காணப்படும் குறைந்த நிலையாகும்.

சற்று முன் நிலவரப்படி மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 1831 புள்ளிகள் சரிவு கண்டு 72.702 புள்ளிகளாகவும், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 592 புள்ளிகள் சரிவு கண்டு 25,522 புள்ளிகளாகவும் உள்ளன.

சந்தையின் பரவல் மிகவும் பலவீனமாக இருந்தது. மொத்தம் 521 பங்குகள் மட்டுமே உயர்ந்த நிலையில் இருந்த நிலையில், 3,265 பங்குகள் சரிவை சந்தித்தன; 138 பங்குகள் மாற்றமின்றி முடங்கின.

முக்கிய பங்குகளில், ஹெச்டிஎப்சி வங்கி பங்கு சுமார் 2.5% சரிந்தது. அதன் பாக்டைம் தலைவர் அதானு சக்ரபோர்த்தி ராஜினாமை செய்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு அமர்வுகளில் 7.4% வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பங்கு 3.6% குறைந்தது. 2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான ரூ.6,337 கோடி வரி கோரிக்கை வருமான வரித்துறையால் விடுக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

16 முக்கிய துறை குறியீடுகளும் சிவப்பில் முடங்கின. நிப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 3.82% மற்றும் நிப்டி மிட்கேப் 100 குறியீடு 3.45% வீழ்ச்சி கண்டன.

சரிவுக்கான முக்கிய காரணங்கள்:

மேற்கு ஆசிய மோதல் நான்காவது வாரத்துக்குள் நுழைந்ததால், எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.62% உயர்ந்து பேரலுக்கு 112.9 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறுவது சந்தைக்கு அழுத்தம் ஏற்படுத்தியது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்தது. ஹார்முஸ் நீரிணை தொடர்பான அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்வினைகள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதிக்கும் என்ற பயத்தை உருவாக்கியுள்ளது.

மொத்தத்தில், சர்வதேச காரணிகளும் உள்நாட்டு நிதி அழுத்தங்களும் இணைந்து சந்தையில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

ஹெச்.சி.எல்.

டெக் மகீந்திரா

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ரிலையன்ஸ்

லார்சன்

எம்.சி.எக்ஸ் இந்தியா

இண்டெர் குளோ

ஸ்ரீராம் பைனான்ஸ்

அதானி எண்டெர்பிரைஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய சந்தை நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 பைசா சரிந்து, ரூ.93.94 என்ற புதிய குறைந்த நிலையை எட்டியது. இது எண்ணெய் விலை அதிகர்ப்பு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றத்தால் ஏற்பட்டது.