தாட்கோ மற்றும் ரிவின் ஹெல்த் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 150 புதிய பிசியோதெரபி மையங்கள் அமைக்க திட்டம்!

03:36 PM Dec 05, 2025 | cyber simman

தமிழ்நாடு ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (TAHDCO) 'ரிவின் ஹெல்த்' (Rewin Health) நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 150புதிய பிசியோதெரபி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

More News :

இந்த திட்டம், பிசியோதெரபி சார்ந்த அடிப்படையான சேவைகளை பரவலாக்கும் நோக்கம் கொண்டுள்ளதோடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மத்தியில் தொழில்முனைவுக்கான ஊக்கமாகவும் அமையும் நோக்கம் கொண்டுள்ளது.

150 பிரத்யேக மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படுவது, மாநிலத்தின் சுகாதார சூழலிலும் தாக்கம் ஏற்படுத்தும் என்று இது தொடர்பான செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த மையங்கள் டிஜிட்டல் சிகிச்சைகளையும் உள்ளடக்கியிருக்கும். தமிழ்நாடு முழுவதும் எளிதாக அணுகக் கூடிய வகையில் பிசியோதெரிபி சேவைகளை வழங்கும். ஒவ்வொரு மையமும், தொடர்புடைய வல்லுனர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், நிர்வாக ஊழியர்கள் என பலவித வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மத்தியில் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையிலும் அமையும்.

“ரிவின் ஹெல்த், இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறது. ஒவ்வொரு மையமமும் உலகத்தரமான வசதிகள் கொண்டிருக்கும் வகையில் தொழில்நுட்ப அம்சங்கள், பயிற்சி மற்றும் செயல்முறை வரைவுதிட்டம் வழங்குவோம். இது வர்த்தகம் அல்ல. 150 சமூகங்களில் தரமான ஆரோக்கிய சேவை அளிப்பது,” என்று ரிவின் ஹெல்த் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.விஜய் கருணாகரன் கூறியுள்ளார்.

“இந்த திட்டம், பொது சுகாதார நோக்கம் மற்றும் சமூக நோக்கிலான அதிகாரம் அளித்தல் இணைந்தது. கணிசமான மானியம் வழங்குவதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தொழில் துவங்குவதற்கான வரம்புகளை நீக்குகிறோம்,” என்று தாட்கோ நிர்வாக இயக்குனர் கே.எஸ்.கந்தசாமி கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் ஆர்வம் உள்ள தொழில்முனைவோருக்கு நிதி உதவி அளிக்கப்படும். திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.6,00,000/- ஆகும். தொழில்முனைவோர் பங்களிப்பு 5 %  (ரூ.30,000). தாட்கோ ஆதரவாக 35% முதலீடு வரை, தொழில்முனைவோர் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் முன்னதாக வழங்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Induja Raghunathan