+

10 கோடி மரங்கள்; 65 புதிய காடுகள்: ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதை வென்ற தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாஹு!

தமிழ்நாட்டின் கூடுதல் தலைமை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுப்ரியா சாகுவிற்கு, ஐநாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பூமியின் சாதனையாளர்கள் 2025 விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கூடுதல் தலைமை செயலாளராக பதவி வகித்து வரும், சுப்ரியா சாஹு ஐஏஎஸ், ஐநா சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருதான, 'பூமியின் சாதனையாளர்கள் 2025' (Champions of the Earth 2025) விருதை வென்றுள்ளார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகியவற்றில் சுப்ரியா சாஹு ஆற்றி வரும் நீண்டகால மற்றும் முன்னோடிப் பணிகளுக்காக அவர் 'உத்வேகம் மற்றும் செயல்பாடு' (Inspiration and Action) பிரிவில் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

நைரோபியில் நடைபெற்ற ஐநா சுற்றுச்சூழல் திட்ட நிகழ்வில் இந்த விருதை சுப்ரியா பெற்றுக் கொண்டார்.

supriya sahu

இயற்கை மீது தீராக்காதல்

ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாஹு, கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறைக்கான கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப்பணியில் இருந்து வரும் இவர், இயற்கையின் மீதும், வனவிலங்குகள் மீதும் அதிக அக்கறைக் கொண்டவர். குறிப்பாக யானைகள் இவருக்குப் பிடித்தமான விலங்குகளில் ஒன்று. குடும்பப் பிணைப்பு மற்றும் தலைமைப் பண்பு போன்ற பல நல்ல குணங்களை யானைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும், என அடிக்கடி அவர் கூறுவதுண்டு. அதனால்தான், தனது சமூகவலைதளப் பக்கங்களில் யானைகள் தொடர்பான பதிவுகளையும் அதிகம் வெளியிட்டு வருகிறார் சுப்ரியா.

2000ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்தார் சுப்ரியா. அப்போது அவர், நீலகிரியின் பசுமையை பாதுகாக்கும் முயற்சியாக, ‘ஆபரேஷன் ப்ளூ மவுண்டன்’ என்ற பெயரில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டதற்குப் பின்னணியில் சில நினைவுகள் உள்ளதாக அவர் கூறுகிறார்.

“நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, வனப்பகுதிகளில் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை யானைகள் சாப்பிடுவதை நான் பார்த்து வேதனை அடைந்துள்ளேன். நமது கிரகம் மூச்சுத் திணறுகிறது என்பதை அப்போது நான் உணர்ந்தேன். அந்த அனுபவம்தான் எனக்குள் இந்த மாற்றத்தை கொண்டுவரத் தூண்டியது,” என்கிறார் சுப்ரியா.
Supriya Sahu

10 கோடி மரங்கள், 65 புதிய காடுகள்

சுற்றுச்சூழல் மாசுவிற்கு எதிராக மட்டுமின்றி, வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் பல நடவடிக்கைகளை சுப்ரியா சாஹு முன்னெடுத்துள்ளார். அவை:

  • கடலோரப்பகுதி மீள்திறனை (Coastal Resilience) மையமாக கொண்ட, தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் என்ற லாப நோக்கமற்ற அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான மரங்களை நடுவதற்கு தலைமைத் தாங்கியவர் சுப்ரியா. இந்த முயற்சியின் மூலம் 65 புதிய காப்புக் காடுகளை அவர் நிறுவியுள்ளார். மாங்குரோவ் காடுகளின் பரப்பளவை இரட்டிப்பாக்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரின் நடவடிக்கைகளால், சதுப்பு நிலங்களின் எண்ணிக்கையும் 1ல் இருந்து 20ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

  • 60 மில்லியன் டாலர் மதிப்பில், அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியம்’ (Endangered Species Conservation Fund) தொடங்கினார்.

  • வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் காரணமாக உயர்ந்து வரும் நகர்ப்புற வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களில் ஒன்றான, குளிரும் கூரை (Cool Roof Project) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது தற்போது சுமார் 200 பொது பசுமை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Supriya Sahu

ஐநாவின் விருதும், பாராட்டும்

சுப்ரியாவின் இந்த நடவடிக்கைகள் மூலம், லட்சக்கணக்கான பசுமை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், 12 மில்லியன் மக்களுக்குப் சுற்றுச்சூழல் சார்ந்த பாதுகாப்பை மேம்படுத்தப் பட்டிருப்பதாகவும். ஐநா பாராட்டியுள்ளது.

அதோடு, இயற்கைப் பாதுகாப்பில் தொடர்ந்து சுப்ரியா காட்டி வரும் அக்கறை மற்றும் செயல்பாடுகளை கௌரவிக்கும் விதமாக, 'உத்வேகம் மற்றும் செயல்' (Inspiration and Action) என்ற பிரிவின் கீழ், ஐநா சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருதான, ’பூமியின் சாதனையாளர்கள் 2025’ (Champions of the Earth 2025) விருதை ஐநா வழங்கியுள்ளது. விருதை பெற்றுக்கொண்டு பேசிய சுப்ரியா,

“இந்தக் கணத்தில் தமிழ்நாடு அரசிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும். பின்வரும் திருக்குறளை இங்குக் கூற விரும்புகிறேன். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’. இதன் பொருளாவது, ‘கிடைத்தவற்றைப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு, பிற உயிர்களையும் காப்பாற்றுவது, அறங்களில் தலையாய அறமாகும்,” என பேசினார்.
Supriya Sahu

முதலமைச்சர் பாராட்டு

2005ம் ஆண்டு முதல், 20 ஆண்டுகளாக, சுற்றுசூழலுக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு, இந்த விருதை ஐநா வழங்கி வருகிறது.

இந்தாண்டு காலநிலை மாற்றம், உயிரின பன்மை இழப்பு, மாசு மற்றும் கழிவு மேலாண்மை என முன்று உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்காக, சுப்ரியா உட்பட ஐந்து பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐநாவின் இந்த உயரிய விருது பெற்ற சுப்ரியாவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூகவலைதளப் பக்கங்களிலும் சுப்ரியாவிற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்த விருது மூலம் ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தில் இந்தியா சார்பில் விருது வென்றுள்ள முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையையும் சுப்ரியா சாஹு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News :
facebook twitter