விண்வெளி நுட்ப ஸ்டார்ட் அப் அக்னிகுல் காஸ்மோஸ் மற்றும் மின் போக்குவரத்து ஸ்டார்ட் அப் Raptee Energy ஆகியவற்றில், டிட்கோ (TIDCO) ’ஸ்டார்ட் அப் முதலீடு கொள்கை 2025’ கீழ் தலா ரூ.25 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு தொழில் வளச்சிக்கழகம், டிட்கோவின் இயக்குனர் குழு அனுமதி அளித்துள்ளது.
இந்த கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் முதலீடாக இது அமைகிறது மற்றும் மாநிலத்தில் உருவாகும் ஆழ்நுட்ப, மேம்பட்ட உற்பத்தி ஸ்டார்ட் அப்’களை நேரடியாக ஆதரிக்கும் மாநில அரசின் நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் சூழலை வலுவாக்குவதற்காக தொழில்கள் துறை முன்னெடுக்கும் முயற்சியின் அடையாளமாகவும் இந்த முதலீடு அமைகிறது. அதிக வளர்ச்சி வாய்ப்பு உள்ள ஸ்டார்ட் அப்’களில் முதலீடு செய்யும் வகையில், டிட்கோ முதலீடு முடிவிலும் கடந்த ஓராண்டில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
TIDCO முதலீட்டு ஆவணத்தை பெறும் Agnikul நிறுவனர்கள்
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவற்றின் முக்கிய கட்டங்களில் ஆதரவு அளித்து ஊக்குவிக்க மாநில அரசுக்கு இந்த முடிவு உதவுகிறது. தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலீடு அனுமதி கடிதங்களை, ரேப்டீ எனர்ஜி இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.தினேஷ் அர்ஜுன் மற்றும் அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர், சி.இ.ஓ.ஸ்ரீனாத் ரவிசந்திரனிடம் வழங்கினார்.
”2024 முதல், தொழில்கள் துறையில் டிட்கோவின் பாத்திரத்தை மறுகற்பனை செய்ய முயன்று வருகிறோம். தமிழ்நாட்டை பிராடக்ட் நாடாக மாற்றுவது முதல்வரின் நோக்கமாகவும், இரண்டு ஆண்டுகளாக என் தனிப்பட்ட இலக்காகவும் இருக்கிறது. இந்த இலக்கை நோக்கி, முதல் படியாக டிட்கோவை வென்சர் கேடலிஸ்ட் என மறுபிராண்ட் செய்துள்ளோம்,” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
இந்த முதலீடு மூலம் டிட்கோ பயணத்தில் புதிய அத்தியாத்தை துவக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.
”ஸ்டார்ட் அப் முதலீடு கொள்கையின் கீழ், வளர்ச்சி வாய்ப்பு துறைகளில் தகுதி வாய்ந்த ஸ்டார்ட் அப்’களில் ரூ.25 கோடி வரை டிட்கோ முதலீடு செய்ய அதிகாரம் பெற்றுள்ளது,” என்று தொழில் துறை செயலர் அருண் ராய் கூறினார்.
TIDCO முதலீட்டு ஆவணத்தை பெறும் Raptee நிறுவனர்
”கடந்த ஆண்டு தையூர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்கு வருகை தந்தபோது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாட்டில் இருந்து உலகிற்காக உருவாக்கி வரும் எங்கள் நிறுவன நோக்கத்தையும், செயல்பாட்டையும் விளக்குவதற்கு வாய்ப்பு அளித்தார். இப்போது டிட்கோவில் இருந்து முதலீடு கிடைத்துள்ளது,” என்று அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர், சி.இ.ஓ.ஸ்ரீனாத் ரவிசந்திரன் கூறினார்.
”டிட்கோவை நேரடி முதலீட்டாளராக பெற்றிருப்பது, நாட்டில் எந்த ஒரு மாநிலத்திற்கும் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இது எங்கள் நிறுவனத்திற்கு உலக அளவில் செயல்படும் ஆதரவை அளிக்கிறது,” என ரேப்டீ எனர்ஜி இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.தினேஷ் அர்ஜுன்.
Edited by Induja Raghunathan