இந்தியாவின் இரண்டாம் அடுக்கு நகரங்களில் வேகமாக உருவாகும் ஸ்டார்ட் அப் அலை - காரணங்கள் என்ன?

03:44 PM Apr 27, 2026 | cyber simman

பல ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு ஸ்டார்ட் அப்பை உருவாக்குதல் என்றால், பெங்களூரு, மும்பை அல்லது தில்லி போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டும், என கருத்து நிலவுகிறது. இதில் மெல்ல மாற்றம் நிகழ்கிறது.

இப்போது நிறுவனர்கள் ஜெய்பூர், இந்தூர், கோவை மற்றும் கொச்சி உள்ளிட்ட சிறு நகரங்களில் இருந்து ஸ்டார்ட் அப்களை உருவாக்கி வருகின்றனர். குறைந்த செலவு மற்றும் சொந்த ஊருக்கு திரும்பும் திறன் மிக்கவர்களால், தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறிய குழுக்களோடு இயங்குவது சாத்தியமாகிறது.

ஆனால், மெட்ரோ நகரங்களுக்கு வெளியே நிறுவனங்களை உருவாக்குவதில் சவால்கள் இல்லாமல் இல்லை. நிதி பெறுவது, திறமையாளர்களை ஈர்ப்பது மற்றும் ஸ்டார்ட் அப் உள்கட்டமைப்பு ஆகியவை பல சிறிய நகரங்களில் சிக்கலாக உள்ளன.

இருப்பினும், இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பிஐபி தகவல்படி, அரசு அங்கீகரித்த ஸ்டார்ட் அப்களில் 52 சதவீதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்தவை என்பது, இந்திய ஸ்டார்ட் அப் சூழல் என்பது இனியும் மெட்ரோ நிகழ்வு அல்ல என்பதை உணர்த்துகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்:

குறைந்த செலவு

மெட்ரோ நகரங்கள் அல்லாத இடத்தில் ஸ்டார்ட் அப்பை உருவாக்குவதில் உள்ள மிகப்பெரிய அணுகூலம் செலவு குறைந்த தன்மை தான். இரண்டாம் அடுக்கு நகரங்களில் செயல்முறை செலவுகள் குறைவு. ரியல் எஸ்டேட் வாடகை 50 சதவீதம் மலிவு. திறமையாளர்களை நியமிக்கும் செலவும் 30 சதவீதம் வரை குறைவு.

ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு இந்த சேமிப்பு முக்கியமானது. அலுவலக செலவு குறைவு, ஊதியம் குறைவு போன்றவை ஸ்டார்ட் அப்களுக்கு நிதி பயணத்தில் உதவுகிறது. உள்கட்டமைப்பில் செலவிடுவதற்கு பதிலாக நிறுவனர்கள் சேவை உருவாக்கம், வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம்.

இந்தூர், கோவை போன்ற நகரங்கள் தங்கள் இருப்பிடம் அருகே தங்க விரும்பும் திறமையாளர்களை ஈர்க்கின்றன. இது ஸ்டார்ட் அப்களுக்கான திறமை சூழலை உருவாக்குகிறது. மெட்ரோ அளவு ஊதியம் வழங்கும் தேவையும் இல்லை. அரசும் இந்த மாற்றத்தை ஆதரிக்கிறது. ஜெய்பூரின் ஐ-ஸ்டார்ட் போன்ற திட்டங்கள் நிதி, வழிகாட்டல், வரிச்சலுகை போன்றவை அளித்து ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கின்றன.

புதிய சந்தை வாய்ப்பு

மேலும், இரண்டாம் அடுக்கு நகரங்கள், உண்மையான பிரச்சனைகளை கண்டறியும் வாய்ப்பை அளிக்கின்றன. மெட்ரோ ஸ்டார்ட் அப்கள் பெரும்பாலும் நகர்புற வாடிக்கையாளர்களில் கவனம் செலுத்துகின்றன. இவர்கள் தங்களுக்கான டிஜிட்டல் சேவைகளை ஏற்கனவே பெற்றுள்ளனர். மாறாக சிறிய நகரங்கள் இன்னமும் கல்வி, லாஜிஸ்டிக்ஸ், சுகாதார வசதி உள்ளிட்டவற்றில் சவால்களை எதிர்கொண்டுள்ளன.

இந்த சூழலில் உருவாகும் ஸ்டார்ட் அப்'கள் பிராந்திய அளவில் தேவையான தீர்வுகளை வழங்குகின்றன. இவை உள்ளூரில் துவங்கப்பட்டாலும், தேசிய அளவில் விரிவாகக் கூடியவை. இந்தியாவின் அடுத்த பில்லியன் பயனாளிகள் மெட்ரோக்களுக்கு வெளியே வசிக்கின்றனர். இந்த நுகர்வோர் பேசும் சவால்கள் தொடர்பாக இரண்டாம் அடுக்கு நகரங்களில் நிறுவனர்கள் நல்ல புரிதல் கொண்டுள்ளனர். இது அனுமானத்தை அல்லாமல் நிஜ தேவை அடிப்படையான வர்த்தகத்தை உருவாக்க உதவுகிறது.

ஸ்டார்ட் அப் வழிகாட்டிகள்

பல நிறுவனங்கள் சிறு நகரங்கள் சார்ந்த புதுமையாக்கத்திற்கு வழிகாட்டுகின்றன. உதாரணமாக, சிட்டிமால், சிறிய நகரங்களுக்கான மளிகை டெலிவரி சேவையை உருவாக்கியுள்ளது. நிறுவனம் தனது விரிவாக்கத்திற்காக 47 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இதன் சராசரி ஆர்டர் மதிப்பு ரூ.450- 500 ஆக உள்ளது.

இதே போல, ட்ருமெட்ஸ் நிறுவனம், செலவு குறைந்த மருத்துவ வசதி அணுகல் வழங்க 85 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் மெட்ரோ ஸ்டார்ட் அப்கள் கவனம் செலுத்தாத பிரச்சனைகளில் கவனம் செலுத்துகின்றன. அதிஉள்ளூர் சவால்களை தீர்ப்பதன் மூலம் இவை விநியோக சாதகம் பெறுகின்றன. பெரிய நகர ஸ்டார்ட் அப்கள் இதை பிரதியெடுப்பது கடினம்.

மெட்ரோக்களுக்கு வெளியே உருவாக்குவதில் மறைந்திருக்கும் சவால்கள்

வாய்ப்புகளை மீறி, இரண்டாம் அடுக்கு நகரங்களில் நிறுவனர்கள் பலவித சவால்களை எதிர்கொள்கின்றனர். முதலீட்டாளர்கள் பெரிய நகரங்களில் குவிந்திருப்பதால் நிதி திரட்டுவது கடினமாகிறது. எனவே, நிறுவனர்கள் முதலீட்டாளர்களுக்கான வலைப்பின்னலை உருவாக்க தடுமாறுகின்றனர். இல்லை எனில் நகரங்கள் நோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.

வரலாற்று நோக்கில் 20 சதவீத இந்திய ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உருவாகியுள்ளன. இந்த நிறுவனங்கள் சிறிய அளவே நிதி பெற்றுள்ளன. திறமையாளர்களை நியமிப்பதும் சிக்கலாகலாம். உள்ளூர் வழிகாட்டிகள் இருந்தாலும், ஸ்டார்ட் அப்கள் திறமையாளர்களை கண்டறிய கஷ்டப்பட வேண்டியுள்ளது. பல நிறுவனர்கள் தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது அல்லது அனுபவசாலிகளுக்கு அதிக ஊதியம் தர வேண்டும்.

உள்கட்டமைப்பு சவால்களும் தடைகளாகலாம். போக்குவரத்து வசதி, இணைய இணைப்புகள், உடன் பணியாற்றும் இடங்கள் குறைவு போன்றவை சிக்கல். லாஜிஸ்டிக்ஸ் சவால்கள், உற்பத்தி, இகாமர்ஸ் சார்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு கூடுதல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

வழிகாட்டுதல் மற்றும் இன்குபேஷன் ஆதரவும் குறைவு. மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிட்டால், சிறிய நகரங்களில் ஸ்டார்ட் அப் திட்டங்கள், முதலீட்டாளர்கள் வலைப்பின்னல் குறைவு.

சூழலில் மாற்றம்

இரண்டாம் அடுக்கு நகரங்களில் வளர்ச்சி முக்கிய போக்காக அமைகிறது. இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்’களில் பாதிக்கு மேல் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்குகளில் உருவானவை. டிஜிட்டல் இணைப்பு மேம்படும் நிலையில், சிறிய நகரங்கள் ஈர்க்கின்றன.

குறைந்த செலவு நிறுவனர்களுக்கான நிதி இடரை குறைக்கிறது. அணுகப்படாத சந்தை நல்ல வாய்ப்பாக அமைகிறது. முதலீட்டாளர்களுக்கு இந்த மாற்றம் இந்தியாவின் அடுத்த அலை நுகர்வோரை அடைய உதவுகிறது.

எதிர்காலம்

இந்திய ஸ்டார்ட் அப் கதை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. மெட்ரோகள் முக்கிய பங்கு வகித்தாலும், அடுத்த தலைமுறை நிறுவனங்கள் சிறிய நகரங்களில் இருந்து உருவாகின்றன. பல விதங்களில் இந்தியாவின் தொழில்முனைவு எதிர்காலம் பெரிய நகரங்கள் சார்ந்து இல்லாமல் போகலாம். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாத பகுதிகளில் இதை எதிர்பார்க்கலாம்.

தொகுப்பு: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan