+

தமிழக அரசு அறிவித்துள்ள ‘சுற்றுலா புதுமை ஹேக்கத்தான் 2025’ - விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான நிலையான மற்றும் உள்ளடக்கிய சுற்றுலா சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், சுற்றுலாத்தள ஹேக்கத்தானை 2025ஐ அறிவித்துள்ளது ஸ்டார்ட் அப் தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் தொழில்முனைவோரையும், புத்தாக்கத்தையும் ஊக்குவிக்க தமிழக அரசால் உருவாக்கப்பட்ட திட்டமான, ஸ்டார்ட் அப் டிஎன் (StartupTN), தமிழ்நாடு சுற்றுலாத்துறை (Tamil Nadu Tourism) மற்றும் ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance Tamil Nadu) ஆகியவற்றுடன் இணைந்து, சுற்றுலாத்தள ஹேக்கத்தானை 2025ஐ அறிவித்துள்ளது.

உலக நாடுகள் தமிழ்நாட்டில் எப்படியான அனுபவங்களை பெற முடியும் என்பதை கான்செப்ட்டாக வைத்து இந்த ஹேக்கத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, சுற்றுலாத்தள கண்டுபிடிப்பாளர்களுக்கு ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் ஸ்மார்ட் பயணம் வரை, என பல பிரிவுகளின் கீழ், இந்த ஹேக்கத்தானில் கலந்து கொள்ளலாம். இதில் ஸ்டார்ட் அப்கள், மாணவர் குழுக்கள், அடுத்த தலைமுறைக்கு தமிழ்நாட்டின் சுற்றுலாத் தளங்களைக் கொண்டு சேர்க்கும் கண்டுபிடிப்பாளர்கள், புதுமை விரும்பிகள் மற்றும் சுற்றுலா வல்லுநர்கள் போன்றோர் கலந்து கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

hackathon


ஹேக்கத்தானின் நோக்கம்

இந்தியாவின் மிகவும் துடிப்பான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தமிழ்நாடு. கடந்த 2023ம் ஆண்டில் 286 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், சுமார் 1.17 மில்லியன் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கும் சிறந்த சுற்றுலா அனுபவங்களைக் கொடுத்துள்ளது.

மேலும், இது போன்ற இனிய அனுபவங்களை வரும் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தரும் வகையில், ’தமிழ்நாடு சுற்றுலா புதுமை ஹேக்கத்தான் 2025’ என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படைப்பாளிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்களை ஒன்றிணைத்து அடுத்த தலைமுறைக்கு சுற்றுலா தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் கிராமம் தோறும் புத்தொழில் / டான்சீட் விதை நிதியுதவிக்கான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது. இது அதிக திறன் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் யோசனைகளை சந்தைக்கு கொண்டு வரவும் உதவுகிறது.

ஹேக்கத்தானின் முக்கிய இலக்குகள்:

  • சுற்றுலாவை மையமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஊக்குவித்தல்
  • தொழில்நுட்பம் மற்றும் புதிய வணிக மாதிரிகளைப் பயன்படுத்தி உண்மையான துறை சார்ந்த சவால்களைத் தீர்ப்பது
  • மாணவர்கள் மற்றும் தொழில்முறை திறமையாளர்களை, சுற்றுலா மற்றும் கலாச்சார சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஈர்ப்பது
  • கிராமம் தோறும் புத்தொழில் / டான்சீட் மூலம் இதில் தேர்வாகும் சிறந்த அணிகள் ₹10 லட்சம் வரை விதை மானியங்களைப் பெறலாம்.
  • அரசு, தொழில் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு இடையேயான கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல்.

ஹேக்கத்தானின் கருப்பொருள்கள்:

  • சமையல் சுற்றுலா
  • வேளாண் சுற்றுலா & கிராமப்புற அனுபவங்கள்
  • பாரம்பரியம் மற்றும் கலாச்சார சுற்றுலா
  • சுற்றுச்சூழல் மற்றும் சாகச சுற்றுலா
  • ஆரோக்கியம் மற்றும் மருத்துவ சுற்றுலா
  • டிஜிட்டல் சுற்றுலா
  • சுற்றுலா தொடர்பான பிற கண்டுபிடிப்புகள்

பங்கேற்பாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

இந்த ஹேக்கத்தானில் கலந்து கொள்பவர்களுக்கு, தொழில், கொள்கை மற்றும் முதலீட்டு நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவுடன் முன்னோடியாகச் செயல்படவும், வழிகாட்டுதல் தமிழ்நாடு மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு மூலம் ஆதரவை பெறவும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஹேக்கத்தானில் கலந்து கொள்ள form.startuptn.in/TIH என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு கடைசித் தேதி இம்மாதம் 31ம் தேதி (டிசம்பர் 31, 2025) ஆகும்.

facebook twitter