தமிழக அரசியல் களம் இன்று ஒரு மிகப் பெரிய வரலாற்று மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக தமிழகத்தை ஆண்டு வந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றைத் தனது முதல் தேர்தல் களத்திலேயே பின்னுக்குத் தள்ளி, ஆட்சிக் கட்டிலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.
தொழில் துறையில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு பில்லியன் டாலர் மதிப்பைப் பெற்றால் அதனை ‘யூனிகார்ன்’ என்பார்கள். இந்திய அரசியல் வரைபடத்தில், முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம், ஒரு நிஜமான ‘அரசியல் யுனிகார்ன்’ ஆக உருவெடுத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக கூட்டணி 73 இடங்களையும், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ளன.
விஜய் வெற்றி சொல்வது என்ன?
தமிழ்த் திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்குப் பிறகு, ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய தாக்கத்தை முதல் தேர்தலிலேயே ஏற்படுத்துவது இந்தியாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய வரலாற்றில் சில அரசியல் ஸ்டார்ட்அப்'கள் மட்டுமே தங்களது முதல் முயற்சியிலேயே ‘யூனிகார்ன்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளன. 1983-ல் ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் என்.டி.ராமாராவ் 'தெலுங்கு தேசம் கட்சி'யை தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளேயே 201 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தார். அதேபோல், 1985-ல் அசாம் கண பரிஷத் கட்சி உருவான உடனேயே சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
2013-ல் 'ஆம் ஆத்மி கட்சி' தனது முதல் தேர்தலிலேயே டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், எல்லா ஸ்டார்ட்அப்'களும் வெற்றி பெறுவதில்லை. கடந்த ஆண்டு பிஹாரில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ் கட்சி' 238 இடங்களில் போட்டியிட்டும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் மண்ணைக் கவ்வியது.
முன்னதாக, தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' 2021 தேர்தலில் ஓர் இடத்தைக் கூடப் பிடிக்க முடியாமல் போனது. உத்தரப் பிரதேசத்தில் நிஷாத் கட்சி, பீஸ் பார்ட்டி மற்றும் பிஹாரில் புஷ்பம் பிரியா சவுத்ரியின் 'புளூரல்ஸ் கட்சி' போன்றவை ஒரு சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு பெற்று, காலப்போக்கில் மறைந்து போயின. இத்தகைய சூழலில், விஜய்யின் தவெக பெற்றுள்ள வெற்றி ஒரு மிகப் பெரிய விதிவிலக்கு.
விஜய் எனும் பிராண்ட்
விஜய்யின் இந்த வெற்றி என்பது திடீரென வானத்திலிருந்து குதித்தது அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக விஜய் தன் பெயரை ஒரு பிராண்ட் ஆக செதுக்கிக் கொண்ட விதம் மிகவும் முக்கியமானது.
‘நாளைய தீர்ப்பு’ மூலம் அறிமுகமான விஜய், அதன் பிறகு நடித்த ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’ போன்ற படங்களின் மூலம் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறினார். அதன் பிறகு, ‘பகவதி’, ‘திருமலை’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ போன்ற படங்கள் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக மக்கள் மனதில் முன்னிறுத்தின.
இந்தப் படங்கள் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானபோது, 90-களுக்கு பின்னால் பிறந்த தலைமுறை விஜய்யை தங்கள் ஆதர்ச நாயகனாக மனதில் உருவப்படுத்தி கொண்டது.
மெல்ல மெல்லத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தனது ரசிகர் மன்றங்களை விரிவுபடுத்தினார். தனது ரசிகர் மன்றத்தை ’விஜய் மக்கள் இயக்கம்’ என்று மாற்றி ரத்த தானம், ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, விலையில்லா விருந்தகம் எனச் சமூகப் பணிகளைத் தொடங்கினார்.
கடந்த 30 ஆண்டுகளில் விஜய் ஒரு கமர்ஷியல் பிராண்டாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது ஒவ்வொரு படமும் வசூலில் சாதனை படைத்தது ஒருபுறம் இருந்தாலும், திரைக்கு வெளியேயும் தன்னை ஓர் ஆளுமையாக முன்னிறுத்தினார். ‘மெர்சல்’, ‘சர்கார்’, ‘கத்தி’ போன்ற படங்களில் அவர் பேசிய அரசியல் வசனங்கள் யாவும் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகின.
விஜய்யின் வெற்றிக்கு மிக முக்கியமான உந்து சக்தியாக இருந்தது ஜென்ஸீ (GENZ) என்று அழைக்கப்படும் இன்றைய இளம் தலைமுறை.
இதற்கு அவர் சமூக வலைதளங்களைக் கையாண்ட விதம் பாரம்பரிய கட்சிகளுக்கு ஒரு கேஸ் ஸ்டடி போன்றது.
அல்காரிதமே ஆயுதம்
இன்றைய இளைஞர்கள் சுத்தத் தமிழில், எதுகை மோனையுடன் கூடிய நீண்ட உரைகளை விரும்புவதில்லை. அதை 30 வினாடி ரீல்ஸ் வீடியோக்களுக்கு பழகிப்போன தலைமுறைக்கு விஜய்யின் ஸ்டைலான போட்டோக்கள், அவரது உரைகளின் சிறு துண்டுகள் மற்றும் “என் நெஞ்சில் குடியிருக்கும்...” என்ற முழக்கம் ஆகியவையே போதுமானதாக இருக்கிறது. சமூக வலைதளங்களின் அல்காரிதம்கள் விஜய்க்கு சாதகமாகச் செயல்பட்டன.
ஒரு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் எப்படி தனது இலக்கு வாடிக்கையாளர்களைத் தரவுகள் மூலம் சென்றடைகிறதோ, அதேபோல் விஜய் தனது ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட்டார். முதல் முறை வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் மொபைல் திரைகளில் விஜய் தொடர்பான காணொளிகளே அதிகம் தோன்றுமாறு டிஜிட்டல் வியூகங்கள் வகுக்கப்பட்டன.
விஜய்யின் ஐடி விங் மற்றும் வெர்ச்சுவல் வாரியர்கள் ஒவ்வொரு வாக்காளரிடமும் விஜய்யின் கொள்கைகளைச் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு சேர்த்தனர்.
அதேபோல், விசில் சின்னத்தை வசப்படுத்தி, அதனை மிகக் குறுகிய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரிடமும் மிக எளிதில் கொண்டு சேர்ந்து பதிய வைக்க விஜய் கையாண்ட உத்திகள் அனைத்துமே ஒரு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது பிராண்டை தாங்கள் டார்கெட் செய்யும் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பின்பற்ற வேண்டிய வியூகங்களுக்கு ஒப்பானவை.
தற்சார்பு ஸ்டார்ட்அப்
இந்தியாவில் தற்போது பாஜக, காங்கிரஸ், பிஎஸ்பி, சிபிஎம், என்பிபி மற்றும் ஆம் ஆத்மி என ஆறு தேசியக் கட்சிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு கொள்கை பின்னணியைக் கொண்டவை. காங்கிரஸ் சுதந்திரப் போராட்டத்திலிருந்து பிறந்தது; பாஜக ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் மற்றும் ராம ஜென்மபூமி இயக்கத்தால் வளர்ந்தது; பிஎஸ்பி ஒரு சமூகக் குழுவின் உரிமைகளுக்காக உருவானது; ஆம் ஆத்மி ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து பிறந்தது.
அதேபோல், பிராந்தியக் கட்சிகளான திமுக இந்தி எதிர்ப்பில் உருவானது, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் அல்லது ஏஐஎம்ஐஎம் (ஓவைசி) போன்றவை ஒரு பெரிய கட்சியில் இருந்து பிரிந்து வந்த பின்னணியைக் கொண்டவை.
தமிழக வெற்றி கழகம் எந்தவொரு பெரிய கட்சியிலிருந்தும் பிரியாமல், விஜய்யின் தனிப்பட்ட நற்பெயர் மற்றும் அவர் மீதான மக்களின் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஒரு ‘தற்சார்பு ஸ்டார்ட்அப்’ ஆகும். இதுதான் இந்திய அரசியல் வரைபடத்தில் விஜய்யைத் தனித்துக் காட்டுகிறது.
தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் மறைவிற்குப் பிறகு ஒரு பெரிய அரசியல் வெற்றிடம் நிலவியது. மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மாற்றாக ஒரு புதிய முகம் தேடிய மக்களுக்கு விஜய் ஒரு சரியான தேர்வாகத் தெரிந்தார்.
விஜய்யின் கட்சி ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சாராமல், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தளமாகத் தன்னை முன்னிறுத்தியது. இதுவே திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகளில் மிகப் பெரிய ஓட்டையைப் போட உதவியது.
சோதனைகளும் சாதனைகளும்
தமிழக வெற்றி கழகத்தின் இந்த பிளாக்பஸ்டர் அறிமுகம், அரசியல் ஸ்டார்ட்அப் தொடங்கத் தயங்கும் பலருக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. 30 ஆண்டுகால பிராண்ட் கட்டமைப்பு, டிஜிட்டல் அல்காரிதம்களை சரியாகப் பயன்படுத்திய விதம் உள்ளிட்டவை விஜய்யை இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
இனி வரும் காலங்களில் விஜய்யின் இந்த வெற்றி ஃபார்முலாவை மற்ற மாநிலங்களில் உள்ளவர்களும், ஏன் தமிழ்நாட்டிலேயே உள்ளவர்களும் கூட பின்பற்ற முற்படலாம். ஒரு நடிகராகத் திரையுலகில் மகுடம் சூடிய விஜய், இப்போது ஒர் அரசியல் யூனிகார்ன் அமைப்பின் தலைவராக தமிழகத்தை ஆளத் தயாராகிவிட்டார்.
ஆனால், தற்போது தவெக பெற்றுள்ள இடங்கள் ஒரு வரலாற்று சாதனையாக இருந்தாலும், ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் நீடிக்கவே செய்கின்றன. ஒரு புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் சந்தையில் நுழையும்போது நிலவும் நிர்ப்பந்தங்கள் போலவே, விஜய்க்கும் மெஜாரிட்டிக்கான எண்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் இழுபறிகள் பெரும் சவாலாக இருக்கும்.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஒரு நிலையற்ற அரசு அமைந்தால், அது நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கும் என ஸ்ரீதர் வேம்பு போன்ற தொழில்முனைவோர் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தும் திராவிடக் கட்சிகள், இந்த புதிய வரவை முடக்கக் கூட்டாகச் செயல்படவும் வாய்ப்புண்டு.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பல ஆண்டுகள் சந்தையில் உள்ள ஜாம்பவான் ப்ராண்டுகளுக்கு இடையே ஒரு ஸ்டார்ட்-அப் அதே துறையில் நுழைந்தால் சந்திக்கும் சவால்களை தான் தவெக மற்றும் விஜய் சந்தித்து கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு வெற்றிகரமான சிஇஓ நெருக்கடிக் காலத்தில் எடுக்கும் துணிச்சலான முடிவுகளைப் போல, விஜய் தனது அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிடுவாரா என பார்ப்போம்.
விஜய் இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளத் தனது தனித்துவமான பிராண்ட் மற்றும் ஊழலற்ற அரசியல் என்ற ஆயுதங்களையே பயன்படுத்துவார். ஒருவேளை ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், மக்களிடம் மீண்டும் செல்வோம் என்ற துணிச்சலான நிலைப்பாட்டை அவர் எடுக்கக்கூடும்.
ஒருவேளை தேவையான சீட் கிடைக்காமல் மறு தேர்தல் நடக்கும் சூழல் உண்டானால், தவெக அதில் ‘சூப்பர் மெஜாரிட்டி’ பெறும் என்ற நம்பிக்கை அவரது தொண்டர்களிடையே உள்ளது.
அல்காரிதம்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர் படை மற்றும் முப்பது ஆண்டுகாலமாக அவர் கட்டமைத்த நற்பெயர் ஆகியவை, இந்த அரசியல் முட்டுக்கட்டையை உடைத்து அவரை ஒரு நிலையான ஆட்சியாளராக மாற்றுமா? என்று அரசியல் விமர்சகர்கள் முதல் ஆளுமைகள் வரை பலரும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஒரு பிளாக்பஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் போலவே, இந்தச் சவால்களையும் தாண்டி விஜய் ஒரு புதிய அரசியல் முன்னுதாரணத்தைப் படைப்பாரா? பொருந்திருந்து பார்ப்போம்...
Edited by Induja Raghunathan