+

பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை; பொய்க்கணக்கு காட்டினால் 100% அபராதம்!

2026-2027ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விதிப்பில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

2026-2027ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் சில முக்கிய நடைமுறை மாற்றங்களை நிர்மலா சீதாராமன் அறித்துள்ளார். இதன்மூலம் மக்கள் சில வருமான வரிச் சலுகைகளைப் பெற இயலும். அவை என்னென்ன என்பது குறித்து இந்தச் செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

Union Budget 2026

தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் என்றாலே சம்பளம் வாங்குவோர் பெரிதும் எதிர்பார்ப்பது தனிநபர் வருமான வரி தொடர்பான சலுகை அறிவிப்புகளைத்தான்.

கடந்தாண்டு பட்ஜெட்டில் அதிரடியாக வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. எனவே, இந்தாண்டு மத்திய பட்ஜெட்டிலும் அதைவிட கூடுதலான சலுகைகள் எதுவும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

ஆனால், அவர்களது எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்குவது போல், இந்த பட்ஜெட் தாக்கலில் வருமான வரி தொடர்பான சலுகைகள் எதையும் கூடுதலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவில்லை. ஏற்கனவே அமலில் உள்ள நடைமுறையின்படியே, வருமான வரி விதிப்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி,

  • 4 லட்ச ரூபாய் வருமானம் வரை எந்தவித வரியும் இல்லை
  • 4 முதல் 8 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள்- 5 சதவீதம்
  • 8 முதல் 12 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் - 10 சதவீதம்
  • 12 முதல் 16 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள்- 15 சதவீதம்
  • 16 முதல் 20 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் - 20 சதவீதம்
  • 20 முதல் 24 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் - 25 சதவீதம்
  • 24 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் - 30 சதவீதம் என வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

Income Tax

பொய்க்கணக்கு காட்டினால் 100% அபராதம்

வருமான வரி தாக்கலில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை என்றாலும், பொய்க் கணக்கு காட்டினால், 100% அபராதம் விதிக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, விரைவில் எளிதான வருமான வரி தாக்கல் படிவம் அறிமுகம் செய்யப்படும் எனவும், வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட புதிய வருமான வரிச்சட்டம், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சிறுவரி செலுத்துவோர் நடைமுறை சிக்கல் தீர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வருமான வரிக் கணக்குகளை மறுஆய்வு செய்து, திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, டிசம்பர் 31 முதல் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி குற்றங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை

புதிய வரி முறைக்கு மாற வருமான வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும், என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ITR-1 மற்றும் ITR-2 வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு ஜூலை 31ம் தேதியும், தணிக்கை தேவைப்படாத. வரித்தாக்கல் செய்ய தேவையில்லாத வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஆகஸ்ட் 31ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தொடர்பான சிறு குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லையென்ற போதிலும், வருமான வரி சார்ந்த குற்றங்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிசிஎஸ் வரி 3% குறைப்பு

வெளிநாட்டில் வசிப்போருக்கு பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படும் டிசிஎஸ் (TCS) வரி இந்த பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 5% ஆக இருந்த இந்த வரி, தற்போது 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு 3%ம் பணம் மிச்சமாகும். இதேபோல், வெளிநாட்டு சுற்றுலா செல்பவர்களுக்கும் இந்த 2% வரி விதிப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளில் சிக்கி நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெறுபவர்களுக்கும் வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்தப் பணத்திற்கு வரும் வட்டிக்கு டிசிஎஸ் வரி பிடிக்கும் முறை அமலில் இருந்தது. இனி இந்தத் தொகைக்கு வரி பிடித்தம் கிடையாது, என அறிவிக்கப்பட்டுள்ளது.  

facebook twitter